ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2017

மரண பயத்தை நீக்கி “மரணமில்லாப் பெரு வாழ்வு” வாழ்வோம்

ஆதிமூலம் என்ற இந்த (நம்) உயிர் பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபடவேண்டும்… என்று தான் பார்த்துத் தப்பித்த உணர்வுகள் வலுப்பெற்றது தான் மூஷிக வாகனா என்பது.
1.அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அதிலிருந்து தப்பிக்கொள்ளும் உணர்வு கொண்டு இது ஓடுகின்றது.

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் கணங்களுக்கு அதிபதியாகி விடுகின்றது.

அதன் வாழ்க்கையில் எந்த உடலை உற்றுப் பார்த்து அதனால் பயந்து உணர்வின் வேகங்கள் கூடியதோ அந்த உணர்வுகள் வளர்ந்த பின் இந்த உடலை விட்டுச் சென்ற இந்த உயிரான்மா அந்த வலுவான உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் கருவாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து அதனின் ரூபமாக ஆகின்றது என்ற நிலை சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழத் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளில் வலுவானதைச் சுவாசிக்கும் நிலை வருகின்றது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியாகின்றது.

காகத்தை எடுத்துக் கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது ஒரு கொத்துக் கொத்திவிட்டு
1.எதிரிகள் எவராவது வருகின்றனரா
2.தன்னைத் தாக்க முற்படுகிறதா என்று எண்ணிப் பார்க்கிறது.

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடன் கொத்தி வைத்து விடுகின்றது.
1.மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு பூனை சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் குருவி சிக்கி விட்டால் குருவியின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூனையின் வாயில் சிக்கிய பின் பூனையின் நினைவே வருகின்றது.

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால்
1.குருவியின் எண்ணங்களோ பூனையின் பால் நினைவாற்றல்கள் அதிகமாகி
2.உயிராத்மா  வெளியே போகும்போது பூனையின் கருவறைக்குள் சென்று
3.இந்த உணர்வின் தன்மை கருவாகி
4.அடுத்து பூனையாகப் பிறக்கும்.

இரவிலே பல பட்சிகள் ஒன்று சேர்ந்து மரங்களில் அடங்கி இருக்கின்றது. அந்தப் பட்சிகள் ஒன்றுக்கொன்று நுனியில் தான் அது இருக்கும்.

கொப்புகள் அசைந்தால் அல்லது இதைக் காட்டிலும் கடுமையான நிலை அங்கு வந்தால் எடை தாங்காது அங்கு வர முடியாத எல்லையாகப்  பார்த்துத் தான் அந்தச் சிறு நுனியில் தான் எல்லாமே இருக்கும்.

காரணம் ஒரு குருவி இனமாக இருப்பினும் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்காக இப்படிப் பாதுகாக்கும் எண்ணங்களை உருவாக்கி அந்த மரண பயத்துடன்தான் வாழ்கின்றது.

ஆனால் எதிரி தாக்கப்படும்போது உணவாகப் புசிக்கும் நிலையில் வந்தால் மரண பயமாக அது ஒன்று சப்தம் இட்டால் போதும். எல்லாம் எழுந்து கொள்ளும்.

இதைப்போல நாம் குருவியாக பூச்சியாக இருக்கப்படும் போது எதிரியிடமிருந்து தப்பிக்கும் உணர்வின் தன்மைகளைக் கூர்மையாக்கி அந்த உணர்வின் வலிமை பெற்று அதிலிருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்துத்தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம்.

இதனை உணர்த்துவதற்குதான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

பரிணாம வளர்ச்சியாகி மனிதனான பின் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் தான் என்பதை எல்லோரும் அறிவதற்காக “ஆதிமூலம்” என்று உயிருக்குப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு சரீரத்திலும் சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி என்று அடுத்த ரூபம் பெறுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது கணபதி.

கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற நிலையில் உடல் பெற்றாலும் இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் தான் என்று நம் உயிரை வணங்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த நாம் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட்டு தீமையற்ற மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

இந்த மனித உடலைக் கொடுத்தது என்று “அங்குசபாசவா”.

1.ஆறாவது அறிவு கொண்டு நாம் எதனையுமே அடக்கி
2.வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஒடுக்கி
3.மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ முடியும் என்ற
4.இந்த நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

இன்னொரு உடல் பெறாது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ்வோம்.