ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2017

“ஒருவர் தவறு செய்கிறார்..." என்றால் அதை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும்...?

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்?

வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.

எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.

1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான்
3.நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்
4.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.

பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.

இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.

பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.

ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்
1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்?
2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்?
3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள் தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று அறிகின்றோம்.

அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.

அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.

“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்
1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.
4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.
5.தெளிந்த மனம் பெற வேண்டும்
6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது
7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்
8அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.

நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது”.

அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து
1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது
2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்
3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.

நாம் எந்த நல்லதைச் சொல்கிறோமோ அதை அவன் நுகரும் தன்மை வருகிறது. நாம் சொல்லும் நல்லது அவனுக்குள் உருவாகத் தொடங்கும். 

ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.