ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2023

“உங்கள் தாயின் நல்லாசி இருப்பதால் தான்” எம்முடைய உபதேசங்களை உங்களால் கேட்க முடிகிறது

தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். அவர்கள் தான் கடவுள் நம்மை மனிதர்களாக உருவாக்கிய தெய்வங்கள் அவர்கள் உடலில் தான் நாம் வளர்ந்தோம்… “குடியிருந்த கோவில் அது…!”

பிறந்த பின் தெய்வமாக இருந்து நம்மைக் காத்ததும் அவர்கள் தான். நம்மைk காத்த முதல் தெய்வங்கள் அவர்கள். எதை எடுத்தாலும் இது நன்றாக இருக்க வேண்டும்… நீ இப்படி இருக்க வேண்டும்… ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பறிந்து நம்மைக் காப்பாற்றி வந்தது நமது தாய் தான்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை… தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள். தாய் தான் நாம் குடியிருந்த கோவில்.

1.தெய்வமாகக் காத்ததும் அதுதான்
2.கடவுளாக இருந்து உருவாக்கியதும் அதுதான்
3.அந்த நல்வழி காட்டும் குருவை நாம் அடைதல் வேண்டும்

ஏனென்றால் நம் தாய் நம்மை எப்பொழுதுமே நீ நல்லவனாக இருக்க வேண்டும்… எல்லோரும் போற்றும்படியாக நீ வளர வேண்டும் நீ நலமாக இருக்க வேண்டும்… என்று எத்தனையோ நல்ல வழிகளைக் காட்டுவது அவர்கள் தான்.

இதை செய்தால் தவறு… ஆபத்து… என நம்மை அறிவுறுத்துவது தாய் தான். நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தவழ்ந்து செல்லும் பொழுது அறியாது ஒரு நெருப்பைப் பார்த்ததும் அதை ஆனந்தமாக போய்த் தொட முயற்சிப்போம்.

டேய்…டேய்…டேய்… நெருப்புடா…! அது உன்னைச் சுட்டுவிடும்… என்று நம்மை அந்த இடத்தில் காப்பது நமது தாய் தான். நாம் ஆனந்தமாக அதைத் தொடப் போகின்றோம்.

ஆனால் தாயோ பதறிப் போய் குழந்தை நெருப்பிலே பட்டால் என்ன ஆகும்…? என்று வேகத்துடன்… அவ்வளவு தூரம் நம்மை அரவணைத்து உடனடியாகக் காப்பாற்றுகின்றது.

அந்த இடத்தில் நம்மைக் காக்கக்கூடிய தெய்வம் நம் தாய் தான்….! பிறந்து விட்டாலும் வளரப்படும் பொழுது எத்தனையோ வகைகளில் நம்மைக் காக்கின்றது.

அறியாத பருவத்திலே மண்ணை அள்ளித் தின்றால் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அப்படி ஆகிவிட்டால் நாம் அதற்குப் பின் நலமுடன் வாழ முடியுமா…?

இது போன்று எத்தனையோ நிலைகளைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி… நம்மை மனிதனாக ஆளாக்கி…
1.இன்று இந்த அருள் உபதேசங்களை கேட்கக்கூடிய அளவிற்கு வைத்தது நம் தாய் தந்தையர் தானே…!
2.அவர்களை நாம் மறக்கலாமா…? நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
3.இப்பொழுது இவ்வளவு தூரம் என்னுடைய இந்த அருள் உபதேசங்களைக் கேட்கின்றீர்கள் அல்லவா…!

உங்களைப் பள்ளியிலே படிக்க வைத்து பல நல்ல வழிகளைக் காட்டி நல்லதைச் சொல்லி நல்ல ஆடைகளைக் கொடுத்து… தான் எல்லா கஷ்டங்களையும் பட்டுச் சம்பாதித்து வளர்த்து நம்மை ஆளாக்கிக் காப்பாற்றியது யார்…? நம் தாய் தந்தை தானே…!

இப்பொழுது இதை எல்லாம் சொல்கிறோம். எத்தனை பேர் நம் தாய் தந்தையரை மதித்துச் சரியான முறையில் வழி நடக்கின்றோம்…?

“இத்தனையும் இப்பொழுது கேட்கின்றீர்கள்…” என்றால் தாய் தந்தையரால் நாம் மனிதர்களாக உருவாக்கப்பட்டுத் தெய்வமாக நம்மைக் காத்து எல்லா வழிகளையும் நமக்கு நல்வழி காட்டிய அதை மறந்து விட்டால் என்ன ஆகும்…? அப்படி இருக்கக் கூடாது
1.எப்பொழுதுமே அந்த ஞானிகள் காட்டிய வழியிலே தாய் தந்தையரை நாம் முதலிலே மதித்துப் பழக வேண்டும்
2.இது மிகவும் அவசியமான ஒன்று

அவர்கள் உயிர் கடவுள். நம்மை உருவாக்கிய முதல் தெய்வங்கள் அவர்கள் தான். தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றியதும் நல் வழி காட்டியதும் அவர்கள் தான்.

ஆகவே அத்தகைய குரு (தாயின்) காட்டும் வழியில் நாம் நடப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம். குருவின் துணையால் அதாவது தாய் தந்தையரின் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த அருளை நாம் பெறுவோம்.

1.தாயின் துணை கொண்டு அன்று அகஸ்தியன் அவன் எப்படி அந்த உயர்ந்த சக்தியைப் பெற்றானோ
2.அந்த உணர்வை எல்லாம் நாமும் நம் தாய் தந்தை அருளால் பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அந்தக் குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை நாம் வேண்டித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற்று
1.அவர்கள் என்றென்றும் மன மகிழ்ச்சியுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
2.நம் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தியானிப்போம்.