ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2024

துன்பங்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள்…!

துன்பங்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள்…!

 
குருநாதர் ஒரு சக்தியைக் கொடுத்த பின்
1.அந்தச் சக்தியை நான் எப்படிப் பயன்படுத்துகின்றேன்…? என்கிற வகையில்
2.பல பரிட்சைகள் செய்துதான் அதைக் கொடுக்கின்றார்.
 
அவர் காட்டிய உண்மைகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று தான் இப்போது உபதேசித்து வருகின்றேன்.
 
காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள் அவர்களுக்கு அருள் உணர்வை எப்படி ஊட்ட வேண்டும்…? என்று கூடுமான வரையிலும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
இன்று வரையிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன்.
 
அரும் பெரும் சக்திகளைக் கொடுத்திருக்கின்றார். கஷ்ட நஷ்டங்களைப் நீக்கி அந்த அருள் சக்திகளை எவ்வாறு பெறுவது…? என்கிற வகையில் இதைk கொடுத்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்று செய்து கொண்டு வருகின்றேன்.
 
ஆனால்…
1.நோய் எல்லாம் நீங்கி விட்டது என்றால் அருள் சக்திகளை எடுப்பதை மறந்து விடுகின்றார்கள்
2.அர்ச்சனை அபிஷேகம் மந்திரவாதியிடம் செல்வது தாயத்தைக் கட்டுவது என்று போய் விடுகின்றார்கள்.
3.காரணம் அடிக்கடி அவர்களை நான் சந்திக்க முடியாது அல்லவா.
4.அவர்கள் நிலைக்குத்தான் செல்கின்றார்களே தவிர சிந்திக்கும் தன்மை இல்லாது போய்விட்டது.
 
உலகம் முழுவதும் கால்நடையாகச் சென்று ஒவ்வொருவரும் எப்படி அவஸ்தைப்படுகின்றார்கள்…? ஒருவருக்கொருவர் எப்படி சாபம் விடுகின்றார்கள் சாபமிட்ட வரும் சாபத்தை கேட்டுக் கொண்டவரும் உடல்களிலும் எப்படி தீமைகள் வருகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் எத்தனையோ வழிமுறைகளை இன்றும் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.
 
பிறருடைய எண்ணங்களை நாம் எண்ணுகின்றோம் சுவாசிக்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நோயாக மாறுகின்றது.
1,இந்த நோயை எல்லாம் நீக்கியவன் துருவன்.
2.அதை நாம் நுகர்ந்து கொண்டே வந்தால் இந்த தீமைகளை நீக்கும்
3.நோய்களை நீக்குவதற்குண்டான வழியும் கிடைக்கும்.
 
ஏனென்றால் பல தீமைகள் நமக்குள் இருக்கின்றது. இருந்தாலும் துருவ மகரிஷியின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இதை நினைவு கொண்டு நீங்கள் வளர்த்துக் கொண்டு வந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களைச் சமாளிக்கக் கூடிய நிலை வரும்.
 
நாம் பார்த்த உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கின்றது. அதிலே எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வளர்ச்சியை அது பெறுகின்றது.
 
செடியை ஊன்றி நாம் அதை எப்படிப் பராமரிக்கின்றோமோ அதற்குத் தக்க நன்றாக வளருகின்றது. இதைப் போன்று தான் நமக்குள் இருக்கக்கூடிய குணங்களுக்குள் வெறுப்பு அதிகமாகி விட்டால் அது வளர்ச்சியான பின் அதற்குத் தகுந்த நோயாக மாறி விடுகின்றது.
 
ஒருவர் மீது பாசத்தை வைத்து விட்டோம் என்றால் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் வேதனை வந்து விடுகின்றது. பாசத்தால் நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் வேதனை அதிகரித்து நோய் தான் வருகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி…?
 
அதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும்
3.அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியையும்
4.நீங்கள் நினைத்தவுடன் அதைக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
திட்டியவர்களை எண்ணினால் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது. இதே போல் அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று துன்பங்களை நீக்குவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
 
ஆகவே துன்பங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்…!
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் நலமும் வளமும் பெறுவேன் நான் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்று மன உறுதி கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும்.
 
ஆகவே உங்கள் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்லுங்கள். அருள் ஒளி கொண்டு இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
 
அருள் ஒளியை வளர்த்திடும் நிலையாக பிறவி இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்ல நீங்கள் எதை எண்ணுகின்றீர்களா அதை உங்கள் உயிர் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது பிரம்மம் ஆகின்றது அடுத்து சிவமாக ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது.
1.நீங்கள் எண்ணியதைத் தான் உங்கள் உயிர் படைக்கின்றது
2.எண்ணிய உணர்வுப்படி தான் உங்கள் வாழ்க்கை அமைகின்றது
3.எண்ணிய உணர்வின் செயலாகத்தான் இந்த வாழ்க்கை வாழ்கின்றோம் என்ற நிலையினை எண்ணி
4.இந்த உடல் சதமானது அல்ல நமக்கு என்றும் நிலையான சதமான உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி
5.அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.
 
அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் இந்த மனித உடலில் பெறத் தவறினால் இனிமேல் இன்னொரு உடலுக்குள் சென்று அதைப் பெற முடியாது.
 
ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுவோம் நஞ்சை வென்றிடும் உணர்வைப் பெறுவோம்.