ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2023

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா... ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு...!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு... வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி... “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க... அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி...! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்... கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து... ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே - பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் - “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்...”
3.“நான்” - என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே - “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து... அந்தப் பொருளை முத்திரையாக... சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்...! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).