ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2019

நாம் எதை நம்பிக் கொண்டிருக்கின்றோம்…?


நாம் நம்மிடத்தில் நல் உணர்வுகளை வளர்ப்பதற்காக ஆலயங்களைத் தத்துவ ஞானிகள் நமக்குக் கொடுத்திருந்தாலும் நாம் ஆலயங்களை அவமதிப்புதான் செய்கின்றோம்.

அதாவது
1.“நேற்று வரை சோறு போட்டேன் நன்றாகச் சாப்பிட்டாய்
2.இன்றைக்கு எனக்கு எதிரியாக வந்துவிட்டாய்…!” என்று மக்கள் மத்தியில் சண்டை போடுவதைப் போன்று
3.தெய்வச் சிலையைக் கூட்டாளியாகக் கருதி உணர்வுகளை வளர்க்கின்றோம்.

ஆனால் நாம் அங்கு அந்தத் தெய்வச் சிலைக்குக் காண்பிக்கப்பட்டிருக்கும், உயர்ந்த தத்துவத்தை நாம் நுகர்ந்தோமென்றால், அந்த உணர்வுகள் கருவாகி நமக்குள் அந்த உயர்ந்த வழியைக் காண்பிக்கும்.

1.நாம் நுகரும் உயர்ந்த தத்துவத்தின் உணர்வுகள் அத்வைதம்.
2.நுகர்ந்து உயிருடன் ஒன்றி உராயப்படும் பொழுது, விசிஷ்டாத்வைதம்.

“நல்லது செய்ய வேண்டும்...!” என்ற உணர்வை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் தூண்டுகின்றது. உங்களுக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகின்றது.

ஆனால் நாம் இப்படி நம்மிடத்தில் நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்குப் பதில் என்ன செய்கிறோம்...?

நமது வீட்டில் ஒரு கல்யாண ஏற்பாடு என்றால் “நல்ல நேரம், கெட்ட நேரம்...!” பார்க்கின்றோம். ஜோசியரிடம் போய் ஜாதகம் பார்த்து எல்லாப் பொருத்தங்களையும் பார்க்கின்றோம்.

அடுத்து ஆலயங்களுக்குச் சென்று சாமி சிலையில் பூ வைத்து, என்ன கலர் பூ கிடைக்கின்றது...? என்று பார்க்கின்றோம். இப்படி சாமியிடம் வரம் கேட்கின்றோம்.

சாதகமான பூ விழுந்து விட்டால் சாமி நமக்கு வரம் கொடுத்து விட்டது என்று கருதுகிறோம்.

சாமியிடம் போய் பூ வைத்துப் பார்த்தால்தான் என்னுடைய குறை தீரும். சாமி வரம் கொடுத்தபின் தான் அதைச் செய்வேன் என்பார்கள்.

ஆனால் இங்கே, காந்தப் புலனறிவு என்ன செய்கின்றது?

அங்கே என்ன பூ விழும்...! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். செவ்வரளிப்பூ வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அதே சமயம் அவருடன் வந்தவர்கள்… அது எப்படி இருக்கிறதோ…? என்ன ஆகுமோ...? என்று கலக்கத்துடன் பார்க்கப்படும் பொழுது, அங்கே எதிர்பார்ப்புகளுக்கு மாறான பூக்கள் விழும்.

ஏனென்றால் இவர்களுடைய உணர்வின் வேகம் அங்கே இயக்குகின்றது. 

1.வீட்டில் மைத்துனன் சரியாக இல்லை, இந்தப் பெண் கல்யாணமாகி நமது வீட்டிற்கு வந்தால் சரியாக இருக்குமா..” அல்லது
2.அவர்கள் வீட்டில் இத்தனை பேர் இருக்கின்றனர்…! அந்த வீட்டு மாப்பிள்ளை நமது வீட்டிற்கு வந்தால் சரியாக இருக்குமா..? என்று
3.இந்த கலக்க உணர்வுடன் பார்த்தபின், அதற்கேற்ற பூ தான் விழும்.

பெண் நல்ல குணவதியாகத்தான் இருப்பாள். ஜாதகமும் பொருந்தியிருக்கும். கோவிலில் பூ வைத்துப் பார்த்து அது சரியில்லை..! என்றால் “பெண்ணை வேண்டாம்...!” என்று கூறிவிடுவார்கள்.

அதே சமயம் ஒரு பையனைப் பார்க்கின்றோம். இவன் வீட்டிற்கு மாப்பிள்ளையாக வந்தால் சண்டை பிடிப்பானா...? எதாவது கலகம் பண்ணுவானா..? இதையெல்லாம் நான்கு பேர் சொன்னார்களே, உண்மையாக இருக்குமா..? என்று கலக்கத்துடன் இருப்பார்கள்.

ஜாதகத்தில் நன்றாக இருக்கிறது. இவனுடைய குணம் இப்படியிருக்கிறது. நமது குலதெய்வம் தான் காப்பாற்ற வேண்டும்...! என்று அங்கு போய்க் கேட்பார்கள்.

ஆனால் நல்ல மாப்பிள்ளையாக இருப்பான். அந்த மாப்பிள்ளைக்கு ஆகாதவர்கள் இரண்டு பேர் இருப்பார்கள் அவர்கள் பெண் வீட்டார்களிடத்தில் போய்
1.“இவனுக்குப் போய் உங்கள் பெண்ணைக் கொடுக்கிறீர்களே...!” என்பார்கள்.
2.இதைப் பெண் வீட்டார்கள் வலுவாக வைத்துக் கொள்வார்கள்.

இந்த எண்ணம் அவர்களிடம் வலுவானவுடனே.. சாமியிடம் போய் பூ வைத்து வரம் கேட்பார்கள். இவர்களின் உணர்வின் வலிமைக்கேற்ப அங்கே பூ விழும்.
1.இப்படித்தான் நமது உணர்வின் செயல் எதுவோ
2.அதுவே இயக்கி நம்மை அதன் நிலையாக்கி விடுகின்றது.
3.இவையெல்லாம் இந்த உலகில் நம்மையறியாமல் இயக்கும் சக்திகள் ஆகும்.

நம்மையறியாமலே நமது எண்ணங்கள் உள்ளுக்குள் நுகர்ந்து, அந்த உணர்வின் செயலாக நம்மை உருவாக்கி விடுகின்றது. ஆக, நாம் நுகரும் உணர்வுகள்தான் தெய்வமாக நின்று நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

இப்படி நம்மையறியாது இயக்கும் தீய வினைகளை மகரிஷிகளின் அருள் சக்திகளின் துணை கொண்டு நிறுத்துதல் வேண்டும்.
1.நம் உயிர் வழி அதை நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக் கூடிய எல்லா உணர்வுகளிலும், இணைக்கச் செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகள் ஆலயங்களில் உணர்த்திய நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். நம் சொல்லும் செயலும், புனிதம் பெற வேண்டும். ஞானிகள் காட்டிய அந்தத் தெய்வச் செயலாக நம் செயல்கள் அமைய வேண்டும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.