ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2023

கடவுள் காப்பாற்றுவார் என்று தான் நம்புகிறோம்… அந்தக் கடவுள் யார்…?

இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகிவிட்டார்கள். உலகெங்கிலும் எத்தனையோ வன்முறைகளும் தீவிரவாதங்களும் நாட்டுக்கு நாடு... ஊருக்கு ஊர்.. பெண்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவமதிக்கும் நிலைகள்... துன்புறுத்தும் நிலைகள் பெருகிவிட்டது.

அந்த மாதிரியான உலகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மற்றவர்கள் அதைச் செயல்படுத்துகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம் அதைக் கண்டு பயப்படவும் செய்கின்றோம்.
1.ஆனால் நமக்கு அதே மாதிரி ஒரு இக்கட்டான நிலை வரப்படும் பொழுது
2.நாமும் பதிலுக்குச் செய்தால் என்ன...? என்ற எண்ணங்கள் வந்து விடுகிறது.

ஆகவே எது வளர்கின்றது...? நேற்று வரை நல்லவர்களாகத் தான் இருந்தார்கள் என்று நினைக்கின்றோம் ஆனால் இப்படிச் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதே...! நாங்கள் அப்படி நினைக்கவில்லையே...! என்பார்கள்.

காரணம் இந்த உணர்வின் தன்மை மாற்றி நாம் எதை எண்ணுகின்றோமோ அது தான் அங்கே ஆட்சி புரிகின்றது. அப்படியானால் நம்மை எது ஆட்சி புரிய வேண்டும்...?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

எது ஆட்சி புரிய வேண்டும்...?
1.இருளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து
2.தீமை புகாத நிலையில் அதைத் தடுத்து
3.அந்தத் தீமை புகாத நிலையே நமக்குள் ஆட்சி புரியும்படியாக நம் எண்ணங்கள் வர வேண்டும்.

அது தான் நம்மை ஆட்சி புரிய வேண்டும்.

எண்ணிய உணர்வின் தன்மை... எதை நாம் நுகர்ந்தோமோ உயிர் அதைத்தான் செயல்படுத்துகின்றது.

சாமி காப்பாற்றும்... சாமியார் காப்பாற்றுவார்... நடந்து சென்றால் ஐயப்பன் காப்பாற்றுவார்... முருகன் காப்பாற்றுவார்... என்று எண்ணினாலும் அங்கே கோவிலுக்கு செல்வோரையும் கொள்ளையடித்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களைக் காக்கின்றாரா...? இல்லையே.

முருகன் கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றுவிட்டு வந்த பின் வீட்டிலே அவர்களிடம் கத்தியைக் காட்டிக் கொள்ளையடிக்கின்றார்கள். அப்போது சாமி அங்கு அவர்களைக் காப்பாற்றுகின்றதா...?

பாத யாத்திரை செல்பவர்கள் முருகா...! என்று சப்தமிட்டுக் கொண்டு அந்த எண்ணத்தில் செல்கின்றார்கள் பின்னாடி முன்னாடி வாகனங்கள் வந்தால் ஹாரன் கொடுத்தாலும் கூட கேட்காமல் இருக்கின்றார்கள்.

முருகா என்று சப்தமிடும் எண்ணத்தில் செல்லும் பொழுது கவனிக்காது பஸ்ஸில் அடிபட்டு இறக்கின்றார்கள். அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது...? முருகன் அப்பொழுது அந்த இடத்தில் சிந்தித்து போடா அந்தப் பக்கம் என்று இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் அல்லவா.

எல்லாக் கோவில்களுக்கும் எத்தனையோ பக்தர்கள் சென்று வருகின்றார்கள். இருந்தாலும் அதிலே எத்தனை விபத்துகள் நடக்கின்றது...? ஏன் அவர்களைக் காப்பாற்றக் கூடாதா...?

காரணம்...
1.நம்முடைய எண்ணங்கள் எதை எடுத்து முன்னணில் வைத்துச் செயல்படுத்துகின்றோமோ
2.அதே ஆவேச உணர்வுடன் உடலை விட்டு பிரிந்து ஆவியாகச் சென்ற உணர்வுகள் இங்கே வருகிறது.

சம்பந்தப்பட்ட நண்பர்களோ குடும்பமோ சொந்தமோ
1.அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுடன் அது (ஆன்மாக்கள்) உள்ளே சென்ற பின்
2.உயிர் அதே உணர்வை இயக்கி அது போன்ற விபத்துகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது

அதனுடைய பின் விளைவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகின்றது.

அப்போது எது நடக்கிறது...!

ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லோரும் எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றனர் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றுகின்றானா...? யார் அந்தக் கடவுள்...?

உண்மையின் உணர்வின் தன்மையினை எடுப்பதற்குத் தான் ஞானிகள் தெய்வச் சிலைகளை ஆலயத்தில் அமைத்தார்கள் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்துவிட்டு “நீ காப்பாற்று...!” என்று சொன்னால் அது எப்படி காப்பாற்றும்...?

1.ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வீக குணங்களை நாங்கள் பெற வேண்டும்
2.என் சொல் செயல் அனைவரையும் காக்க வேண்டும்...
3.அருள் உனர்வுகள் பெற வேண்டும்... இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இத்தகைய தெய்வீக உணர்வை எடுத்தால் அது நம்மை காக்கும்.

சிலை காப்பாற்றாது... நாம் எடுக்கும் தெய்வீக எண்ணம் தான் நம்மைக் காப்பாற்றும்.