ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2019

மற்றவர்கள் செய்யும் குற்றத்தை நாம் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டினால் என்ன ஆகும்…?


நாம் தவறு செய்யாமலேயே பிறர் செயும் தவறைக் கண்ணுற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். ஒரு பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்…! உங்கள் வீட்டில் நீங்களும் சண்டை போட்டு விடுவீர்கள்.

அப்படிப் பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்தபின் உங்கள் உடலில் கை கால் குடைச்சல் வரும்தலைவலி வரும்…! உங்களை அறியாமல் இனம் புரியாத எத்தனையோ நிலைகள் வரும்.

ஏனென்றால் கூர்மையான உணர்வின் தன்மைகள் நம்மை அறியாமலேயே நமக்குள் வந்து நமக்குள் பல தீய நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும்.

நாம் நல்லதை எண்ணும்பொழுது குறையினுடைய உணர்வுகளை நாம் சுவாசித்து விடுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றவுடன் பல நோய்களாக மாறி விடுகின்றது.

எதைத் தவறென்று சொல்லுகின்றேனோ அந்தத் தவறான செயலைச் செய்யும் நிலைக்கே நான் வந்துவிடுகின்றேன்.

எதையெல்லாம் தவறென்று சொல்லுகின்றேனோ
1.எதையெல்லாம் தவறென்று சுட்டிக் காட்டுகின்றேனோ
2.நான் சுட்டிக் காட்டக் காட்ட.. இந்த உணர்வின் சக்தி எனக்குள் கூடி
3.அதே தவறை  செய்யும் நிலைக்கு என்னை இட்டுச் செல்கின்றது.
4.சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற நிலைக்குத் தான் நாம்  வந்துவிடுகின்றோம்.
5.நமது குருநாதர் இந்த உணர்வின் செயல்கள் எல்லாம் எப்படிச் செயல்படுகின்றது என்ற பேருண்மையைக் காட்டினார்.

நாம் பாசத்தின் நிலைகள் கொண்டு மக்களிடம் ஒன்றி வாழும் பொழுது வரக்கூடிய உணர்வுகளிலிருந்து மீண்டு வருவதற்கு அன்று மகரிஷிகள் கொடுத்த அந்த மெய் ஞானத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும். ஆத்ம சுத்தி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஓ...ம் ஈஸ்வரா...என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திருப்பித் திருப்பி உடலுக்குள் அந்தச் சுவாசத்தைச் செலுத்த வேண்டும்.

உங்கள் துன்பங்கள் அனைத்தையும் துடைக்க முடியும்.