ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2019

தைப் பொங்கல் அன்று பல நறுமணமான பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க பொங்கலாக உணவைப் படைப்பதன் காரணம் என்ன…?


சூரியன் சகல பொருள்களையும் உருவாக்கி மனிதனுக்கு உணவாகக்  கொடுக்கின்றது. சூரியனால் விளைய வைத்த பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்துச் சுவைமிக்க உணவாகப் படைத்து அதைச் சூரியனுக்கே அர்ப்பணிக்கும் நாளாகத் தான் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடுகின்றோம். 

காரணம் ஞானிகள் காட்டிய அருள் வழி அது..!

சூரியனால் விளைய வைத்த பொருளான அரிசி வெல்லம் போன்ற பொருள்களையும் அதற்குள் மற்ற உயர்ந்த பொருள்களாக விளைந்த ஏலக்காய் ஜாதிக்காய் குங்குமப்பூ போன்ற நறுமணத்தை ஊட்டும் சில பொருளையும் இதோடு இணைத்து நாம் சுவை மிக்கதாக உருவாக்குகிறோம்.

அந்தப் பொங்கலைப் பொங்கும் பொழுது அதிலிருந்து வெந்து ஆவியாக வெளிப்படும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதை நறுமணம் கமழும் நற்சக்தியாக நமது பூமியில் பரவச் செய்கின்றது. அது மிகவும் சுவை கொண்டதாக மாறுகின்றது.

நாம் வேக வைக்கும் போது அதிலிருந்து வரக்கூடிய நல்ல மணங்கள் அதைச் சுவாசிப்போருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளாக வருகின்றது.

சூரியனால் உருவாக்கப்பட்ட உணர்வுகளை எல்லாம் மனிதனான நாம் சுவையாக உருவாக்கி அந்த நறுமணங்களை வெளியிடும் போது நுகர்வோருக்கெல்லாம் அத்தகைய நறுமணங்கள் கிடைக்கின்றது.

1.அவ்வாறு உருவாக்கிய பொங்கலைச் சுவைத்து உணவாக உட்கொள்ளும் போது
2.மகிழ்ச்சிக்குரிய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்!

ஒரு மிளகாயை நாம் வாயில் போட்டால் ஆ! என்று அலறுகின்றோம். சுவையற்ற ஒரு பொருளைச் சாப்பிட்டோம் என்றால் நம் மணம் சோர்வடைகின்றது சலிப்படைகின்றது!

ஆனால் பல பொருள்களைச் சேர்த்து இணைத்து நாம் அதைச் சுவையான பொங்கலாக மாற்றும் போது அது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வினை ஊட்டுகிறது.
1.நாம் சுவைத்த உணவு அந்த அமிலமாக அந்த உமிழ் நீராக மாறி...
2.நம் இரத்த நாளங்களில் அந்த மகிழச் செய்யும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.

அதே போல நாம் சமைத்த பொருளிலிருந்து வெளிப்படும் ஆவியினைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது. சூரியனால் தான் எல்லாமே உருவாகிறது என்ற இந்த நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கூட நம்மை அறியாமலே
1.அச்சுறுத்தும் செயலையோ... அஞ்சி வாழும் செயலையோ
2.பயமுறுத்தும் உணர்வுகளையோ.. பயந்து வாழும் உணர்வுகளை
3.வெறுப்புட்டும் உணர்வையோ... வெறுத்து வாழும் உணர்வுகளையோ
4.இதைப் போல உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்கிறது.
5.இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது!

பொங்கலைச் சுவையாக உருவாக்கி அதை உணவாக உட்கொண்டு மகிழ்வது போல் நம் மனதிற்குள் வரும் மேலே சொன்ன அந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் சுவையாக மாற்றுகின்றோமா?

ஏனென்றால் ஒருவர் கோபித்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஒரு மிளகாயைத் தனித்து நாம் வாயில் போட்டால் எப்படி அந்தக் கார உணர்ச்சி இயக்கி "ஆ..." என்று அலறுகின்றோமோ இதைப் போல நம்மை இயக்குகிறது.

கோபப்படுவோர் எதையோ எண்ணியிருப்பார் அந்தச் சிந்தனை இல்லாது இருக்கும். அதனால் வேதனைப்பட்டு இருப்பார். வேதனையின் உணர்வுகள் உந்திய பின் சிந்திக்கும் தன்மை இல்லாததால் கோபத்தின் உணர்ச்சியை அவருக்கு ஊட்டுகின்றது.

அப்படி விளைந்த உணர்வுகள் அவர் உடல்களிலே பரவப்பட்டு அவர் உடலிலே இருக்கும் நல்ல அணுக்களுக்கு வேதனையும் கோபமும் தான் உணவாகப் போய்ச் சேர்கிறது. அதனால் தான் நல்ல உணர்வுகளை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

அவர் வெளிப்படுத்தும் அந்த மூச்சின் உணர்வை நாம் செவி கொண்டு கேட்டு நாம் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் சுவாசத்தின் வழி கூடி நம் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நமக்குள் மகிழ்ந்து வாழும் நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கிறத்.

தனித்து ஒரு மிளாகாயை வாயிலே போட்டால் "ஆ..." என்று அலறுவது போன்று நல்ல அணுக்கள் துடிக்க நேரும். நாளடைவில் அந்த அணுக்கள் பாழடைந்து விடும். அடுத்துச் சிந்திக்கும் தன்மை இழக்கும்.

சிந்திக்கும் உணர்வுகள் இல்லாது வெறுக்கும் உணர்ச்சிகளை நம் உடலிலே கூட்டி நம் உறுப்புகளும் சீராக இயங்காத நிலையே உருவாக்கி நோயாக உருவாக்கிவிடும்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க
1.ஈஸ்வரா! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்றும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்த்துச் சுவை மிக்க உணர்வுகளாக உருவாக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூட்டி வெறுப்பு என்ற நிலையை மாற்றி மகரிஷிகளைப் போன்று மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் அது நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்குமே மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டும். அது மகிழ்ந்து வாழும் போது நம் உடலும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறது.

ஒருவர் கோபப்படுகிறார்... நம்மிடம் அந்தக் குரோத உணர்வுடன் பேசுகின்றார்.. அதை நாம் நேரடியாகக் கேட்க நேர்ந்தால் அடுத்த கணம் நாம் என்ன செய்ய வேண்டும்...?
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் அவர் பெற வேண்டும்
4.அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்
5.அந்த உயர்ந்த நிலை அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால்
6.அவர் கோப உணர்வுகள் இயக்கி நம்மையும் கோபக்காரனாக மாற்றுவதற்கு மாறாக
7.அந்தக் கோபம் என்ற கார உணர்ச்சிகள் தணிந்து அருள் உணர்வுகளாக நமக்குள் பெருகி
8.அந்த நல்ல உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது
9.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அந்த மகிழ்ந்து வாழும் தன்மை பெறுகின்றது.
10.நம் உடலும் மகிழ்ச்சி பெறுகின்றது. நம் சொல்லும் செயலும் பிறரை மகிழ்விக்கும் உணர்வாக வெளிப்படுகின்றது.

ஆகவே பிறருடைய கோபத்தையோ சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையோ நாம் நுகரப்படும் போது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்குள் இணைத்துச் சுவையாக அதாவது நல்லதாக... நன்மை பயக்கும் சக்தியாக... “பல பொருள்களைச் சேர்த்துச் சுவையான பொங்கலாக எப்படி மாற்றுகின்றோமோ..” அதைப் போல நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்...!