ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2017

நம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”

சிலர் வியாபாரத்திலேயோ மற்ற நிலைகளிலோ அவர்கள் எடுத்த சுவாசத்தாலே எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?

அவர்கள் மேல் இர்ககப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் இருந்துவிடக் கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலுக்குள் செலுத்திவிட்டு
1.இனி உங்களுக்கு அந்தத் துன்பம் இல்லை
2.இனி நன்றாக இருப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

ஆனால் வெளியில் இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் அதிகமாக வரும்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும்.

சந்தோஷமாக இருந்திருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டால் நம்மையறியாமலே நாம் இந்த நிலைகளைப் பேசிக் குடும்பத்திற்குள்ளே வெறுப்பான உணர்வுகள் வந்துவிடும்.

வெறுப்பு ஒவ்வொருவர் உடலிலும் வளர்த்து அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நம்மையே வெறுக்கச் செய்யும் நிலையாகிவிடுகின்றது.

பின் நமக்குள் அந்த உணர்வுகள் நோயாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தியானமெடுக்கும் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தில் யார் சிறிதளவு பிழைகள் செய்தாலும உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.

1.நமக்குள்ளே இரு மனங்கள் கொண்டு
2.நாம் செய்வது தவறு என்று இருந்தாலும் கூட
3.அந்தத் தவறை உணராதபடி அது அடங்கி
4.அந்தக் காரமான தவறான உணர்வுகள் முன்னின்று இயக்கி,
5.நம்மை அதன் வழிகளிலே இட்டுச் சென்றுவிடுகின்றது.

பாலுக்குள் இனிப்பைப் போட்டு அதற்குள் காரத்தைப் போட்டால் காரத்தின் சுவைதான் முன்னாடி தெரியும்.

அதைப் போன்று நாம் நல்ல மனிதர்களாகவும் இரக்கமும் ஈகையும் உள்ளவர்களாக இருந்தாலும் இந்த நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே இந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது சந்தர்ப்பங்களில் பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டுவிடுகின்றது.

அந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மாற்றி நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.

நம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.

1.பின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது
2.சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்
3.அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது
4.அந்த உணர்வுகள் பூமியிலேயும் (தரையிலும்) பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின் நம் உடலிலிருந்து வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு அந்தக் கடுகடுப்பும் ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.

ஆக அப்பொழுது நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வைச் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

பூமி எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான்
1.நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது.
2.நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து, 
3.நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.

இதை நாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

வீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து உங்கள் உடலைத் தியானித்துவிட்டு உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.

வீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

1.இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி
2.உங்கள் வீடு முழுவதற்கும் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் கூடி நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவையும் வீட்டையும் உடலையும் நாம் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.