ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2023

இங்கே காட்டப்படும் நெறிகளைக் கடைப்பிடிப்போன் மெய் ஞானியாகின்றான்

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட... ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்... “உணர்வுடன் கூடியதாகும்...”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே...! என அறிந்து... பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்... உணர்ந்து கொண்டால் அருமையும்... அத்தகைய இனிமை உணர்வு கூட்ட... உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தின் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி...
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப்பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து... கண்டு கொண்டிட்டது தான்...!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்... அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்... ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட... “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”