ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2017

நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க ஞானிகள் சொன்ன “பாலாபிஷேகம்”

பால் இருக்கிறது என்றால் அதில் ஒரு துளி பட்டால் நஞ்சாக மாறுகின்றது. அந்தப் பாலில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை குறைந்து அந்தப் பாலுக்கே ஊட்டச் சக்தி கொடுக்கின்றது.

அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரம் குடம் பாலைச் (அந்த ஆற்றல்மிக்க சக்திகளை) சம்பாரித்தவர்கள். எத்தகைய கடுமையான நஞ்சினையும் நீக்கிடும் நிலை பெற்றவர்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று எண்ணினால்
2.அது ஆயிரம் குடம் பாலை ஊற்றியதற்குச் சமமாகின்றது
3.நம் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்க
4.ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுது
5.அந்த ஆயிரம் குடம் பாலின் சக்தி சேர்க்கப்படுகின்றது.

இதைப் போல் ஒவ்வொருவரும் எண்ணித் தியானியுங்கள். உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எங்கே சென்றாலும் அங்கே மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள். இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது.

இதை நீங்கள் கடைப்பிடித்தீர்கள் என்றால் எல்லாமே உங்களுக்கு நன்றாக இருக்கும்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இதே மாதிரி எண்ணிப் பழகுங்கள். விநாயகரைப் பார்த்தவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள்.

வெளியிலே ஏதாவது சலசலப்போ சங்கடமோ இருந்தாலும் யார் மீது வெறுப்பாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சுங்கள்.
1.அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும்.
2.எங்களுக்குள் அந்தச் சகோதர ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.பகைமைகள் நீங்கும்.
4.நமக்குள் அந்தத் தீய வினை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.
5.பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் குறைந்து கொண்டே வரும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

பகைமை நீக்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டும் பொழுது அந்த அருள் ஞானிகளின் மேல் பற்று அதிகமாகின்றது.

அருள் ஞானிகளின் மேல் நாம் பற்றை வளர்த்துக் கொண்டால் அதனின் ஆற்றலாக அந்த ஞானிகளின் வழிகளிலேயே நம்மை அழைத்துச் செல்லும்.

ஆனால் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் நிலைகளில் அவன் இப்படிச் செய்கிறான். இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான். என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான் என்று இந்தப் பற்றை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே இன்னொரு உடலுக்குள் தான் போக முடியும்.

அங்கே சென்று அவர்கள் படும் கஷ்டங்களையும் வேதனைகளை நாமும் எடுத்து அந்த உடலிலும் வேதனையை வளர்த்து அடுத்தாற்போல் ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.