ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2017

முருக பக்தி கொண்ட ஒரு உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்த “(நேரடி) அனுபவம்”

ஒரு சமயம் ஒரு   கிராமத்துப் பக்கம் செல்கின்றேன். வெறும் ஒரு துண்டு வேஷ்டி கட்டிக் கொண்டு செல்கின்றேன்.

நான் யார் வீட்டிலேயும் சாப்பாடு வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

ஒரு டப்பாவில் அரிசி வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ரெண்டு தீப்பெட்டி. கத்திரிக்காயை மோரில் போட்டு ஊற வைத்துக் காய வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை ஊறப் போட்டு காயப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் உப்பெல்லாம் போட்டு வைத்த்துக் கொள்ள வேண்டும். உப்பைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

அந்த டப்பாவில் கயிறைக் கட்டிக் கிணற்றிலிருந்து   தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். யார் வீட்டிலேயும் தண்ணீர் கூட வாங்கக் கூடாது என்றும் சொல்கிறார் குருநாதர்.

ரெண்டு விறகுக் கட்டையை செத்தையை எடுத்து வந்து நெருப்பை மூட்டி அந்த டப்பாவில் அரிசியைப் போட்டு வேக வைக்க வேண்டும்.

அந்தத் தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிதளவு அரிசி போட்டால் போதும். அந்த அரிசி உப்பு எல்லாம் வெந்து வரும்போது நல்ல மணமாக இருக்கும்.

இதுதான் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்.

பசி என்று உனக்கு வரப்படும்பொழுது நீ பிறரிடம் போய் நிற்கக்கூடாது. “நீ சமைத்து… அதை நீ ரசித்து… நீ உணவாக உட்கொள்” என்கிறார்.

இப்படி அனுபவத்தைக் கொடுக்கிறார்.

இப்படி வரப்படும் பொழுது ஒரு சமயம் ஒரு வீட்டுப் பக்கம் போகச் சொன்னார் குருநாதர்.

அது ஒரு சிறிய வீடு. வெளியில் ஒரு திண்ணை. அங்கே போய் “எம்மா…! என்று உட்காந்தேன். எனக்கு மிகவும்  களைப்பு.

அடுத்து “குருதேவா…!” என்று சொல்லி உட்கார்ந்தேன்,

அவரை (குருநாதரை) நினைத்து என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே…! சம்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தீர்கள். நான்கைந்து குழந்தை குட்டியும் இருக்கின்றது.

என்னைப் பிச்சைக்காரனாக இப்படிச் சுற்ற விட்டுவிட்டாயே…! “இது உனக்கே நியாயமா…?” என்று கேட்டு (புலம்பி) அங்கே திண்ணையில் உட்கார்தேன்.

இந்தக் குரலைக் கேட்டவுடன் உள்ளே உட்கார்ந்திருக்கின்ற ஒரு  அம்மா சப்தம் போட்டது.

முருகா…! நான் நன்றாக இருக்கும் பொது எல்லோரும் இருந்தார்களே. என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களே.

என்னை ஒருவரும் பார்க்க வரவில்லை. கையெழுத்து வாங்குகிற வரையிலே “அம்மா… அப்பா… தாயே…” என்றெல்லாம் சொன்னார்கள். எல்லாம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு இப்பொழுது ஒருவரும் வரவில்லையே….!

முருகா…!

“அன்றைக்கு என் மடிமீது உட்கார்ந்து ஆடுவாயே… பாடுவாயே… முருகா…!” என்று சொல்லி வருத்தப்படுகின்றது.

நான் இங்கே திண்ணையில் உட்கார்ந்து “என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே…  ஈஸ்வரா… குருதேவா…” என்று குருவை நினைத்துப் புலம்பினால் அங்கே அந்த அம்மா அப்படிச் சொல்லி  வருத்தப்படுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி.

உள்ளேயிருந்து  அந்தக் குரல் வருகின்றது. நான் எவ்வளவு சொத்து வைத்திருந்தேன். எனக்குப் பிள்ளை இல்லையே. முருகா…! என்று உன்னைத் தானே பிள்ளையாக நினைத்தேன்.

