ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2019

வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும் தோல்வியாகவே ஆகிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு…!


கேள்வி:-
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே…! நான் என்ன செய்வது…? நான் என்ன செய்ய வேண்டும்.?

என்னை நான் முழுமையாக நம்புகிறேன். என்றாவது ஒருநாள் எனக்கு வழி பிறக்காதா என்ற நிலையில் இருக்கிறேன். தியானத்தால் உயர்வுக்கு வர உதவுங்கள். தியானத்தில் முழுமையான ஈடுபாடு வேண்டும்…! அதற்கு என்ன செய்ய வேண்டும்…?
பதில்:-
சிரமமே படாது எந்தக் காரியமும் செய்ய முடியாது. சிரமப்பட்டுச் சாதித்தால் அதை என்றுமே மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். வாழ்வாங்கு வாழலாம்.

சிரமமில்லாது கிடைக்கும் எந்தச் சுகமும் சந்தோஷமும் நீடித்து இருப்பதில்லை. இதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிறந்த குழந்தை தவழ ஆரம்பித்து எழுந்து நடக்க வேண்டும் என்ற நிலையில்
1.பல தடவை கீழே விழுந்து
2,அடி பட்ட பின் தான் சீராக அது நடக்கின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு முறை அடிபடும் பொழுதும் அதற்கு வேதனை வருகிறது. அந்த வேதனையை அனுபவித்து இப்படிச் செய்ததால் தான் இப்படி அடி பட்டது என்று அந்த ஞானங்கள் வளர்ந்து வளர்ந்து தான் அது நடக்கின்றது.

கீழே விழுகாமலேயே அந்தக் குழந்தை நடக்க முடியுமா என்றால் அது வராது. இது எல்லாம் இயற்கையின் நியதி.
1.சத்ரு மித்ரு, நன்மை தீமை, +ve –ve (positive negative) என்று
2.நம் உயிரே இப்படிப்பட்ட மாறுபட்ட இயக்கத்தினால் தான் இயங்கிக் கொண்டே உள்ளது.
3.இயக்கம் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்றால் மோதல் அவசியம்.
4.மோதல் நடக்க வேண்டும் என்றால் எதிர் நிலை இருக்க வேண்டும்.
5.வெற்றி வேண்டும் என்றால் அங்கே தோல்வி இருக்க வேண்டும்.
6.தோல்வி அடைந்தால் தான் வெற்றிக்கு அது வித்தாகவே மாறும். (இது மிகவும் முக்கியம்)

இன்று ஞானிகளாக இருப்பவர்கள் அனைவருமே பல கோடி இன்னல்களைப் பட்டு அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற விடா முயற்சி செய்து (அது தான் கடும் தவம் என்பது – காட்டுக்குள் கண்ணை மூடி உட்கார்ந்து அல்ல)
1.இன்னல்களைக் கண்டு சோர்வடையாமல்
2.வீரிய உணர்வு கொண்டு வீரத்தைச் சாந்தமாக்கி
3.அதன் மூலம் அவர்கள் புலனறிவை எட்டாத விண்ணிலே செலுத்தி
4.எந்தச் சக்தி உயிரின் இயக்கத்திற்குக் காரணமாக இருந்ததோ அந்த ஆற்றலை நுகர்ந்து
5.அந்த உயிர்ச் சக்தியை வளர்த்து தன் சுவாச நிலையைச் சீராக்கி மெய்யை உணர்ந்தார்கள்.

மெய்யை உணர்ந்து எது நிலையானது என்று அறிந்த பின் இந்த உடலை வைத்து உயிரான்மாவை ஒளியாக மாற்றி “சட்டையைக் கழற்றுவது போல் உடலைக் கழித்து விட்டு…!” உயிருடன் ஒன்றி ஒளியாக நட்சத்திரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எடுக்கும் முயற்சி எல்லாம் தோல்வியே என்பது தான் நீங்கள் கேட்ட கேள்வி. அதில் அழுத்தத்தை எங்கே கொடுக்கின்றீர்கள்…? தோல்விக்குத் தான் கொடுக்கின்றீர்கள்.

