ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2023

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய "கைம்மாறு"

குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால்... எனக்கு எல்லா உதவியும் செய்தார்… திடீரென்று போய்விட்டாரே...! என்று ரொம்பப் பாசத்துடன் எண்ணுகிறோம்.

என்னைக் காப்பாற்றினார்... எவ்வளவோ பணம் கொடுத்தார்... என்றெல்லாம் சொல்கின்றோம். சாகப் போகும் போது எனக்கு எவ்வளவு உதவி செய்தார்...? அவர் எத்தனையோ நேரத்தில் என்னை பக்குவப்படுத்தினார் இப்படி விட்டு விட்டுப் போய்விட்டாரே...! என்று வேதனையாக எண்ணுகிறோம்.

அந்த வேதனை கலந்த உணர்வுடன் எண்ணும் போது அவர் உடலில் விளைந்தது நமக்குள் உண்டு... உதவி செய்ததும் உண்டு…! வேதனைப்பட்டதும் உண்டு.

எல்லோருக்கும் உதவி செய்தார் என்று சொன்னாலும்...
1.கடைசியில் அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் வாங்கி
2.மூட்டையைக் கட்டி நமக்குள்ளும் நோயாக மாற்றுகின்றோம்.

உடலுடன் இருக்கும் போது நன்மை செய்தார். எல்லோருடைய உணர்வையும் கேட்டு அந்த உடலில் நோயாக மாறியது… உடலை விட்டுப் பிரிகின்றார்.

பிரிந்த பின்... எனக்குப் பக்குவம் செய்தாயே இப்படி எல்லாம் விட்டு விட்டுச் செல்கின்றாயே…! பார்த்தால் மண்ணிலே விழுந்து புரள்வார்கள். அத்தகைய வேதனை உணர்வுகள் நுகர்ந்து கொண்ட பின் நமக்கும் அந்த நோய் வருகிறது.

அவர் உதவி செய்தார்…. ஆனால் விட்டு விட்டுப் போய்விட்டார்… என்று பாசமாக எண்ணப்படும் போது
1.அந்த ஆன்மாவைச் சும்மா விடுவதும் இல்லை.
2.அந்த ஆன்மாவை இழுத்து என்னுடனே வந்துவிடு... என் கஷ்டத்தை எல்லாம் நீயும் அனுபவி...! என்ற நிலையாகிவிடும்.

ஏப்படி...? அந்த ஆன்மா இங்கே வந்த பிற்பாடு என்ன செய்யும்…?

சில உடல்களில் ஆவிகள் வந்த பின் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கலாம். அதனுடைய உணர்வின் தன்மை உணர்த்தி உடலையும் பாழாக்கி... விஷத்தின் தன்மை இந்த உயிருக்குள் இருக்கும் அணுவிற்குள் சேர்ந்த பின்... அந்த ஆவி இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன ஆகும்…?

அதாவது
1.நீ உதவி செய்தாய் அப்பா
2.நான் (உடலை விட்டுப் பிரிந்த உன்னை) எடுத்துக் கொண்டேன் அப்பா
3.என்னிடம் நீ வந்துவிடப்பா…
4.நான் செத்த பிற்பாடு (இந்த உடலிலிருந்து) நீ போய் விடப்பா...!

மொத்தமாக நம்முடைய வேதனை எல்லாம் சேர்த்து வெளியிலே போன உடனே அந்த ஆன்மா எந்த நிலை ஆகும்…?

புலி மற்ற மிருகங்களை வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது நரி நாய் அவைகளும் வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது பாம்பு விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை அழுங்காமல் எடுத்துக் கொள்கின்றது இவை எல்லாமே நரக வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றன.

அது போல் இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நரக வேதனையை எடுத்தோமோ... என்னை இப்படி எல்லாம் விட்டுவிட்டுச் செல்கின்றாயே...! என்று அந்தக் கடுகடுத்த நிலையில் துன்பத்தை எல்லாம் நினைத்து எண்ணினால்... அந்தத் துன்ப உணர்வுகள் எல்லாம் இங்கு வந்து சேரும்.

மொத்தமாகச் சேர்த்து இந்த உடலிலே எடுத்ததை வளர்த்துக் கொண்டு இந்த உடலை வீழ்த்தி விட்டுப் போய்விட்டு வா...! என்று செய்யும்.

எனக்கு நீ எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாய்... நீ நாயாகப் பிற நரியாகப் பிற... புலியாகப் பிற...! என்று தான் “அவர் உதவி செய்ததற்குக் கைம்மாறாக நாம் செய்ய முடியும்...”.

1.நமக்கு எத்தனை உதவி செய்தார்...?
2.நமக்காக எத்தனை நன்மைகள் செய்தார்...?
3.நம்முடைய கஷ்டங்களை எப்படிக் கேட்டார்…? அந்த உணர்வு அறியாது வந்து எத்தனை வேதனைப்பட்டார்…?
4.நமக்கு உதவி செய்தவர் இனி எந்தக் காலத்திலும் அவர் பிறவி இல்லாத நிலை அடைந்து...
5.”துன்பமே இல்லாத பெரு வாழ்வாக வாழ வேண்டும்” என்று எத்தனை பேர் நீங்கள் எண்ணுகின்றீர்கள்… சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாஸ்திரங்கள் அதைத் தான் கூறுகிறது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்கு நாம் எதை எண்ணி எடுக்க வேண்டும்...?

நோயின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும்
1.அந்த உயிரான்மாவை இங்கிருந்து நாம் உந்தித் தள்ளி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செலுத்தி…
2.உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ்ந்து
3.என்றும் அங்கே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பேரருள் பேரொளியாக வாழ வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

இங்கே உடலில் வாழும் போது எங்களை எப்படி மகிழச் செய்தாயோ அதே போல்
1.என்றென்றும் எங்களை மகிழச் செய்யும் உணர்வாக “ஒளியாக மாறி”
2.எல்லோருக்கும் பேரன்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இப்படி எத்தனை பேர் எண்ணுகின்றோம்…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

நமக்கு உதவி செய்தார் என்று நல்லதை எண்ணுகிறோம். ஆனால் உதவி செய்தாயே… என்னை விட்டு விட்டுப் போகிறாயே…! என்று தான் சொல்கிறோம்.

எங்கே விட்டு விட்டுப் போவது…!

உன்னிடமே வந்து விடுகின்றேன்...! என்ற அந்த நிலையைத்தான் இங்கே உருவாக்குகின்றார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஞானிகள் காட்டிய வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைத் “தனக்குள் இழுக்காதபடி” விண் செலுத்தப் பழக வேண்டும்.