நீ என் பிள்ளை மாதிரி என் மடிமேல் வந்து உட்காருவாயே. எல்லாவற்றையும் பார்த்தேனே. என் பிள்ளையாக உன்னை நினைத்தேனே. உன்னையே நான் வணங்கினேனே. உன்னையே தஞ்சம் என்று இருந்தேனே. என்னை இப்படிச் சோதிக்கின்றாயே.

நான் உன்னையே நம்பி இருந்தேன். சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

எல்லாவற்றையும் வாங்கிவிட்டார்கள். இப்பொழுது ஒருவரையும் காணோமே. நான் அனாதையாக இருக்கின்றேனே… முருகா…! என்று அந்த அம்மா புலம்புகின்றது.

நான் இங்கே “ஈஸ்வரா…” என்று சொல்லித் தவித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் உணர்த்துகின்றார் குருநாதர்.

என் வாழ்க்கையில் கண்ட நிகழ்ச்சி இது.

நான் உள்ளே சென்றேன். அந்த அம்மா இயற்கைக் கழிவுகள் எல்லாம் போய் அப்படியே அசிங்கமாகத் துணி ஏதும் இல்லாமல் இருந்தது.

முருகன் மேல் மிகுந்த பக்தியாக அந்த அம்மா இருந்ததாலே “நான் வேண்டியதற்காக முருகன் வந்துவிட்டான்…! முருகன் வந்துவிட்டான்…! முருகா…!” என்று சப்தம் போடுகின்றது.

வீட்டிலிருந்த பாத்திரத்தை எடுத்துத் தண்ணீரை எடுத்துக் கழுவிவிட்டு அந்த அம்மா துணிகளைத் துவைத்துக் கொடுத்தேன்.

அப்புறம்  வேறு துணியை எடுத்து கட்டச் சொன்னேன். “என்ன அம்மா விவரம்? என்று கேட்டேன்.

அந்த அம்மாவிற்கு வயிற்றால் போய்க் கிடக்கின்றது. கண்கள் எல்லாம் மங்கிப் போயிருக்கிறது. நினைவு “முருகன்…” என்ற நிலையில் வருகிறது.

முருகனை அழைத்த போது “உடனே… அவன் ஓடி வந்தான்…” என்று கதைகளில் சொல்வார்கள் அல்லவா. அந்த மாதிரி நினைத்து இந்த எண்ணத்தைக் கொண்டு என்ன எண்ணுகின்றது.

உன் முருகன் உன்னிடம் தான் இருக்கிறான். முருகன் உன்னைக் காப்பாற்றிவிட்டான். உன் முருகன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன் என்று அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன்.

என்னை இங்கே வரச் சொன்னான். அதனால் நான் இங்கே வந்தேன். உன்னுடைய கஷ்டத்தையெல்லாம் நீக்கி விட்டான்.

அந்த முருகன் சென்ற இடம் ஆறாவது அறிவின் தன்மையான கார்த்திகேயா..,
1.இன்று ஒளியின் தன்மையாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
2.நீ அவனை நினை அம்மா. அவன் விண்ணிலே இருக்கிறான்.
3.அந்தக் கார்த்திகேயா என்று சொல்லி நீ அவன் நிலையை அடைய வேண்டும் என்று
4.நீ இதையே நினைத்துக் கொண்டிரு அம்மா.
5.நீ அவனுடன் போய்ச் சேர்ந்து விடுவாய்.
6.இந்த இடம் வேண்டாம் அம்மா.
7.பழி தீர்க்கும் எண்ணம் வேண்டாம் அம்மா என்று சொல்லி அப்பொழுது இதை உணர்த்தினேன்.

ஏனென்றால் என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று நினைத்துப் “பாவிகள் உருப்பட மாட்டார்கள்…” என்ற எண்ணத்தை எடுத்தால் அவர்கள் உடலுக்குள் சென்று பேயாகப் பிறப்பாய் அம்மா. “அது வேண்டாம் அம்மா…” என்று சொன்னேன்.

இது என் வாழ்க்கையில் அனுபவித்த நிலைகள் கொண்டு அந்த அம்மாவிற்குச் சொன்னேன். அதற்கப்புறம் அந்த அம்மாவிற்கு உதவியெல்லாம் செய்தேன்.

