கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்
இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”
திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.
1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக...
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.
மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)... மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்... சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.
தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”
“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்...”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.
மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்... எந்த விதத்திலும் சாத்தியமில்லை...! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.
கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்...” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்...?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக... நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.
மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.
கல் யானை... “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.
கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.
சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…/
சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.
மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது...?
1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).
கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து... காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து... செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”