ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2023

தீமையை நீக்கும் எண்ணத்தையே… “கண்கள் வழி” நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்

வீட்டில் பையன் ரொம்ப சேட்டை செய்கிறான்... அவனுக்குப் புத்தி வரட்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் சொல்லும் பொழுது
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கின்றான்.
2.இவன் அடங்கவே மாட்டான் என்று தான் அடுத்தவரிடம் சொல்கின்றோம்

“எப்பொழுது பார்த்தாலும் சேட்டை செய்து கொண்டே இருப்பான்” என்று அவனுடைய உணர்வை எடுத்து அதிகமாக விளைய வைத்துக் கொள்கின்றோம்.

அவனுடைய உணர்வை எடுத்து விளைய வைத்தபின் கண்ணில் பார்க்கின்றோம். அடுத்தாற்போல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “சேட்டைக்காரன்...” என்று தான் அவனை மாற்றுகின்றோம்.

அதே உணர்வை நாம் எடுத்துக் கொண்ட பின் “எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தன்ம் செய்வான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அவன் சும்மா இருந்தால் கூட நாம் மிரட்ட ஆரம்பிப்போம் இத்தகைய மிரட்டல் என்ன செய்யும்...? அங்கே இருப்பதைத்தான் நாம் நமக்குள் சமைத்து விளைவிக்கின்றோம்.

அதே சமயத்தில் நம் நினைவு எல்லாம் எப்படி இருக்கும்...?
1.இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றானே... என்ன செய்வது என்று தெரியவில்லையே
2.அவனுக்கு இப்படி செய்தால் பரவாயில்லையா...! அப்படிச் செய்தால் பரவாயில்லையா...! என்று இந்த கவலை இருக்கும்.

கவலை கலந்த உணர்வுகள் வந்தவுடன் வெறுப்புடன் தான் பையனிடம் பேசுவோம். வெறுப்புடன் சொல்லப்ப்படும் போது
1.இந்த வெறுப்பு அவனுடன் கலந்து அவனுக்குள் உருவான வித்திற்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்
2.அடுத்து அவன் கெடுதல் தான் அதிகமாகும்.... அதைத் தான் உருவாக்கும்.

அவனுக்கு இந்த உணர்வு தான் அதிகரிக்குமே தவிர நல்லது உருவாகாது. அவனிடம் விளைந்ததை நமக்குள் எடுத்து மீண்டும் நமக்குள்ளும் அதைத்தான் கூட்ட முடியும்.

இவனை பார்த்துப் பார்த்து... பேசிப் பேசி என் கை கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது... எனக்கு இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது... என்று இத்தனை உணர்வுகள் வரும்பொழுது அடுத்து சமையலுக்குப் போனால் அங்கே சீராகச் செயல்படுத்த முடியாது.

ஒரு துணியைச் சுத்தம் செய்து துவைக்க வேண்டும் என்றால் கூட கை ஓய்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய அழுக்கைப் போக்க முடியாது

ஏனென்றால் இந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்தச் செயல் வரும். பொழுது ரொம்ப அழுக்காக இருந்ததைப் பார்த்த உடனே ஒரு விதமான சடவு வரும்... அதை நீக்க முடியாது.

அதே போன்று ஒருவர் நல்லது சொல்கின்றார் என்று நாம் அதைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு சோர்வும் சஞ்சலமும் வரும். என்னுடைய பையன் நன்றாக இருக்கின்றான் என்று அவர் சொன்னவுடனே அதைக் கேட்க விடாது. சோர்வும் சஞ்சலமும் தான் வரும். அப்பொழுது
1.மீண்டும் நமக்கு வேதனை தான் உருவாகின்றது... நல்லதை விடுவதில்லை
2.அந்த உணர்வே ஆட்சி புரியத் தொடங்குகின்றது... நல்லதை விடாதபடி நமக்குள் தடுதலாகின்றது
3.இதைத்தான் மகாபாரத்தில் கௌரவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள்.

