இரண்டு பேர் இருக்கின்றார்கள் அங்கே கிழங்கு இருக்கின்றது... இதைச் சாப்பிட்டால் “நன்றாக இருக்கும்...!” என்று ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அங்கே வருகின்றார். ஐய்யய்யோ...! இந்தக் கிழங்கை அன்றைக்கு ஒருவர் சாப்பிட்டார்... அதனால் அவருக்கு வயிற்று வலியே வந்து விட்டது...! என்று சொல்கின்றார்.
ஆனால் அவர் சாப்பிட்ட நேரம் எது...?
1.கிழங்கு... சத்து அதிகமுள்ளது
2.உடலில் நோய் இருக்கும் போது... ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் கிழங்கைச் சாப்பிடும் பொழுது வயிற்று வலியானது.
3.அன்றைக்கு அவர் பட்ட அவஸ்தை அதிகமாகி விட்டது.
4.அந்த உணர்வை இங்கே ஊட்டியவுடன் என்ன செய்யும்...?
கிழங்கைப் பார்த்தவுடனே இவருக்கும் இங்கே அதே பலவீனமாகிவிடும். சாப்பிட்டால் அடுத்து என்ன செய்யும்...? அதே உணர்வுகள் அந்த உமிழ் நீரைக் கூட்டி இயக்கிவிடும்... வயிற்று வலியாகிவிடும்.
அந்த ஆள் சொன்னார்.. சொன்னது சரியாகப் போய்விட்டது என்று நாம் சொல்ல ஆரம்பிப்போம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!
1.உணர்வின் இயக்கங்கள்... நம் உயிர் எப்படி இயக்குகின்றது...?
2.எதை எண்ணுகின்றோமோ அதுவே... அந்த எண்ணமே நம்மை ஆட்சி புரிகின்றது.
3.நன்றாக யோசனை செய்து பாருங்கள்... சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதைப் போன்று தான் இங்கே சாக்கடை உபதேசமாகக் கொடுக்கப்படும் போது அந்தப் பன்றி வந்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்லதை அது எப்படி நுகர்ந்து சாப்பிடுகின்றது பார்த்தாயா...? என்று கேட்கிறார் குருநாதர்
ஆனால் குருநாதருடன் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கும் சரியாகச் செல்வதில்லை. வீட்டில் என் மனைவி அப்போது தான் நோயிலிருந்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது.
ஏனென்றால் இயற்கையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பமும் மனிதனுக்கு எப்படி எல்லாம் வருகின்றது என்று தெரிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறேன்.
குருநாதர் என் மனைவியைக் காப்பாற்றினார் என்ற நிலையில்
1.வாக்கு வாங்கியவுடன் நான் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்கின்றேன்.
2.சாக்கடை அருகே அமரச் செய்து இத்தனை வேஷத்தையும் அங்கே போடச் சொல்கின்றார் குருநாதர்.
சாக்கடை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள். நையினாவிற்குப் (ஞானகுரு) பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்கள்.
காதில் இதை எல்லாம் கேட்டால் என் மனம் எப்படி இருக்கும்...? ஆனால்
1.என் மனதை உறுதியாக்குவதற்காக வேண்டி
2.அந்த இடத்திலே குருநாதர் பரீட்சை வைக்கின்றார்.
மனைவியைக் காப்பாற்றிய உடன் நான் சொல்வதைச் செய்கிறாயா...? என்றார்.
நான் செய்கிறேன் என்று சொன்னேன் (மனைவியை அவர் எழுப்பி விட்டதால்)
காரணம் டி.பி. நோயால் என் மனைவி அவதிப்பட்ட போது டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலை. குருநாதர் வந்த பின் என் மனைவி பிழைத்து எழுந்து விட்டது. அப்போது என்னிடம் வாக்கு வாங்குகின்றார்.
என்னை நம்புகின்றாய் அல்லவா...! நம்புகிறேன் என்று சொன்னேன் சொல்வதைக் கேட்பாய் அல்லவா...! கேட்கிறேன் என்று சொன்னேன். இதை எல்லாம் கொடுத்த பின் சாக்கடை அருகே உட்கார வைத்து “என்னை வாட்டுகிறார்... வறுத்து எடுக்கின்றார்...”
எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்... என் மாமியார் காதிற்கும் செய்தி போகிறது.
“தொலைந்து போகிறவன்...” என் பிள்ளையை இங்கே படுக்க வைத்துவிட்டுப் பைத்தியத்தோடு இவன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைச் சாடிப் பேசுகின்றது.
எப்படி இருக்கும் பாருங்கள்...? இயற்கையின் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகின்றது...? என்று அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்கு கொடுக்கின்றார் குருநாதர்.
அப்போது தான் கேட்கிறார்.... கடவுளின் அவதாரம் யார் தெரியுமாடா...? வராகன் (பன்றி) என்று சொன்னார்.
வராகன் கடவுள்... என்று சொன்னால் அவதாரங்கள் பற்றிய கதைகளை எல்லாம் நான் அதிகமாகப் படித்தவன் இல்லையே... எனக்குத் தெரியாது.
