ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2019

ஆதி சக்தியின் விஸ்வரூபம் பற்றியும் மூவுலகம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது


ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி... பூமிக்குள்ளும் சரி... ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி... படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி...!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்... மணங்களும்... நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி...!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே...!

மூவுலகம் என்பது எவை...?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள... பாதாளம்...! என்ற எண்ணமா...?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி... நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள... மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன் 
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும் 
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.