ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2024

“தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்


“தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்

 

முதலில் மனிதனாகும் பொழுது சமப்படுத்தும் எண்ணங்கள் தோன்றுகின்றது… பரசுராம்.

மனிதனான பின்… உண்மையின் உணர்வைத் தனக்குள் அறிந்து கொள்ளும் நிலையாக “பலராம்” பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலை வந்தது ஆகவே… பல எண்ணங்கள் உருப்பெறும் தன்மையும்… அறிந்திடும் நிலையும் வருகின்றது
1.பல தீமைகள் வந்தாலும் தீமைகளை அடக்கும் முறைகளைக் கற்றுக் கொள்கின்றான்… நரசிம்மா…!
2.தீமை என்று உணர்ந்த பின் அது தனக்குள் நுழையாதபடி தடுத்துக் கொள்ளும் நிலை மனிதனுக்கு வருகிறது.
3.அப்படி நரசிம்ம அவதாரமாகச் செயல்பட்டவர்கள் இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

நமது வாழ்க்கையில் தீமை வரும் நிலையில் அது நம் ஆன்மாவாக மாறுகிறது. அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாக்கங்களாகி… தீய அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கின்றது.

அவ்வாறு விளைந்து விட்டால் ஜீவான்மாவிற்கும் அந்தத் தீமையின் நிலைகளை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது. ஜீவ ஆன்மாவில் வேதனைப்படும் உணர்வுகள் பெருகி அணுக்கள் பெருகத் தொடங்கி விட்டால் சாந்த அணுக்கள் கொண்ட இந்தச் சரீரமும் மாற்றமடைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடச் செய்வது தான் நரசிம்மா… விஷத்தை ஒடுக்கிடும் சக்தி…!

நம் பூமியிலே முதலிலே விஷத்தை ஒடுக்கக் கற்றுக் கொண்ட அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.

அதனின்று வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கிறது.
1.அதை நாம் கவர்ந்து அந்த உணர்வின் சத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதை வளர்த்துக் கொண்டால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்
3.துருவ மகரிஷியினைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களுடன் நாமும் இணைந்து
4.அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றோம்.

உதாரணமாக நாம் சாந்த குணத்துடன் இருக்கும் பொழுது ஒரு துன்பப்படுபவரைப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் நம் நல்ல அணுக்களுக்குள் இதுவும் ஊடுருவி “ஓ…” என்று இயங்கத் தொடங்கிவிடும்.
1.அது தான் ஓமுக்குள் ஓம் என்று இதை அடக்கி அது ஆட்சி புரியத் தொடங்கிவிடும்
2.பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக இப்படி ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் என்ற நிலைகள் கொண்டு
3.எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றிக் கடைசியிலே மனித உருவை உருவாக்கியது நமது உயிர்.

ஒளியின் சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற அத்தகைய மனிதச் சரீரத்தை இப்போது அலட்சியப்படுத்தினால்… உயிரை மறந்தால்… நாம் மீண்டும் கீழான பிறவிக்கே செல்ல வேண்டி வரும்.

காரணம் உயிர் தான் ஈசனாக இருந்து இயக்குகின்றது. ஓ என்று ஜீவ அணுவாக இயக்கியது. நாம் எண்ணியது அனைத்தும் கடவுளாக நிலை நிறுத்தி அதன் வழியே நம்மை வளர்க்கின்றது.

நம்முடைய எண்ணமே நின்று உள் நின்று அது அணுவாக இயங்கத் தொடங்கி விட்டால் அதே உணர்வின் எண்ணங்களையே அது இயக்குகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா… அந்த உணர்வின் சத்து அணுக்களாக மாறுகின்றது. அந்த உணர்வின் எண்ணங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

1.”தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்.
2.இது எல்லாம் உங்களுக்குப் புரிந்தாலும் சரி அல்லது புரியா விட்டாலும் சரி… பதிவாக்கிக் கொண்டால்
3.சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டு உங்களைத் தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி
4.உங்களைக் காக்க வல்லமை பெறும் அந்த ஆற்றலாகத் தான் உங்களுக்குள் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த எண்ணம் (உங்கள் எண்ணம்) உங்களைக் காக்கும்.