ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2017

ஆரம்பத்தில் நான் எங்கே சென்றாலும் நாய் என்னை விரட்டும் – நாயிடமிருந்து எப்படி விலகிச் செல்ல வேண்டும் என்று சில சக்திகளைக் கொடுத்து அதன் மூலம் குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

யாம் இராஜரத்தினம் மில்லில் வேலை பார்க்கும்போது அங்கிருந்த சூப்பர்வைசர் மகன் சாராயக் கடை எல்லாம் வைத்து நடத்திக் கொண்டிருந்தான்.

அவன் என்ன செய்தான்? என்னிடம் அவன் வரும் போது கொஞ்சம் மரியாதையாக இருப்பான். அல்சேஷசன் நாய் ஒன்று அவன் வைத்திருந்தான்.

அப்பொழுது குருநாதர் அங்கே வந்து என்னைக் கடுமையாகத் திட்டிக் கொண்டு இருக்கின்றார். குருநாதர் என் வீட்டுச் சந்துக்கு முன்னாடிதான் நின்று என்னைப் பயங்கரமாகத் திட்டிக் கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த அந்தச் சூப்பர்வைசர் மகன்… இந்தக் கிழட்டுப் பயலுக்குப் பார்… பிடிடா…! “அவரைப் பிடிடா…” என்று அவன் தன் நாயிடம் சொன்னான்.

அந்த நாய் என்ன செய்தது?

“பிடிடா…!” என்று சொன்னவுடன் குருநாதரை ஒரு சுற்றுச் சுற்றி வந்து அவனையே (பிடிக்கச் சொன்னவனை) பிடிக்கின்றது.

துரத்து…துரத்து… என்று துரத்த ஆரம்பித்தது. “அட.., நன்றி கெட்ட நாயே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறான்,

ஓடினாலும்…. அவனை நாய் விடமாட்டேன் என்கிறது.

அவன் போட்டிருந்த சட்டை எல்லாம் கிழித்துவிட்டது. குருநாதர் சிரிக்கிறார்.

கடைசியில் அந்த ஆள் அரிவாளை எடுத்துத் தன் நாயையே வெட்டி விட்டான். நான் வளர்க்கிறேன்….! என்னையே இந்த மாதிரிச் செய்கிறது… என்று அதைக் கொன்றுவிட்டான்.

அந்த மாதிரி குருநாதருடைய புத்திகள் அந்த இடத்தில் இந்த மாதிரிச் செய்தார்.

இப்படி குருநாதர் செய்வதை எல்லாம் பார்த்திருக்கின்றேன். பழகியிருக்கின்றேன் அல்லவா…  ! நான் எங்கேயாவது தனியாகப் போனால் என்னை நாய் விரட்டிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது குருநாதர் செய்கிற மாதிரி செய்து பார்க்கிறேன். நாய் ஒன்றும் “நிற்க மாட்டேன்…” என்கிறது.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் எங்கே சென்றாலும் நாய் விரட்டிக் கொண்டே வரும்.

அப்புறம் நான் குருநாதரிடம் “சாமி… நாய் விரட்டிக் கொண்டே வருகிறது. என்ன செய்வது…?” என்றேன்.

நீ ஏதாவது திட்டி இருப்பாய்… அதனால் அது விரட்டுகிறது. நீ குறும்புத்தனம் செய்யாதபடி “அது சும்மா விரட்டாது…” என்றார்.

எனக்கு அப்பொழுது குருநாதர் முழு சக்தியும் (POWER) கொடுத்திருக்கிறார். என்ன பவர் கொடுத்திருக்கிறார்?

நாய்க்கு இந்த நிலையைச் செய்தாய் என்றால் கால் முடமாகும். அது வாய் நின்று போகும். அப்படியெல்லாம் செய்யலாம் என்று சக்தி கொடுத்திருக்கிறார்.

இதைச் சொல்லிக் கொடுத்தாலும் அடுத்து இன்னொன்று என்ன சொல்கிறார்?
1.நீ இந்த மாதிரிச் செய்தால்
2.அந்த நாயின் நினைவெல்லாம் உன் மீது தான் இருக்கும்.

நாய்களுக்கு மோப்பச் சக்தி ஜாஸ்தி.

