ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2023

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வதெல்லாம் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் பார்ப்பது கேட்பது இவை அனைத்தையும் ஜீவ அணுவாகப் பெறும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நாம் எண்ணியது அனைத்தும் அணுத்தன்மையாகி நம் உடலாகச் சேர்ப்பதைத் தான் ஓ…ம் ஈஸ்வரா…! என்றும் உடலுக்குள் எத்தகைய குணங்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியதோ அவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எந்தெந்தக் குணங்களை நாம் நுகர்ந்து அறிகின்றோமோ அறிந்த உணர்வுகள் அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாகி விடுகின்றது.

அதே சமயம் நல்லது கெட்டது என்று எத்தனை வகையிலே நாம் நுகர்ந்தறிகின்றோம். ஆனால் அவை அனைத்தையும் நமது உயிர் அந்த குணத்தின் அணுவாக உருவாகும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நம் உடலில் நல்ல அணுக்கள் உருவானால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது. வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்துவிட்டால் வேதனை உருவாக்கும் கருவாக உருவாகிவிடுகின்றது.

எந்தெந்த உடலில் இருந்து எத்தகைய குணங்கள் வெளிப்பட்டதோ அதை அனைத்தையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்று வித்தாக நமக்குள் அமைந்து விடுகின்றது
1.நாம் நல்ல குணங்கள் கொண்டு பலதைச் செய்தாலும்
2.தீமையான குணங்களைப் பிறர் வெளிப்படுத்தும் போது நாம் அதை நுகர்ந்து விட்டால்
3.அதன் உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிவிட்டால் நாமும் தீமை செய்வோராகவே மாறி விடுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் நோய்களும் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகள் வருவதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வடக்கு திசையில் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நமது பூமி கவர்ந்து பரவச் செய்து கொண்டே உள்ளது.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கேட்டுணர்ந்தால் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகி விடுகிறது.

ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவு இல்லை. நமது குருநாதர் அதை எவ்வாறு நம் உடலில் பதிவாக்க வேண்டும்…? என்று கூறியிருந்தார்.

அதன் வழி கொண்டு அவர் காட்டிய நெறிகள் கொண்டு பத்து இருபது வருடமாகக் காடு மேடெல்லாம் அலைந்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன அந்த முழு உண்மையின் உணர்வுகளை அறியும்படி செய்து
3.அதன் பின் அதனை வரிசைப்படுத்தி எவ்வாறு ஆனது…? என்று உணர்ந்த பின்
4.எனக்குள் அது பதிவாகி அதை நினைவு கொண்டு நுகறும் ஆற்றல் வந்தது (ஞானகுரு). அதனைக் கவர்ந்து கொண்டேன்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவு செய்தாரோ… அதே போன்று தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதன் மூலம்… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளினை அகற்றி மெய்ப்பொருள் கண்டுணரும் உணர்வின் சக்தி நீங்களும் பெற வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை உபதேசித்து வருகின்றேன்.

அந்தச் சக்தியை உங்களுக்குள் பெருக்கும் மார்க்கம் தான் குருநாதர் காட்டிய அருள் வழி தியானம்.

1.உபதேச வாயிலாகப் பதிவான இந்த உணர்வின் தன்மையை அடிக்கடி நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதை ஏங்கிப் பெற்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பெருக்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் பெற முடியும் இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வாக வளர இது உதவும்.