ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2019

துன்பங்களையும் துயரங்களையும் தணியச் செய்து நல்லதாக மாற்றும் சக்தி...!


காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்... காரம்... என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்...!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால் பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும்   கேட்டறிந்து
1.அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா...!

அடுத்த கணமே ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

 அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

"பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்...!" என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக... நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

இத்தகைய நிலைகளை நம் உடலுக்குள் உருவாக்கினால் தீமையை அகற்றிடும் வலிமை பெற்று இந்த உடலை விட்டுச் சென்ற பின் நமது உயிரான்மா ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்கிறது.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்...!