மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்...?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்... நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.
எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.
பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்... பார்க்க வேண்டும்...” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.
கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.
இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.
உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.
பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது.... அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.
ஆனால் பூனை என்ன செய்யும்...?
1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது... பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.
பூனை இதே மாதிரி தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.
இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு... அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.
ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்... சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.
நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்...? என்று தான் கேட்போம்.
காரணம்... அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.
இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்...” என்று காட்டுகின்றார்கள்.
இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?
தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வரும் பேரருள் பேரோளியைக் கவர்ந்து உயிரிலே அதை மோதச் செய்ய வேண்டும். அந்த உணர்வு நம்மை இயக்கும்படி செய்ய வேண்டும்.