ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2023

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

 

"சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்" வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்... சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் "காளியின் தாசன்" ஆயினர்.
1."ஓர் தாயின் இரு குழந்தைகள்" என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று... அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்...
1."சுவாச கதியினால்"
2.இந்த பூமியில் மாத்திரமன்று...! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது... ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்... தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை... அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட... மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்... கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட... பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்...
1.அம்மணி...! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று... தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட "அகப்பொருளைக் காக்கின்றது..."
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்... தன் உணர்வும் கொண்டு... "மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது..."
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் "இடை புகுவோர் பெறுவது என்ன...?"

திரை மறைவில் "ஆ...!" என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்... தோழிப் பெண்ணே...! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்... ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு... விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து... பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி... அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக... அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்... அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்... "செயல் ஒன்றே..."

1.அங்காடியே - இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் - ஆத்ம நிலை...
3.உணர்வுகளின் வழி - உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் - செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்...! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்...
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் "ஆத்மாவும்... உயிரும்" சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு "தாய் என்று கூறுவது - பேரருள் சூட்சமம்" என்றான்.

உடனே விசாலவதி தேவி... மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ... அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்...? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி... ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு - உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். "மங்கள நாண்" பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி... நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே "காளிதாசனாக" வழி காட்டினான்.