ரோட்டிலே ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள்… அநாகரீகமாகப் பேசவும் செய்கிறார்கள்… நாம் பார்க்கின்றோம்… அந்த உணர்வின் தன்மை அறிகின்றோம் இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அடுத்து வேதனைப்படுகின்றோம்.
அதைத் துடைக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று நமக்குள் நம்மை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.
பின்… அவர்கள் இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்ல உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அவர்கள் சண்டையிட்ட தீமையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… மாற்றப்படுகிறது..
சந்தர்ப்பத்தில் இதைப் போன்று வரும் நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.
சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… தியானம் தான் செய்கின்றேன்…! என்று நீங்கள் இருந்தாலும்
1.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் (இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது) பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
2.ஏமாந்து விட்டால் அந்தந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் வலுப்பெற்று விடும்
3.அதைத் துடைக்காமல் விட்டு விட்டால் இரத்தத்தில் கருவாகிவிடும்... பின் அணுவாகி அதனின் தீமையை உருவாக்கத் தொடங்கும்.
தனி மிளகாயை உட்கொண்டால் என்ன செய்யும்…? ஆ…! என்று எப்படி அலறுகின்றோம். தனியாக உப்பை வாயில் வைத்தால் ஓ…ய் என்று உமட்டலாகின்றது. ஆனால் அதே மிளகாயையும் உப்பையும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த உணவு சுவையுள்ளதாக மாறுகின்றது.
இது போன்று
1.பிற உணர்வுகளை நாம் பார்த்து நுகர கவர நேர்ந்தால்
2.அதற்குள் நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலவையாக்கி ருசியாக மாற்ற வேண்டும்
3.இது தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.
நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமை என்ற நிலை நமக்குள் வராதபடி தடுக்கும் சேனாதிபதி ஆறாவது அறிவு தான்.
அது நம்மைப் பாதுகாக்கக் கூடிய சேனாதிபதியாக இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக வரும்.
ஆறாவது அறிவு எனக்கு இருக்கின்றது நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்… தெரிந்து கொண்டேன்…! என்றால்
1.அறிய வேண்டும் என்ற நிலையில் கெட்டதெல்லாம் உள்ளுக்குள் புகுந்து
2.வேதனை வெறுப்பு சஞ்சலம் பயம் எல்லாமே நமக்குள் வந்துவிடும்.
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்.
இதையெல்லாம் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் அருளைப் பெருக்கச் செய்து… இருளை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
1.நான் கண்ட உண்மைகள் அனைத்தையும் உங்களிடம் மொத்தமாகச் சொல்லி
2.சிறுக்க முடிவுக்கு (கடைசியில்) வருவதற்கு முன்னாடி உங்களுக்குக் கஷ்டம் வந்து விடும்… உட்கார முடியாது.
3.நான் பட்ட கஷ்டங்கள் ஏராளமானது அதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால்
4.உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வருமே தவிர அந்த அருளைப் பெற முடியாது.
5.ஆகையினால் அந்தந்தச் சமயத்திற்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.
ஆகவே கார்த்திகேயா… என்ற நிலையில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் “எந்தத் துயரம் வந்தாலும்” அதை வளர விடாதபடி தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்குத் தான் இதை எல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.
ஈஸ்வரா… என்று புருவ மத்தியில்ல் உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
கஷ்டமோ நஷ்டமோ துன்பங்களோ வேதனைகளோ வந்தாலும் அதை மாற்றி மறந்து… சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக…
1.தனித்த உப்பை… தனித்த மிளகாயை… தனித்த கசப்பை.. மற்ற பொருள்களுடன் சேர்த்து சுவையாக எப்படி மாற்றுகின்றோமோ
2.அது போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சுவையாக மாற்ற முடியும்.
3.எது வந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அதற்குள் கலக்க வேண்டும்.
என் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் நல்ல பண்புகள் வளர வேண்டும் அவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நம்மை யாராவது திட்டினால்… அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும்… அவர்களுக்குத் தெளிவான எண்ணங்கள் வர வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எடுத்து
1.பிறருடைய தனித்த உணர்வு நமக்குள் வராதபடி
2.நம் உடலுக்குள் வளராதபடி இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மாற்றி அமைக்காதபடி அந்தந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் கலந்து.. நம் நல்ல குணங்களைச் சுத்தமாகக் கெடுத்துவிடும்.
நல்ல குணங்கள் அப்படி மாறிய பின் பிறரை எண்ணி வேதனைப்படுவோம்… அடுத்து கோபப்படுவோம்.
1.அது எல்லாம் நமக்குள் நோயாக மாறிவிடும் (உடல் நோய்)
2.உடல் உறுப்புகள் கெடும்… நினைவுகள் எண்ணங்கள் மாறும் (மன நோய்).
இதைப் போன்ற நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு “வாழ்க்கையே தியானம் ஆக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…”
பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி அருள் ஞானத்தைப் பெருக்குவதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம். சுருங்கச் சொல்லி பதிவாக்குகின்றோம்.
இதை நீங்கள் அடிக்கடி நினைவு கொண்டு தியானம் ஆத்ம சக்தி செய்து அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.