நல்லதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் கௌரவப் போராகின்றது. நல்லவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்ன செய்கிறது...? நல்லதைச் சொன்னார்கள் என்றால் மீண்டும் வெறுப்பாகி அந்த நல்லதை உள்ள விடாதபடி கௌரவர்கள் போர் செய்கின்றார்கள்.

கண் இழுத்து உண்மையைச் சொல்கிறது. கண்ணுடன் சேர்ந்தவுடனே திரௌபதி உயிர் அந்த உணர்வை எடுத்து உள் உணர்வை ஊட்டுகின்றது ஊட்டிய உடனே நல்லது என்று சொன்னவுடன் அதை அவமதிக்கின்றது.

உடனே கோபமான உணர்வுகளைத் தூண்டி... திரௌபதியை நாம் கேவலப்படுத்தத் தொடங்குகிறோம் நல்ல உணர்வுகள் இல்லாதபடி கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்றோம்... நல்லதை இயக்க விடுவதில்லை.

அப்பொழுது எது செயல்படுகின்றது...?

நம் பையன் மீது நினைவு வரும் போது
1.இப்படிச் சேட்டை செய்கின்றானே என்று இந்த உணர்வுகள் தான் வருமே தவிர
2.கண்கள் நுகர்ந்து நல்ல உணர்வின் தன்மை ஊட்டினாலும் உள்ளுக்கே விளைந்த உணர்வின் தன்மை (கௌரவர்கள் - பையனைப் பார்த்து நுகர்ந்தது)
3.சிந்தனையற்ற நிலையில் கொண்டு நமக்குள் போர் முறையே வருகின்றது.

இதனுடைய வலு எது...?

நம்முடைய கூர்மையான எண்ணங்கள் அர்ஜுனன். நுகரப்படும் போது நகுலன்... காந்தப்புலன் மாற்றி அமைத்து அதன் தெளிவான நிலைகளை நமக்கு ஊட்டும். நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இணைந்து விட்டால் சகாதேவன். நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் வலுவாகும் போது பீமன் வலுவின் தன்மைகொண்டு இயக்கும் சக்தியாக வருகின்றது.

மகாபாரதத்தில் திரௌபதை கண்ணனுடைய சகோதரி பெண்பால் இது ஆண்பால் ஆனால் கண்...! கண்ணுடன் சேர்ந்த கருவிழிக்குப் போகும் பொழுது தெரிவதில்லை... அந்தச் சக்தி மனைவியாகின்றது ருக்மணி.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா தவறு செய்யும் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே சேர்த்து உண்மையை உணர்த்துகின்றது தனதாகவே மாற்றுகின்றது. சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கண்ணனுடைய சகோதரி உடலுக்குள் நமக்கு உணர்த்துகின்றது.

பகைமை என்ற நிலையில் பையனைப் பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்படும் பொழுது நல்லவர் வந்து சொல்கின்றார்கள் என்று சொன்னால் அந்த வலிமைமிக்க நிலைகளைச் சொல்லப்படும் பொழுது அதை (அர்ஜுனனை) விடுவதில்லை. அதாவது நல்லதை வலுவாக்கும் அந்த உணர்வுகளை விடுவதில்லை..

நீங்களே ரொம்ப சங்கடமாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் ஈஸ்வரா...! என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கலாம் என்றால்
2.அந்தச் சங்கடம் அதை எடுக்க விடுமா...? என்று பார்க்கலாம்.

அப்போது எது செய்கிறது...? அந்தக் கௌரவர்கள்... “என்னை இப்படிப் பேசினார்களே...” என்ற இந்த உணர்வு முன்னணியில் வரும் பொழுது நல்லதை விடுவதில்லை.

நல்லதை விடுவதில்லை என்கிற பொழுது
1.அதை மாற்றுவதற்குண்டான அந்த வலுவான சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.உபதேசத்தினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு அழுத்தமாகக் கொடுப்பது.