அந்த நேரத்தில் குருநாதர் உணர்த்தி “நீ உடனே வெளியே போ…” என்று என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

அந்த அம்மாவிற்கு வேண்டிய உதவி எல்லாம் நீ செய்துவிட்டாய். அந்த ஆன்மா வெளியேறப் போகும் போது  உன்னை எண்ணி “அது உனக்குள் வந்துவிடும்டா…!” என்று சொல்கிறார்,

“இது என்னடா… வம்பு…!” என்று நான் நினைத்தேன்,

இப்பொழுது நீ உதவி செய்தற்கு நன்றிக் கடனாக அது இறந்தது என்றால் அது உன்னிடம் தான்  வரும்.

அப்புறம் “முருகா…! என்ற நிலைகளில் நீயும் “முருகா…முருகா…” என்று தெருவில் போக வேண்டியது தான் என்று இதையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

உதவி செய்த அந்த உணர்வு கொண்டு அந்த ஆன்மா வரப்படும் பொழுது அந்த  (அம்மாவின் எண்ணம்) வலுவின் தன்மையால் நீ ஏங்கப்படுவாய்.

ஏனென்றால் அந்த ஒவ்வொரு நிலையையும் இப்படி அனுபவ ரீதியாகத்தான் குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

காரணம் பிறிதொரு ஆன்மா இந்த உடலில் பக்தி கொண்ட நிலைகளில் இருந்தாலும்
1.“அது எவ்வாறு இருக்கும்?
2.அதிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்? என்பதற்காகத்தான்
3.அங்கே அவர் அந்த உடலில் இப்படித் திசை திருப்பச் சொல்கிறார்.

மகரிஷியின் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அந்த அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் புரியாது. அதை அந்த அம்மாவிற்குப் புரிவதற்காக அந்த அம்மா பாஷையிலேயே சொன்னேன்.

போக மாமகரிஷி ஆறாவது அறிவைத் தெரிந்து கொண்டவன், அவன் ஒளியின் சரீரமாகி விண்ணிலே இருக்கின்றான்.

முருகனின் அருள் பெற்று அந்தப் போக மாமகரிஷி சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றான். அவர்களுக்குத் தகுந்த மாதிரி அந்தப் பக்தியின் நிலைகளில் அப்படிச் சொன்னேன்.

(ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா என்று போக மாமகரிஷி ஒளியின் சரீரமானான் என்று அதைச் சொன்னால் அந்த அம்மாவிற்குப் புரியாது.)

ஆகவே முருகன் அருள் பெற்று போகன் இன்று அங்கே இருக்கின்றான். அவனுக்குக் கொடுத்த அருளும் முருகன் உனக்குக் கொடுப்பான்.

போகன் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அங்கே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான்.
1.நீ அந்தச் சப்தரிஷி மண்டலத்தையே எண்ணிக் கொண்டிரு அம்மா..
2.நீ அங்கே அவனிடம் போய்ச் சேரம்மா…! என்று சொல்லிவிட்டுக்
3.கடைசியில் திண்ணைப் பக்கம் வந்து நான் உட்கார்ந்து விட்டேன்.

அந்த அம்மா இறந்து விட்டது என்றால் நான் தான் ஏதாவது செய்துவிட்டேன் என்று சொல்லி அந்தப் பக்கம் யாராவது வந்தாலும் வம்பு என்று வந்துவிட்டேன்.

அந்த அம்மாவின் செயலாக்கங்களும் உடலை விட்டு எப்படி அந்த அம்மாவின் உயிராத்மா பிரிகிறது என்றும்
1.சிறிது தூரம் சென்று
2.அதை தியானத்தால் அப்படியே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

அந்த அம்மாவின் சொல் இப்படி மாறுகிறது.

எதைப் பதிவு செய்தோமோ
1.“முருகா…! போக மாமகரிஷி போன அந்த இடத்திலேதான்
2.நீ இருக்கின்றாயாமே…! என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடப்பா என்று
3.”அந்தக் கடைசிக் குரல்…” அப்படியே சன்னம் சன்னமாக இறங்குகிறது.

அந்த உணர்வின் தன்மை வந்தபின் அந்த ஆன்மா வலு பெறுகின்றது. அங்கே சப்தரிஷி மண்டலமே போய்ச் சேருகிறது.

இது அனுபவ ரீதியில் தெரிந்து கொண்ட நிலை.