ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2024

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்


உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.
 
இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியேஅன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.
 
இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.
 
தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.
 
தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.
 
அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…
 
இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும் நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.
 
நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.
 
இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை சூனிய நிலை போல் சக்தியிழந்து செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான் இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.
 
இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.
 
அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.