ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2017

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அருள் ஞானப் பொக்கிஷம் மறைந்துவிடக்கூடாது

இப்பொழுது வேதங்கள் என்று சொல்வது அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.

1.ஏனென்றால் சைவ சித்தாந்தம் என்பது
2.அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.

அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,

இதைப் போன்ற நிலைகள் அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள் இன்றும் அழியாதவண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது. பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழியில் நமக்குள் சேர்த்து நாம் அந்த விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து ஒளிக் கதிராக மாற்றிடல் வேண்டும்.

1.சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும்
2.அகண்ட அண்டத்தில் வருவதை எப்படி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளதோ
3.அதைப் போல அந்த உணர்வினை நமக்குள் இணைத்துவிட்டால்
4.ஒளியின் தன்மையாக நாம் உயிருடன் ஒன்றி
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

இதைச் சுருங்கச் சொல்கிறேன், விரிவாகச் சொன்னால் இன்னும் எத்தனையோ வகைகளில் சொல்லலாம். ஆனால் ஏதோ இது மிகவும் எளிதில் கிடைக்கிறது என்று யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த உணர்வின் தன்மை அறியும் தன்மையாக 20 வருடங்கள் தனித்து அனுபவம் பெறும்படி செய்தார்.

ஞானிகள் கண்ட பேருண்மையை அறிவதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்து உண்மையை உணர்ந்து அதைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.

1.அதை அனைவரும் பெறச் செய்ய முடியும்
2.அனைவரும் பெற முடியும் என்ற இந்த உண்மையைக் குருநாதர் காட்டியதால்
3.உங்களுக்கும் இதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு விதமாக நான் சொல்வேன். காரணம்... அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டும்
1.அந்த மெய் உணர்வின் சக்தியை
2.உங்களுக்குள் எப்படியும் அதைப் பாய்ச்சிட வேண்டும்
3.அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்கிட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் காலத்தால் அழியாத இது “மிகப் பெரிய பொக்கிஷம்...” கிடைப்பது... “மிக மிக அபூர்வம்”.

1.என்னில் இது கிடைத்து
2.என்னுடன் இது மறைந்திடாது
3.எல்லோரையும் இதைப் பெறச் செய்து இது மறைந்திடாது
4.எல்லோரும்  வளர்ந்திட வேண்டும் என்பதற்கே இதை நான் சொல்வது.