இந்த உணர்வின் தன்மை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து அதைத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை எடுத்துக் கலந்த பின் உங்களுக்குள் வலுவாகின்றது. அதை எடுத்துச் சங்கடத்தை நீக்க முடியும்.

அழுத்தமாகப் பதிவாக்கவில்லை என்றால் அடுத்தவர்கள் நல்லதைச் சொன்னால் அதை ஏற்க விடாதபடி மீண்டும் கவலை அதிகமாகும். உயிர் நல்ல உணர்வுகளை விளையச் செய்யப்படும் பொழுது கௌரவர்கள் அவமதிக்கின்றார்கள்.
1.கௌரவர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு அதை அவமதிக்கின்றார்கள்
2.திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள் சபையில் வைத்து.

சூதாட்டம் ஆடி சூதிலே ஜெயித்த பிற்பாடு பாண்டவர்கள் ஐந்து பேரையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் அவர்களின் மனைவியையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் இந்த உணர்வின் தன்மை என்ன ஆகிறது...?

எதை இயக்கியதோ அது மற்றதை அடிமையாக்கப்படும் பொழுது இவர்கள் வேலை ஒன்றும் ஆவதில்லை. அவனுக்குக் கீழ் அடிபணிந்து தான் அவர்களால் இருக்க முடிகிறது.

சபையில் வைத்து திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள். துகிலை உறியும் போது திரௌபதி என்ன செய்கின்றது...?
1.கண்களைத் தான் எண்ணுகின்றது. கண்ணா...! என்று கண்களை எண்ணுகின்றது
2.அவர்கள் செய்யும் அவமதிப்பை எண்ணுவதில்லை.
3.தெளிவாக நமது சாஸ்திரம் காட்டுகின்றது... மகாபாரதத்தில் வியாசகன் கொடுத்த உண்மைகள் இது.

பின்னாடி வந்தவர்கள் அதை எப்படி எப்படி எல்லாம் திருத்தி விட்டார்கள் சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

திரௌபதி சபையில் மற்றவர்கள் யாரையும் எண்ணவில்லை
1.கண்ணனை (கண்களை) மட்டும் தான் எண்ணுகின்றது தன்னுடைய அண்ணனை.
2.அவன் எனக்கு ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்... எனக்கு அவன் உதவி செய்தான் என்ற உணர்வை எடுக்கின்றது.
3.அப்பொழுது உள்ளுக்கே அவமதிக்கும் தன்மை தடைப்பட்டு ஓய்ந்து விடுகின்றது.

எவ்வளவு அழகாக மகாபாரதத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். நன்றாக யோசனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்...! வியாசகன் கொடுத்த அந்தப் பேருண்மையைத் திரித்துக் கூறி எப்படி எப்படியோ இன்று மாற்றிவிட்டார்கள்.

குறிப்பு:-
1.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று சொல்வதன் தத்துவமே இதற்குத் தான்.
2.நம்முடைய கண்களால் மற்றதை எண்ணாது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் தான் உயிரிலே படும் அந்த அவமதிப்பை மாற்ற முடியும்.
3.ஞானகுரு அவர்கள் கண்களைத் திறந்து பின் கண்களை மூடி மீண்டும் கண்களைத் திறந்து மூடி இப்படி மாற்றி மாற்றித் துருவ நட்சத்திரத்தினை எண்ணச் சொல்வதும் இதற்குத் தான்.
4.எந்தக் கண்ணால் நம்மை அறியாதபடி தீமைகள் உள்ளே வந்ததோ அதே கண்களால் தீமைகளை நீக்கிய சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்.
5.நம் எண்ணத்தை இப்படி மாற்றினால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியும்.
6.எண்ணத்தை மாற்றாதபடி கண்களில் தீமைகளைப் பற்றியே அழுத்தமாக எண்ணிக் கொண்டிருந்தால் அது தான் மீண்டும் வலுவாக இயக்கும்.
7.பின்… என்னால் ஒன்றும் முடியவில்லை என்ற சொல் தன்னாலே வரும்… நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.