ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2019

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது…!


அதாவது
1.எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ
2,எதை எல்லாம் நாம் பார்கின்றோமோ
3.எதை எல்லாம் நாம் கேட்கின்றோமோ
4.எதை எல்லாம் நாம் நுகர்கின்றோமோ
5.அவை அனைத்தையும் நமது உயிர் "ஓ…" என்று ஜீவ அணுவாக மாற்றிக் கருவாக உருவாக்கி
6."ம்…" என்று நம் உடலாக இணைத்து விடுகின்றது.
7.அதற்குப் பெயர் தான் ஓ…ம் நமச்சிவாய....! என்பது.

இப்படி  ஓ…ம் நமச்சிவாய... ஓ…ம் நமச்சிவாய...! என்று நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தகைய குணங்களை எல்லாம் நுகர்கின்றோமோ அது அனைத்தையும் நம் உடலாக மாற்றுகின்றது.

அதே சமயம் நாம் எண்ணிய குணங்கள்… அந்த உணர்வுகள் எதுவோ “அதே குணங்கள் தான்” நம்மை ஆளுகின்றது.

1.கோபம் என்ற உணர்வை நுகர்ந்தால்… கோபத்தின் நிலை கொண்டு நம்மை ஆளுகின்றது.
2.வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்.. அந்த வேதனை என்ற உணர்வை வைத்து நம் உயிர் நம்மை ஆளுகின்றது.
3.வெறுப்பு என்ற உணர்வை நாம் நுகர்ந்தால்… வெறுப்பு என்ற உணர்ச்சிகளை ஊட்டி வெறுக்கும் உணர்வுடன் நம்மை ஆளுகின்றது.

ஆகவே நமது வாழ்கையில் எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் நமது உயிர் நாம் எண்ணிய உணர்வு கொண்டு தான் நம்மை ஆளுகின்றதே தவிர தனித்து “எவரும் நமக்குள் ஒன்றும் செய்வதற்கு இல்லை…!”

ஒருவன் என்னைத் திட்டினான்… என்னைத் திட்டினான்…! என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தத் திட்டிய உணர்வுகள்…
1.நாம் எப்படிக் கெட்டு போக வேண்டும் என்று அவன் எண்ணினானோ
2.அந்த உணர்வு தான் நம்மை ஆண்டு நமக்குள் அந்த உணர்வின் தன்மை தான்ன் வரும்.

1.ஆனால் திட்டிய உணர்வு நமக்குள் புகாது தடுத்தால்
2.அருள் ஒளியை நாம் நமக்குள் நுகர்ந்து எடுத்தால்
3.அந்த இருளை அகற்றும் அருள் ஞானம் நம்மை ஆளத் தொடங்கும்…!

ஆகவே “நமது எண்ணமே நம்மை ஆளுகின்றது…!” என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து தீமையான உணர்வுகளை நுகராது… நம்மை அது இயக்காது.. தீமைகள் நம்மை ஆளாதபடி தடுக்க வேண்டும்.

பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்ற நிலையில் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரப் பழகுதல் வேண்டும். தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் உருவாகதபடி தடுத்தே ஆக வேண்டும்.