ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2019

நாம் கட்டாயப்படுத்திப் பெறவேண்டிய சக்தி எது…?


நாம் கல்லூரிக்குச் சென்று டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே எத்தனையோ வகையான நிலைகளைச் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர். ஆனால்
1,தானே தன்னைக்  கட்டாயப்படுத்தி,
2.படிக்க வேண்டும் பார்க்க வேண்டும்...! என்ற உந்துதல் கொண்டு எவர் செயல்படுகின்றனரோ,
3,அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும் பொழுது “இது என்னடா சங்கடமாக இருக்கிறது...!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நிச்சயம் சங்கட டாக்டராகத் தான் வருவார்.

டாக்டரான பின் முதல் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின் மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது, இவரை அறியாமலேயே சலிப்பு வந்துவிடும்.
1.இந்த உணர்வு கலந்த பின்
2.இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம் சீராக இருக்காது.

ஆகவே  நாம் கட்டாயப்படுத்திதான் அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் தியானித்தல் வேண்டும்.

இன்று ஒரு விஞ்ஞானி ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாக, கட்டாயப்படுத்தித் தான் திணிக்கின்றான். இதன்படி இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின் இதனின் ரூபமே மாறுகின்றது.
1.இப்படி ஆட்டை மாடாக்குகின்றான், மாட்டை ஆடாக்குகின்றான்.
2.இதன் வழிகளிலே எத்தனையோ வகைகளைச் செயல்படுத்துகின்றான்.
3.இப்படி ஒவ்வொன்றிலும் கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்.

ஒரு விஞ்ஞானியோ, இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது, “இதைப் பெறவேண்டும்...!” என்று எப்படியும் கட்டாயப்படுத்தி ஆராய்ச்சி செய்து உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர்.

இப்படி  வலுகொண்ட உணர்வு கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுதுதான், விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது. இதன் வழிகொண்டு அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது.

ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால், அவருடைய மாணவன் அதைவிட ஒன்றைப் பெற வேண்டுமென்று தன் உணர்வை வலுபெறச் செய்யும் பொழுது, அவன் குரு கண்டறிந்ததை விட அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ந்தது தான் விஞ்ஞானம்.

இதைப் போன்று நமது குரு காண்பித்த அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நமக்குள் பெறும் பொழுது,
1.நாம் அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.நமது உணர்வின் தன்மையே ஒளியாக மாற்றும் பொழுது
3.மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டேயுள்ளது.  நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால், உயிர் அடுத்த சரீரத்தை விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நாம் கூட்டினால் நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி, நம்முள் ஏகாந்த நிலைகொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

1.இதை நாம் நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும்.
2.மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே,

சிறிது காலம் இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால் இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்க பூமியாக மாற்றும்.

நம் உயிரை சொர்க்கவாசலாக அமைக்கலாம்.  உயிருடன் ஒன்றி உயிரின் வழி கொண்டுதான்  நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்க முடியும்.

அதன் வழியில், என்றும்  ஏகாந்த நிலை என்ற நிலையை எல்லோரும் அடையலாம். எமது அருளாசிகள்.