அது உன்னை நினைத்தது என்றால் அது உடலில் உருவாகின்ற அணுக்களெல்லாம் உன் உடலில் உருவாகும். நாயின் வாயை நீ அடக்கின மாதிரி கடைசியில் “உன் வாயும் அப்படியாகிவிடும்” என்று சொல்கிறார்.

சக்தியை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்? என்று சொல்லிக் கொடுத்துவிட்டு அதைச் செய்தால் இப்படி ஆகிவிடுவாய் என்று இதையும் சொல்கிறார்.

நாயின் வாயை நீ அடக்கினாய் என்றால் அது எச்சில் ஒழுகும். அதில் இருந்து காற்றில் பரவும். அது உன்னையே நினைக்கும். மோப்பச் சக்தி ஜாஸ்தி. அதனின் விளைவு என்ன செய்யும் என்றால் இப்படித் தான் வரும்.

1.வாயை அடக்கும் சக்தி கொண்டு நீ இதைச் செய்தாய் என்றால்
2.உன் வாயும் சீக்கிரத்தில் இது ஒடுங்கிப் போகும் என்கிறார் குருநாதர்.

அப்புறம்… எதற்காக சாமி இதைக் கொடுத்தீர்கள்…? என்று நான் கேட்டேன்.

அப்பொழுது நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய். பின்னால் என்ன ஆகப் போகிறது? நீ அதுவாகிறாய்.

அந்த மாதிரி இருந்தாலும் இந்தத் தீமையை விளைவிக்காது அது எப்படிச் செய்வது…? என்ற இந்த மாற்று முறைகளை பவர் கொடுத்தாலும் இதைச் சொல்கிகிறார்.

அப்புறம் தான் அதற்கு என்னென்ன நீ செய்ய வேண்டும்? நாய்கள் அதிகமாக விரட்டிக் கொண்டு வருகிறது என்று சொன்னால் உன் உணர்வுகளை எப்படிப் பாய்ச்ச வேண்டும்? என்று உணர்த்திக் காட்டுகின்றார்.

நாயை அடித்துக் கொன்றாய் என்றால் அந்த உயிர் உன்னிடம் வருகிறது, அது மனிதனாகப் பிறக்கின்றது.

ஆனால் நாய்களின் கால்களையோ வாயையோ கட்டி “இம்சை கொடுத்தாய்…” என்றால் என்ன ஆகும்?

நாய் கடுமையாக வேதனைப்படும். அது சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் விஷமான அணுக்களாக விளையும்.
1.விளைந்த அந்த அணுக்களின் தன்மை உனக்குள் வந்து
2.கடுமையான துன்பங்களை விளைவிக்கத்தான் செய்யும்.

இப்படிச் சொல்கிறார் குருநாதர்.

எந்த உயிரையும் இம்சித்தால் அதனின் உணர்வின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். ஏனென்றால் மற்ற உயிர் இனங்களுக்கு நுகரும் ஆற்றலும் தன்னுடைய கூர்மை எண்ணங்களும் அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் அந்த உணர்வின் வலிமை அப்படி வரும். அது தான் மூஷிக வாகனா. நீ சுவாசித்த உணர்வுகள் கொண்டு செயலாக்கினாலும் நாயை இம்சிக்கும் உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் என்ன செய்யும்?

அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிடும்.

அது சிறுகச் சிறுக விளைந்து அந்த மிருகத்தின் நிலையே உனக்கும் வரும். இது அதிகரித்து விட்டால் இந்த மிருகத்தின் நிலைக்கே உன்னை அழைத்துச் செல்லும்.

மிருகமாகத்தான் பிறப்பாய் என்கிறார். இதெல்லாம் தெளிவாகக் கொடுக்கிறார் குருநாதர்.

ஆகவே நம்மிடம் வலிமை இருக்கின்றது சக்தி இருக்கிறது என்று அதை வைத்து மற்றதை இம்சித்தோம் என்றால் அதனின் விளைவு… முடிவு… அதுவாகத்தான் நாம் ஆவோம் என்று அனுபவமாகக் காட்டினார்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு அந்த உணர்வுகளுடன் நாம் நாயை உற்றுப் பார்த்து அது விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணினால் இவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான் என்று அது விலகிச் செல்லும்.