ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2024

அழிவு என்னும் சொல்லே வேண்டாம்

அழிவு என்னும் சொல்லே வேண்டாம்


ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உடல் அமைப்பு வண்ணம் சரீரம் இவை மாறுபட்டுத் தான் இருக்கும்
1.ஒன்று போல் எதுவுமே இருப்பதில்லை.
2.ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை.
3.ஒரே இடத்தில் விதை விதைக்கும் பயிர்களிலும் செடி, கொடி மரங்களும் ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை.
4.நம் சக்தியிலிருந்து தீட்டும் ஓவியமும் பாடும் பாடலும் சமைக்கும் சமையலும் எதுவுமே ஒன்று போல் இருப்பதில்லை.
5.ஒரு தடவைக்கு மறு முறை செய்யும் பொழுது மாறித்தான் வரும்.
 
அன்றன்று எடுக்கும் சுவாச நிலையைக் கொண்டு தான் அதனுடைய அழகு அதில் உள்ளது. சாதாரண வாழ்க்கை முறையில் நடப்பவைகளுக்கே இந்நிலை என்றால் இவ்வாத்மா எடுக்கும் பிம்பத்திற்கு எந்த நிலையப்பா…?
 
ஆத்மா எடுக்கும் பிம்பம் எல்லாம் அது சுவாசித்த பல ஜென்மங்களில் சுவாசித்த சப்த அலைகள் எந்நிலைகொண்டு பெற்றனவோ அந்நிலையிலே தான் தாயின் கருவிற்கு வந்த பிறகும் அச்சப்த அலைகளின் தொடர்புடன் தாயெடுக்கும் சப்த அலைகளின் நிலையும் கலப்பதினால் அமைவதுவே இவ்ஆத்ம உருவம்.
 
உடலில் இருந்து ஆத்மா பிரியும் பொழுது அவ்உடலில் உள்ள பொழுது எடுத்த சப்த அலைகள் எல்லாமே அவ்ஆத்மாவுடன் செல்கின்றது என்று சொல்கின்றோம்.
 
ஆத்மா எந்நிலையில் செல்கின்றது…?
 
இவ்உடலைப் புதைத்தோ எரித்தோ கல்லறையில் வைத்தோ அழித்து விடுகின்றோம் என்பீர்.
 
அழிவது எதுவப்பா…? உடல் எங்கே அழிகிறது…? அவ்வுடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள நீர் சத்து எல்லாமே ஆவியாகி அது விட்ட சப்த அலைகளுடன் கலந்து உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவுடன் இந்த நீர்ச்சத்தும் சப்த அலைகளும் தன் ஆத்மாவுடனே தான் கலக்கின்றன.
 
ஒவ்வொரு உடல் மாறும் பொழுதும் உடல் அழிவதில்லை... சப்த அலைகளும் அழிவதில்லை.
1.இவ் உடல் எனும் மாய ரூபம் தான் மண்ணுடன் மண்ணாகி
2.இவ் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி ஆத்மாவுடன் கலக்கும் பொழுது இவ்உடல் எங்கு அழிகின்றது…?
3.உடலும் அழிவதில்லை ஆத்மாவும் அழிவதில்லை…! ஆண்டவன் சக்தியில் எதுவுமே அழிவதில்லை.
 
விஞ்ஞானத்தில் எதையும் ஆக்கிடலாம் அழித்திடுவானா…? இயற்கையை வளரவிட்டுச் செயற்கை ஆக்குவான்.
 
செயற்கை அழிந்தால் எங்கப்பா செல்கின்றது…? சந்திரனின் எடை குறைகின்றது சூரியனின் எடை குறைகின்றது பூமியின் எடை குறைகின்றது என்றெல்லாம் செப்புகின்றான்.
 
சூரியனிலிருந்து பல அணுக்கதிர்கள் மற்ற மண்டலத்திலிருந்து பூமியில் படிந்து கொண்டே உள்ள பொழுது எப்படியப்பா குறையும்…? இப்பூமி தான் ஈர்த்து வெளியிடும் சக்தியில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ள பொழுது வளரும் நிலை தான் உள்ளது. குறையும் நிலை எங்குள்ளது…?
 
அழியா நிலை பெற்று வளருவதுவே எல்லாமே.
 
ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் தன்மை தான் உள்ளதுவே தவிர எதுவுமே அழிவதில்லை.
1.அழிவு என்னும் சொல்லே வேண்டாம்.
2.வளரும் நிலையாக வருவது தான் சொல்லிலும் செயலிலும் அழகப்பா.
 
ஆத்மா எடுக்கும் உடல் பிம்பத்தை வைத்து வம்ச வழியில் வருகிறது நிறம் உருவம் அழகு எல்லாம் என்கிறோம். வம்ச வழியில் வருவதல்ல. அவரவர் எடுத்த சுவாச நிலை கொண்டு சப்த அலைகளும் முதல் ஜென்மத்தில் இருந்த உடலின் தன்மை கொண்ட சத்து நிலையும் கலந்தே தான் ஒவ்வொரு ஜென்மத்தில் நாம் எடுக்கும் பிறவியிலும் நம்முடன் கலந்தே வருகின்றது.
 
இஜ்ஜென்த்தில் வந்தது மட்டுமல்ல இவ்வுடலின் தன்மை என்பதன் பொருள் விளங்கியதா…?