இதிலே அழுத்தம் என்பது என்ன…?

உங்கள் உயிர் நெருப்பு. நெருப்பிலே எதைப் போடுகின்றோமோ அதை வேக வைக்கும் அந்த மணத்தை வெளிப்படுத்தும். யார் சுவாசித்தாலும் அந்த மணம் தான் வரும்.

 உங்கள் உயிர் என்ற நெருப்பைப் பயன்படுத்தித் தோல்வியாக்கும் உணர்வையே மீண்டும் மீண்டும் சமைக்கின்றீர்கள். அதனால் தான் திரும்பத் திரும்ப அந்த மணம் வருகிறது. உங்களைத் தோல்விக்கு அழைத்துச் செல்கிறது. நான் என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோல்வி தான் வரும் என்று உங்களைச் சொல்லச் சொல்கிறது.

ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தோல்வி அடைந்ததைப் பார்த்ததனால் தானே அப்படிச் சொல்கிறேன். எனக்கு மட்டும் நல்லது ஆக வேண்டும் என்ற ஆசை இல்லையா…! என்பீர்கள்.

1.ஆசை என்பது வேறு அழுத்தம் என்பது வேறு.
2.ஆசையை நல்லதுக்கும் அழுத்தத்தைத் தோல்விக்கும் கொடுத்தால் நல்லது நடக்காது.
3.அது மட்டுமல்ல. நல்லது நம் கண்ணுக்குப் படவே படாது.
4.நல்லது கண்ணுக்குப் படாததனால் தான் தோல்வி தோல்வி தோல்வி தோல்வி என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்…!

நம்முடைய ஆசை நல்லதைப் பெற முயற்சி செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும். இது மட்டும் நல்லபடியாக நடந்து விட்டால் என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்…! என்று கனவு காணுவதாக இருக்கவே கூடாது.

ஏனென்றால் மனித வாழ்க்கையில் ஒன்று கிடைத்தவுடன் என்ன செய்வோம்..? கிடைக்காத அடுத்த விஷயத்தை எண்ணி ஏங்கிக் கொண்டிருப்போம்.
1.இது கிடைத்து விட்டது
2.அது கிடைத்தால் இன்னும் கொஞம் நன்றாக இருக்கும்…! என்று இப்படியே போய்க் கொண்டிருப்போம்.
3.கிடைத்ததை வைத்து நன்றாக இருப்போம் என்ற நிறைவு வருவதே இல்லை…!

குடிசை வீட்டில் வயலில் வேலை பார்த்து விட்டு பசியுடன் வந்து கிடைத்தைதைச் சாப்பிடுபவனிடம் இருக்கும் மகிழ்ச்சி இந்த நாட்டையே ஆள்பவனுக்கோ… உலகிலேயே அதிகமான பணம் வைத்திருப்பவன் என்று சொல்பவனுக்கோ… இருப்பதில்லை... இல்லை…! இது தான் உண்மை…!

ஏனென்றால் நாட்டை ஆள்பவனுக்கு தன் பதவியைக் காக்க வேண்டும் என்ற வேதனை. பணம் வைத்திருப்பவனுக்கோ இதை விட்டு விட்டால் வேறு எவனாவது நம்மை முந்திச் சென்றுவிடுவானே என்ற வேதனை.

அவர்கள் ஆசை எல்லாம் எப்படி இருக்க வேண்டும்…!

நம்மைக் காட்டிலும் ஒருவன் இந்த நாட்டை நல்லபடியாக ஆள்வான் ஆள வேண்டும் என்றும்… இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மைக் காட்டிலும் செல்வந்தர்களாக வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
1.இப்படி இருந்தால் மகிழ்ச்சி தன்னாலே வரும்.
2.படுத்தால் உடனே தூக்கமும் வரும்.
(“இதைத்தான் அழுத்தம் என்று சொல்கிறேன்…!)

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே இந்த அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் மற்றவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் தான் பெற்ற அனைத்து ஆற்றல்களும் சாதாரண மனிதனும் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள் (ஆசையை அல்ல…!)

