ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2019

நம்முடைய குணங்கள் எல்லாம் எப்படி மாற்றமடைகிறது...? நல்லதாகவே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?


ஒருவர் மற்றொருவரை வேதனைப்படுத்துகிறார் என்று உற்றுப் பார்க்கின்றோம். “பாவிப்பயல்...! இப்படி வேதனைப்படுத்துகின்றானே...!” என்று எண்ணுகின்றோம்.

பிறரை வேதனைப்படுத்தும் போது அதை நாம் கூர்மையாகப் பார்க்கும் போது அந்த மனிதனை நம் கண்ணின் கரு விழி ருக்மணி படமாக்கி எலும்புக்குள் ஊனாகப் ப்திவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் அந்த மனித உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது. இதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இந்தக் காற்றிலே வைத்துக் கொள்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை (அதாவது அதனின் சத்தை) சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதே சமயம் அந்தச் செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றும் போது சூரியனால் ஏற்கனவே கவரப்பட்ட அந்தச் சத்தினை இந்த வித்து தனக்குள் கவர்ந்து அதே செடியைப் போன்று விளைகின்றது.
                                                    
இதைப் போன்று தான் வேதனைப்படும் உணர்வுகள் ஒரு மனிதனுக்குள் விளைந்து அது சொல்லாக வெளிப்படும் போது நாம் அவனைக் கூர்மையாக பார்த்து அவன் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நமக்குள்ளும் அதே  உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.வேதனைபடுபவனைப் பார்த்து நாம் அனுசரிப்போம். அவன் வேதனையால் அழுவான்.
2.அதை வைத்து வேதனைப்படுத்துபவனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்கிறாய்...?” என்று நாம் கேட்கத் தொடங்குகின்றோம்.  
3.அப்பொழுது வேதனைப்படுத்தும் உணர்வும் வேதனைப்படும் உணர்வும் நம் உயிருக்குள் படுகிறது.
4.இந்த இரண்டு உணர்வும் கலந்த பின் இது பிரம்மமாக (சிருஷ்டி) உருவாகிறது.

வேதனைப்படுபவன் வேதனைப்படுத்துவனை எண்ணி அந்த வேதனை ஒன்றைத் தான் நினைக்கின்றான். அதனால் வேதனைப்படும் உணர்ச்சியை அவனுக்குள் தூண்டுகின்றது.

வேதனைப்படுத்துபவனோ வேதனைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றான். அந்த உணர்ச்சிகளை அவனுக்குள் தூண்டுகிறது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்த இரண்டையும் நுகர்ந்து சிந்திக்கும் பொழுது நமக்குள் இது புது குணமாக புது அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.

வேதனயால் வாடுபவனை அங்கே காக்க எண்ணுகின்றோம். அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் உருவாகின்றது. அந்த நேரத்தில் நியாயத்தையும் பேசுவோம். ஆனால் நாம் வேதனைப்படவும் செய்வோம்.

வாழ்க்கையிலே நான் நியாயத்தைப் பேசுகிறேன்...! என்று சொல்லலாம். அதே மாதிரி அயோக்கியத்தனம் செய்கின்றான்...! என்றும்  சொல்லலாம்.

ஆக அயோக்கியததனம் செய்பவனையும் அதனால் வேதனைப்படுபவனையும் இந்த இரண்டையும் சேர்த்து நாம் நுகர்கின்றோம். இந்த இரண்டையும் சேர்த்துத் தான் நாம் நியாயத்தை வாதிக்கின்றோம். இந்த வலு நம்மிடம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது எப்படிப் பேசுவோம்...? நம்மை அறியாமல் இந்த இரண்டு உணர்வையுமே சொல்வோம்.
1.வேதனை உணர்வையும் சொல்வோம்...
2.வேதனைப்படுத்துவது நியாயமா...? என்று அதையும் அதிகமாகச் சொல்வோம்.

இரண்டும் இப்படிக் கலந்து வந்த பின் நம் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் அதற்கு உணவு தேவை.

உதாரணமாக ஒரு செடிக்குள் மற்ற செடியின் ஜீன்களை (GENE) இணைத்து விட்டால் இது இரண்டும் கலந்து எந்த ஜீன் அதிகமாக வளர்ந்துள்ளதோ அதற்கொப்ப அந்த மலரின் தன்மையும் அதிலே விளையும் காயின் சுவைகளும் மாறுகின்றது.

இதைப் போல உயிரினங்களில் எடுத்துக் கொண்டாலும் ஒரு உயிரினத்திலிருக்கும் அணுக்களின் சிசுக்களை எடுத்து இன்னொரு உயிரினத்தில் இணைக்கப்படும் போது இரண்டு சிசுக்களும் ஒன்றாகி
1.புதுவிதமான உடலின் அமைப்பைப் பெறுகின்றது....
2.குணத்தின் தன்மைகளும் மாறுகின்றது...!

விஞ்ஞான அறிவில் பார்க்கலாம்... கொடூர குணம் கொண்ட மிருகங்களைச் சாந்தமான மிருகமாக மாற்றுகின்றார்கள். பரிணாம வளர்ச்சியில் இப்படி வருகிறது...!

இதைப் போல நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அத்தனையும் நமக்குள் கலந்து...கலந்து கலவையாகிப் புதிய குணங்களாக அணுக்கள் உருவாகிறது. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாறாது காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் ஞானிகள் உணர்வை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்.

வீட்டிற்குள் தூசி வந்தால் மீண்டும் மீண்டும் அதைத் தூய்மையாக்கிக் கொண்டே இருப்பது போல்
1.அன்றாட வாழ்க்கையில் நமக்குள் நாம் நுகர நேரும் எல்லாக் குணங்களுக்குள்ளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

அவ்வாறு இணைத்தால் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளையும் ஒன்றாக்கிப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து பேரொளியாக நாம் மாற முடியும். அழியாத ஒளியின் சரீரம் பெறலாம்.