ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2023

அலை பாய்ந்து கொண்டே இருக்கும் “நம்முடைய மனம்”

மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.

மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.

அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.

அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.

அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.

வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.

விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.

உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.

துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”

நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.

ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.

புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?

ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?

வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).

இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.