ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2024

ஐயப்பன்

ஐயப்பன்


சப்தரிஷிகள் சகலமும் அறிந்த முனிவர்கள் ஞானநிலை பெற்ற சித்தர்கள் இப்படி நம்மில் கலந்துள்ள பல பெரியவர்களின் நிலையெல்லாம் தாயின் வயிற்றில் கர்ப்பத்திலேயே வந்து பிறப்பதில்லை.
 
நிலையறிந்து புனிதத்தைப் போற்றும் தன்மையில் புனிதமாக்கும் எண்ணம் கொண்ட இப்பெரியவர்கள்
1.“எவ்வுடலையும் தன் உடலாக ஏற்றுத் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட முடிந்திடும்….”
2.நாம் அனைவரும் சரணம் கொண்டே வணங்கிடும் ஐயப்ப சாமியின் நிலையும் இந்நிலை போன்றதே.
 
ஒவ்வொரு முனிவரும் இம்மனித உடல் பெற்று முதல் பிறவியிலேயே சப்தரிஷி நிலைக்குத் தன் நிலையை உயர்த்தி வராத நிலையில் தான் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு உடலுக்கும் வந்து புனிதத்தை நிலை நிறுத்தி வைக்கின்றார்கள்.
 
புனிதத் தன்மையின் ஜெபத்தைக் கொண்டு அவர்கள் எடுக்கும் ஜெப நிலைக்கும் அவர்கள் சக்தி நிலையும் பெரும் நிலையை அடைகிறது.
 
சப்தரிஷியும் முனிவர்களும் வந்த நிலையெல்லாம் பிறவியிலேயே அந்நிலை பெற்று வரவில்லை. பிறவி எடுத்து பிறவிப் பயனை அறிந்து வாழ்ந்து சிறுகச் சிறுக வந்ததுதான் அவர்கள் நிலையும்.
 
இம்மனித ஆத்மாவை நாம் பெறுவதற்கே புண்ணியம் கொண்ட நிலையில் தான் இப்பூவுலகுக்கே வந்துள்ளோம்.
1.இப்பூவுலகின் பல பிறவிகளைக் கடத்தியுள்ள நாம்
2.நாமெடுத்த இந்தப் பிறவியிலாவது உண்மை நிலைகளை அறிந்து நம் பிறவிப் பயனைக் காத்து வாழ்ந்திடலாம்.
 
காத்து வாழ்வதற்கே இந்நிலையில் உள்ள பல பெரியவர்களையும் சப்தரிஷிகள் ஞானிகள் ஞான சித்தர்கள் இப்படி ஒவ்வொருவரின் நிலையையும் இம்மனித ஆத்மா எடுத்த ஒவ்வொருவருக்கும் போதிக்கின்றேன்.
 
இன்று நாம் எல்லோரும் வணங்கிடும் ஐயப்பனின் நிலையும் இதுதான். அவர் பிறவி எடுத்துப் பிறக்கவில்லை.
 
பிறந்த ஒரு சிசுவை அது இறந்த பிறகு அதன் தாய் தந்தை அதை ஒரு பேழையிலே வைத்து அடக்கம் செய்து புதைத்த நிலையில் அந்நிலையில் ஆற்றுப் படுகையில் அது இருந்ததினால் அன்று வந்த பெரும் மழையும் காற்றும் பெரும் வெள்ளமும் அந்த ஆற்றுப்படுகையில் இருந்த மரப்பேழையை அடித்து வந்ததில் குழந்தைப் பாக்கியம் பெறாத அன்று ஆண்ட ஒரு அரசனின் கையில் அப்பேழை கிடைக்கும் தருவாயில் அவ்வரசன் அப்பேழையைத் திறக்கும் பொழுது உயிரற்ற நிலையில் இருந்த சிசுவின் உடலில் ஒரு முனிவரின் நிலை உடலுக்கு வந்ததினால் அவ் உடல் உயிர் பெற்றது.
 
