கேள்வி:-
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தாய் சக்தி… ரிஷிபத்தினி சக்தி.. இரண்டையும் பெற்று
மகரிஷி என்ற நிலையை அடைய முடியும் என்கிறார். அந்தச் சக்திகளை நம்முள் எப்படி வளர்ப்பது
என்பது குறித்து விளக்கம் வேண்டும்.
பதில்:-
1. தாயின் சக்தி:
ஒரு தாய் தன் வாழ்க்கையில் எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தாலும் தனக்குள் பல கனவுகள்
இருந்தாலும் “தன் குழந்தைகள்…!” என்று வரும் பொழுது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும்
சரி அந்தப் பாசமே தனி.
1.அதை யாராலும் ஈடு செய்ய முடியாது.
2.சாதாரணமாக அந்தப் பாசத்தை மாற்றவும் முடியாது.
அதிலேயும் குறிப்பாகத் தனக்கு ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அதிலே எந்தக்
குழந்தை சிரமப்படுகின்றதோ அதன் மீது தாய்க்கு அதிகப் பாசம் வரும். (அந்தக் குழந்தை
தவறான வழியில் சென்றாலும் கூட)
ஏனென்றால் நன்றாக இருக்கும் குழந்தைகள் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். ஆனால்
தவறான வழியில் செல்லும் குழந்தை “கடைசியில் சிரமப்படுமே…!” என்று அந்தத் தாயின் பாச
உணர்வு அதிகமாக வேதனைப்படும்.
தாய்ப் பாச உணர்வின் இயக்கமே இப்படித்தான் இருக்கும்…! மனிதனுக்கு மட்டுமல்ல.
இயற்கையும் அப்படித்தான்…!
இப்படிப்பட்ட தாயின் பாச உணர்வை யாரெல்லாம் புரிந்து கொண்டு
1.தாயையும் காத்து (எந்தச் சூழ்நிலையிலும்)
2.தவறின் பாதையில் செல்லும் அந்தக் குழந்தைக்கும் நல் வழி காட்டிட உறுதுணையாகத்
தாயுடன் இணைந்து செயல்படுகின்றார்களோ
3.அவர்களுக்கெல்லாம் தாய் சக்தி அபரிதமாகக் கிடைக்கும்.
ஏனென்றால் ஒரு தாயற்ற குழந்தைக்குத் தாயாக இருந்து வளர்க்கும் பாசத்தின் செயலே
“இந்தத் தரணியின் இயக்கம்…!”
அந்தத் தரணியின் இயக்கத்தைப் போல் நம்மைப் பெற்று… தன் இரத்தத்தையே பாலாகக்
கொடுத்து வளர்த்து… ஆளாக்கி… மெய் ஞானப் பாதையைப் பெறும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக்
கொடுத்த
1.அந்தத் தாய் தெய்வத்தை உள்ளபூர்வமாக நாம் நேசித்து
2.அவர்கள் உயிரான்மா உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
3.அவர்கள் என்றுமே எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்றும்
4.ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்திக் கொண்டு வந்தால் தாய் சக்தியை நாம் முழுமையாகப்
பெற முடியும். (தாய் உடலுடன் இருந்தாலும் சரி… உடலுடன் இல்லை… என்றாலும் பெறலாம்)
2. ரிஷிபத்தினியின்
சக்தி:
எங்கேயோ பிறந்து வளர்ந்து வந்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குப் பின்
கணவன் மனைவியாக ஆன நிலையில்
1.மனைவியின் உணர்வைத் தனக்குள் இணைத்துக் கொண்டு
2.தன் மனைவியை உயர்த்தும் பேரன்பு கொண்டு கணவன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்
“பத்தினி…” என்ற நிலைக்கு வரும்.
தாய்க்கு எப்படித் “தன் குழந்தை…” என்று ஒரு பாசம் இருக்கிறதோ அதே போல் மனைவிக்குக்
கணவன் மீது ஒரு தனிப் பாசம் இருக்கும். அந்தப் பாசத்தை அன்பாக… பேரன்பாக… கணவன் பக்குவப்படுத்தினால்
மனைவியின் சுவாசம் என்றுமே கணவனுக்கு உறுதுணையாக இருக்கும்.
1.கணவன் மனைவி மீது செலுத்தும் அந்தப் பேரன்பும்
2.அதன் மூலம் இணைந்த நிலையில் வரும் மனைவியின் சுவாசமும்
3.இருவர் உடலுக்குள்ளும் கருவாக உருவாகும் பொழுது
4.இரு உணர்வும் ஒன்றாகும்… இரு மனமும் ஒரு மனமாகும்… இரு உயிரும் ஒன்றாகும்…!
5.அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து புறத்திலே குழந்தையை உருவாக்குவது போல்
6.இரண்டு உயிரும் ஒன்றாகக் கருவாகும்… பேரொளியாக மாறும்… மிகப் பெரிய பாதுகாப்புக்
கவசமாகும்…!
7.அது தான் சிவசக்தியின் சொரூபம் என்று சொல்வது…! ரிஷிபத்தினி என்பது இது தான்…!
சப்தரிஷிகளாக இருப்பவர்கள் அனைவருமே இந்த நிலையில் தான் உள்ளார்கள்.