ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2019

நம்மை நாம் ஆள்கிறோமா... அல்லது நாம் சுவாசித்த பிறிதொரு சக்தி நம்மை ஆள்கிறதா...?


சுவாசித்தது நம்மை இயக்கினாலும் நாம் எதை இயக்க வேண்டும்

நம்முடைய மனித வாழ்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளை ஒவ்வொரு நாளும் சந்திக்க நேருகின்றது.

உதாரணமாக... நம்மை யாரும் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை...! ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏசிப் பேசுவார். நாம் அதைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு நுகர்ந்து கொண்டிருப்போம். அதன் உணர்வை நாம் நுகர்ந்த பின் நமக்குள் என்ன நடக்கிறது...?

1.அவர்களுக்குள் ஏசிப் பேசிய உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகிறது. 
2.அதனின் உணர்வின் தன்மை நாம் வளர்க்க நேர்கின்றது.
3.“இப்படிப் பேசுகின்றான்... இப்படிப் பேசுகிறானே..!” என்று நாமும் உணர்ச்சி வசப்படுகின்றோம்.

பிறர் கெட வேண்டும் என்ற உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிகின்றார்கள்.
1.நாம் காது கொண்டு கேட்கின்றோம்.
2.மூக்கின் வழி சுவாசிக்கின்றோம்.
3.நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது.
4.உயிரிலே படும் அந்த உணர்ச்சிகள்தான் அப்பொழுது நம்மை ஆளுகின்றது.

எப்படிப் பேசுகிறான் பார்...! இவனை எல்லாம் நாம என்ன செய்ய வேண்டும் தெரியுமா...? என்கிற அந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது... நம்மை ஆளுகின்றது... நம் உடலாக்குகின்றது.

ஆகவே இத்தகைய தீய உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணினோம் என்றால்... அது நம் உடலிலே பெருகி விட்டால் என்ன செய்யும்..?

அதே தீமையின் செயலாகத் தான் நம் சொல்லும் வெளிப்படத் தொடங்கும்.
1.அடுத்து நம் சொல்லைக் கேட்போரிடத்திலும் நம்மை எதிரியாக்கும்.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள்ளேயே எதிரி ஆகும்.
3.நம்முடைய நல்ல அணுக்களை இது கொல்ல நேரும்.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் என்ன செய்கிறது...? தீமைகளின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது. நன்மையின் உணர்வை அது இழக்கச் செய்கின்றது.

அதே போல் நாம் ரோட்டில் சென்று கொண்டிருப்போம். நமக்கு முன்னாடி ஒருவன் போய்க் கொண்டிருப்பான். அவன் சிந்தனை எங்கோ இருக்கும்.

எதிர்த்து  வரும் வண்டியைப் பார்க்காதபடி அதன் மேலே மோதப் போவான். போகிறான் பார்...! ரோட்டிலே எப்படிப் போகிறான்...? என்று அவன் செயலைக் கண்டு நாம் நுகர்ந்து அறிகின்றோம்.

அதை நுகர்ந்து அறியப் போகும் போது அதே உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது... நம்மை ஆளுகின்றது...! அவன் அருகிலே சென்று "ஏனப்பா கொஞ்சம் பார்த்துப் போகக் கூடாதா..." என்று நாம் சொல்ல நேரும்.
1.அப்பொழுது அங்கே எது நம்மை ஆட்சி புரிகின்றது...?
2.அவனுடைய சிந்தனையற்ற உணர்வு நம்மையும் இயக்கி ஆள்கிறது.

ஒரு குடும்பத்தில் சண்டையிடுகின்றனர். அதைக் கேட்டு நுகர்கின்றோம் நுகர்ந்த பின் என்ன சொல்கிறோம்...?
1.பக்கத்து வீட்டிலே பார்!
2.எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்...! என்று சொல்லி விட்டு
3.அவர்கள் சண்டையிடும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம்.

இந்த உணர்வை எடுத்து அடுத்தவர்களுக்குச் சொல்லப்படும் போது அதை நமக்குள் வளர்த்து அதிகமாகப் பெருக்கிக் கொள்கின்றோம். இப்படி நமது வாழ்கையில் ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு நாளும் நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஆனால் நாம் எதை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோமா...?

ஆகவே மனிதனின் வாழ்கையில் நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
3.அருள் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.