ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2023

சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அம்மாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு - சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”