ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2019

நீங்கள் எதை எண்ணி எம்மிடம் வருகின்றீர்களோ அதைத்தான் பெற முடியும்


1.தீமையை நீக்கக்கூடிய அருள்சக்தி கொடுங்கள்,
2.தெளிவாக நாங்கள் வாழவேண்டும் என்று கேட்பார் யாரும் இல்லை.

நோயைப் போக்கக்கூடிய சக்தி வேண்டும், அந்த அருள் ஞானம் வேண்டும், நாங்கள் அருள் வாழ்க்கை வாழவேண்டும், அதன்படி நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் அந்த ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று வாங்கி அதைப் பின்பற்றினால் அந்த முறையில் எடுத்தால் உங்கள் நோயை உங்களால் போக்க முடியும்.

நோயை நீக்கிய அந்த உணர்வை நீங்கள் மற்றவருக்குச் சொல்லிப் பாருங்கள். போகிறதா இல்லையா…? என்று பார்க்கலாம்.

1.உங்கள் உணர்வை வைத்து உங்களைக் காக்க முடியும்
2.உங்கள் சொல் செயல் மற்றவர்களையும் காக்கச் செய்யும்.
3.இதைத்தான் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் நான் விரும்புகின்றேன்.

உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன். இந்த உலகில் எப்படி வாழ்கிறோம்…? இனி எப்படி வாழவேண்டும்…? இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நம்மை அறியாது வரும் தீமையிலிருந்து நம்மை மீட்டிக்கொள்வதற்கு நமக்குப் பாதுகாப்பு தேவை. அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும் என்ற சக்தியை எல்லோருக்கும் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எல்லோரும் நுகருங்கள். உங்களுக்குள் தீமை புகாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையால் உங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ளுங்கள்.

ஆகவே
1.தீமையை நீக்கும் அருள் சக்தி  வேண்டும்,
2.கஷ்டத்தை நீக்கும் அருள் சக்தி வேண்டும்,
3.நோயை நீக்கும் அருள் சக்தி வேண்டும் என்று எண்ணி என்னிடம் கேட்டு வந்தால்
4.அதை நான் கொடுக்கலாம்.

ஆனால் போகவே மாட்டேன் என்கிறது…! என்று நீங்கள் கேட்டால் நான் எப்படி அதைக் கொடுக்க முடியும்?

இதை எதற்குச் சொல்கிறேன் என்று சொன்னால் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது, எப்படிச் சொல்ல வேண்டும்…?

அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் உங்களுக்கு நல்லதாகும். “தீமையை நீக்கும் அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்” என்ற ஆசீர்வாதம் மட்டும் சாமியிடம் வாங்கிக் கொண்டு வாருங்கள்.
1.அவர் சொல்லும் வழியில் நீங்கள் நடந்தால், உங்களுக்கு நல்லதாகும் என்று
2.இப்படித்தான் சொல்லிப் பழகவேண்டும்.

அதைவிட்டுவிட்டு, “சாமியிடம் போங்கள்… அவர் காப்பாற்றுவார்…!” என்றால் அவரவர்கள் ஆசையின் நிலையில்தான் வருவார்கள். பின் எப்படி நல்லதாகும்…?