அந்நிலையில் இருந்து அவ்வரசன் வளர்த்த நிலை கொண்டு நடந்தவை தான் பலவும். சிறு குழந்தையின் உடலில் சகலமும் அறிந்த முனிவரின் ஆத்மா குடி கொண்டவுடன் குழந்தை மழலையா பேசிற்று…?
 
சகலமும் அறிந்த ஞான முனிவரே அவ்வுடலில் குடிவந்த பிறகு அக்குழந்தையின் தன்மையில் இருந்தே அன்று வாழ்ந்த பல மக்களின் எண்ணத்தை புனிதமாக்கிடப் பல வழிகளைச் செய்தாரப்பா.
 
ஐயப்பன் என்ற நாமம் சூட்டிக்கொண்ட சகல நிலையும் அறிந்த அம்மாமுனிவர். அவர் இன்றும் உள்ளார் அன்றும் இருந்தார்.
 
வரும் இன்னல்களைப் போக்கி மனிதர்களின் மனதில் பக்தி நிலையை வளர விட்டால்தான் புனிதத் தன்மை பெற்று புனித ஆத்மாக்கள் ஆக முடியும் என்ற நல்ல ஆசீர்வாதம் தந்தே நடத்திச் செல்கின்றார்.
 
அவர் ஈர்க்கும் நிலையில் தான் பல பக்தர்களின் நிலை எல்லாம் புனிதம் பெற்று புண்ணியம் எய்தும் நிலையில் உள்ளதப்பா.
 
கடும் ஜெப நிலையில் உள்ளவரப்பா ஐயப்ப சுவாமிகள்…! இவர்கள் வணங்கும் படியிலும் கல் என்று வைத்து ஐயப்பன் என்று வணங்கும் நிலையிலும் பக்தி கொண்ட நிலையில் வணங்கிடும் இதயத்திலும் நல்வழியில் செல்வோரைத் தன் வழியில் ஜெபம் கொண்டே நல்லாசி வழங்குகின்றார்  ஐயப்ப சுவாமிகள்.
 
எந்த நிலைகொண்டெல்லாம் அவரை எண்ணி வணங்குகின்றார்களோ அந்நிலையின் புனிதத்திற்கு என்றுமே அவர் அருளும் ஆசியும் உண்டப்பா.
 
ஆண்டவன் என்று நாம் வணங்கிடும் ஆண்டவர்கள் எல்லாம் இந்நிலை பெற்று தன் ஜெபத்தினால் அருள்வதுதான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் ஆண்டவன்களின் நிலை எல்லாம்.
 
ஆண்டவன் என்று யார் உள்ளார் என்று கேட்டேன். ஆண்டவன் தான் நாமெல்லாம்.
1.ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனாக உதித்த நாம்
2.நம்மைப் பேயாக்கி ஆவி உலகில் அல்லல் பட்டு அலைந்து திரியும் நிலைக்கு வந்திடாமல் நம்மை நாம் காக்க வேண்டும்…”
 
அந்நிலையில் இருந்து நாம் தப்புவதற்குத் தான் இப்படிப் பல நிலைகளை உணர்த்துகின்றேன். இப்பொழுது மனிதப் பிறவியில் உள்ள நமக்கு மட்டுமல்ல இஜ்ஜெப நிலை.
 
நம்மைச் சுற்றிக் கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே நல் ஜெபம் பெற வேண்டும்.
1.ஆவி உலகில் உள்ள தன்னைத்தானே துஷ்டன் ஆக்கி பேயாக அலைந்து கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே
2.தன் எண்ணத்தையும் குரோதத்தையும் நல் நிலை ஆக்கி ஜெபம் பெற்று
3.நல்ல தாய் தந்தையரின் கர்ப்பத்தில் பிறந்து இப்பிறவியின் பயனை முடித்திட வேண்டும்.
4.உங்கள் ஜெப நிலையில் இருந்து அவர்களுக்கும் நல்ல நிலை தா…! என்றே வணங்கிடுங்களப்பா.