அந்த ஞானிகளின் உணர்வுகளை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நாம் உயிர் வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும். அது தான் அழுத்தம். நம்முடைய முயற்சி அதைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்.

உங்கள் கேள்விப்படி… நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். முயற்சியும் செய்கிறீர்கள்.
1.ஆனால் அழுத்தத்தை தோல்விக்குக் கொடுக்கின்றீர்கள்.
2.தோல்வி ஆகி விட்டால் சிக்கலாகுமே என்று வேதனையுடன் தான் முயற்சி செய்கிறீர்கள்.
3.ஆக மொத்தம் அழுத்தம் வேதனைக்குத்தான் செல்கிறது.

அந்த இடத்தில் ஈஸ்வரா………! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே அழுத்தமாக எண்ணி பூமியின் வட திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால்
1.உங்கள் ஒட்டு மொத்த தோல்வி அடைந்த வேகத்தை
2.அந்த உணர்ச்சிகள் கொண்டு… “வேகம் அடங்கும் வரை மோதினால்…”
3.அங்கிருந்து உங்களுக்கு உயிர்ச் சக்தி கிடைக்கும்.

அந்த அகஸ்தியர் பெற்ற பேராற்றல்கள் உங்கள் சுவாசத்தில் கலந்து… உயிரில் பட்டு… வாயிலே உமிழ் நீராக மாறி… உடலுக்குள் ஒளியான அணுவாகத் துருவ நட்சத்திரத்தின் அணுவாகக் கருவாகும்…! அந்த அணுக்களின் பெருக்கம் அதிகமாகும்.
1.உங்கள் காரியம் தோல்வி அடைந்தது.
2.ஆனால் அதற்குப் பதில் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே அதிகமாகப் பெருகியது.

இப்படியே இது நடக்க நடக்க துருவ நட்சத்திரத்தின் அணுக்கள் உங்களுக்குள் ஞானத்தின் உணர்வைத் தூண்டி உங்களைக் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும்.  

நீ இதை இப்படிச் செய்ததால் தான் உனக்குத் தோல்வியானது. அதில் நீ இந்தத் தவறைச் செய்திருக்கிறாய். இதை இப்படி மாற்றி இந்த எண்ணத்துடன் இந்த முறைப்படி செய்…! என்று சொல்லும் அல்லது உள் உணர்வாக உணர்த்தும்.

தொடர்ந்து துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளும் எண்னங்களும் மோத மோத அதன் வழி நீங்கள் செயல்படத் தொடங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். அந்த அனுபவத்தின் மூலம் உங்கள் காரியம் எல்லாமே சீராக நடக்கும்.

இது தான் நீங்கள் கேட்ட தியானத்தில் உயர்வு… தியானத்தில் முழுமை… தியானத்தில் வழி பிறக்காதா…! என்பது. ஏனென்றால் அருளைப் பெருக்கும் பொழுது தான் இருள் விலகும்.
1.இருள் வரும் பொழுது இருளை நீக்க
2.அருளைத் தான் தேட வேண்டும். இது தான் அழுத்தம்...!

இருள் வரும் பொழுது மீண்டும் இருள் வந்துவிட்டதே…! என்று எண்ணினால் அது ஆசை. நல்லதைப் பெறவேண்டும் என்ற அழுத்தம் நற்சக்திகளைச் சேர்ப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர நல்லதைப் பெறவேண்டும் என்ற ஆசையையும் எதிர்பார்ப்பையும் கூட்டிக் கொண்டு ஏமாற்றமாகி… நிராசையாகி… கெட்ட சக்திகளைச் சேர்ப்பதாக இருக்கவே கூடாது.

இதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை என்பது எல்லாமே கலந்தது தான்,
1.வளர்ப்பதற்காகத் தான் இயற்கை மீண்டும் மீண்டும் படைக்கின்றது.
2.அழிப்பதற்காக அல்ல.

இந்தப் பேருண்மையை அறிந்த அந்த ஞானிகள் இயற்கையுடன் இணைந்து அதை வளர்க்கும் செயலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றும் பதினாறாக அழியாத வாழ்க்கையாக எகாந்தமாக வாழ்கிறார்கள்.