வராகன்... அது தான்டா கடவுள்...! என்றார் குருநாதர்.
என்ன சாமி...? பன்றியைப் பார்த்துக் கடவுள் என்று சொல்கின்றீர்கள் சாக்கடைக்குள் சுற்றுகிறது... கடவுள் இப்படியா இருக்கும்...! என்று குருநாதரிடம் நான் கேட்கின்றேன்.
பன்றி என்ன செய்யும் தெரியுமாடா என்று கேட்டார்...? உன் காபியிலே சாக்கடையை அள்ளிப் போட்டதும் ஓய்... என்று நீ வாந்தி எடுத்தாய். ஆனால் பன்றி சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளக்கின்றது. நாற்றத்தைப் பிளந்து விட்டு நல்லதையே அது நுகருகின்றது.
1.தீமையை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய நிலைகள் வராகன் என்று
2.பன்றித் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டுகின்றான் ஞானி...!
3.மனிதர்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.
கண்களிலே பார்க்கிறோம் அல்லவா. குழந்தை வெளிக்குச் சென்றால் பன்றி வேகமாக அங்கே செல்லும் முட்டித் தள்ளிவிட்டு அதற்குள் ஜீரணமாகாத பருப்பு இருந்தால் அதைச் சாப்பிடும்.
ஆனால் நன்றாக ஜீரணித்து மாவாக வெளியில் போயிருந்தால் அதை நுகர்ந்து பார்த்து... விட்டு விட்டு வந்துவிடுகிறது. ஆனால் ஜீரணிக்காத நிலையாகி அதில் பருப்பு இருந்தால் அதைக் கிளைந்து எடுத்துச் சாப்பிடுகின்றது.
இத்தனையும் நான் பார்க்க வேண்டும்.. குருநாதர் கட்டாயப்படுத்தி இதை எல்லாம் பார்க்க வைக்கின்றார். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்...? என்னை அப்படித்தான் அந்தந்த இடங்களுக்கு குருநாதர் இழுத்துக் கொண்டு செல்கிறார்.
எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஆனால் இதுதான்டா கடவுள் என்று சொல்கின்றார். அந்தப் பன்றி தான் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று சொல்கின்றார். அதற்கு என்ன சொல்வது...?
பன்றி தான் உங்களை மனிதனாக உருவாக்கியது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா...!
பன்றி தான்டா உன்னை மனிதனாக உருவாக்கியது... வேறு யாருடா உன்னை உருவாக்கியது...? அவன் தான்டா கடவுளின் அவதாரம்...! என்று சொல்கின்றார்.
குருநாதர் சொல்லச் சொல்ல நான் மறுக்க... அடுத்தாற்படி எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. கன்னா...பின்னா... என்று என்னைத் திட்டுகின்றார்.
டேய் தெலுங்கு இராஜ்யம்... உன்னைக் கொன்றுவிடுவேன்டா...! என்று சொல்கின்றார். என்னை எதிர்க்கின்றாயா...? அந்த அகத்தை அடக்கி விடுவேன்டா என்றார்.
ஏனென்றால் நாம் இந்த அறியாமையில் இருக்கக்கூடிய அந்த அகத்தை அழித்து விடுவேன் என்று அவர் சொல்கிறார்.
தெலுங்கு இராஜ்யத்தைத் திட்டுவார்... என்னைத் திட்ட மாட்டார். நான் தெலுங்கு பேசுகின்றேன் அல்லவா... அந்தத் தெலுங்கு இராஜ்யத்தை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.
தெலுங்கு இராஜ்யம் என்றால் வெங்கடாஜலபதி படுத்து இருக்கின்றார் அவருக்குச் செல்வம் தான் தேவை என்று இங்கிருந்து கொண்டு போய்க் கொட்டுகின்றார்கள்.
1.உனக்கு வேண்டியது மரியாதையும் செல்வமும் தான்
2.மரியாதையை வைத்துச் செல்வத்தை நீ தேடுகின்றாய் அதிலே இருக்கின்றதடா தெலுங்கு இராஜ்யம்.
3.பார்... உன் அகந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்றார்… “மறைமுகமாகச் சொல்கிறார்...”
கொன்று விடுவேன் என்று அவர் சொன்னவுடன் நான் திருப்பிக் கேட்டேன். ஏன் சாமி...? கொன்று விட்டால் உங்களுடைய வார்த்தையை நான் எப்படிக் கேட்பேன்...? என்றேன்.
உன்னை யாருடா கொல்வேன் என்று சொன்னது...! அந்தத் தெலுங்கு இராஜ்யம் அவனைத் தான் நான் கொல்வேன் என்று சொல்கிறார்.
1.ஒவ்வொன்றுக்கும் அழுத்தங்கள் கொடுத்து என்னை அவர் வழியில் அது கேட்கும்படி செய்து பல அர்த்தங்களைக் காட்டுகின்றார்.
2.அப்படி தெரிந்து வந்து தான் உங்களிடம் இதை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).