ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2019

இறந்தவர்களைப் பாசத்துடன் நினைக்கலாமா...?


நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரோ அல்லது கணவன் மனைவியோ அவர்கள் உயிராத்மாக்களை தியானித்தின் மூலம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதற்குப் பின் அவர்களைப் பற்றிய நினைவுகள் வரப்படும் போது
1.அவர்கள் இருக்கும் போது நம் குடும்பம் எப்படியெல்லாம் இருந்தது...?
2.அவர்கள் நம்முடன் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களே...?
3.உடலோடு இருக்கும் போது நமக்கு உழைத்துக் கொடுத்தார்களே...! என்ற நினைவுகள் வரக்கூடாது. 

அவர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்கள். அந்தப் பேரருளுடன் அங்கே வாழ்கின்றார்கள். அந்த அருள் நிலையை நாமும் பெற வேண்டும். குடும்பத்தில் இருளை அகற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தான் எடுத்துப் பழகவேண்டும்.

அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் நாம் அருள் ஒளியை எடுத்து நமக்குள் கூட்டி இருளை அகற்றிடும் சக்தியாக ஆக்கிடல் வேண்டும். அந்த நிலையைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்...? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் உடலிலே இருந்த சங்கடங்கள் சலிப்புகள் வெறுப்புகள் வேதனைகள் போன்ற உணர்வுகள் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கும் போது
1.அவரை எண்ணி நமக்குள் சோர்வான உணர்வுகள் வரப்படும் போது
2.அவர் பட்ட நோயின் உணர்வுகள் நமக்குள் எளிதில் கவரப்பட்டு
3.நம்மை அறியாது வேதனைப்படும் அணுக்களாக மாற்றி நம்மைச் சீர்குலையச் செய்துவிடும்.
4.பண்புடன் வளர்ந்தாலும் அவர் உடலிலே விளைந்த நோயைத் தான் நாம் நுகர முடியும்.

ஆகவே இதை போன்ற தீமைகள் வராது நோய்கள் உள்ளே புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று காலை துருவ தியானத்தில் (4 மணியிலிருந்து 6 மணிக்குள்) நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாம் தியானிக்கும் போது நம் ஆன்மாவில் மற்ற தீமையான வேதனையான உணர்வுகளை உள்ளே இழுக்கக்கூடிய சக்தி குறைகின்றது.

நாம் எவ்வளவு நேரம் துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவருகின்றோமோ அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக எந்த தீமையும் வராது தடுக்க முடியும்.

ஆனால் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சிலருக்கு எண்ணங்கள் எங்கேங்கேயோ போகும். மற்றவர்கள் திட்டியது... குறையாகப் பேசியது..  கடன் கொடுத்தது... பணம் வராதது... என்று குடும்பப் பற்று கொண்ட உணர்வுகள் எத்தனையோ வரும்.

தியானத்தில் உட்கார்ந்ததும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகிறது என்றால்
1.உங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வின் அணுக்கள்
2.அதன் உணவுக்குத் தன் வலுவைப் பெறுகின்றது என்று தான் அர்த்தம்.

நாம் தியானிக்கும்போது இடை மறித்து இத்தகைய நிலை வந்தாலும் உடனே “ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரைத் தொடர்பு கொண்டு கண்களைத் திறந்து
1.அந்த அருள் ஒளி பெறவேண்டும்...
2.அது எங்கள் உடலிலே பெறவேண்டும் என்று
3.இதை உடலுக்குள் திணித்தல் வேண்டும்.

அந்த அருள் ஒளியை எடுத்து இபப்டித் திணிக்கப்படும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதற்கு ஆகாரம் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நாம் வலுக் கொண்டு மீண்டும் மீண்டும் எடுத்துச் செயல்படும் போது அந்தத் தீமைகள் பிடிப்பற்று விடுகின்றது.
1.காலையில் (6 மணிக்கு மேல்) சூரியன் இதை இழுத்துச் சென்று விடுகின்றது.
2.நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.