ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2017

“அமானுஷ்யமான…” செயல்களைச் செய்தவர்களின் கடைசி நிலைகள்

ஆரம்பக் காலத்தில் குருநாதர் கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு என்னை ஒரு மனிதனை உற்றுப் பார்க்கச் செய்வார்.

உதாரணமாக ஒருவர் நோயால் உடலுக்குள் அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார். எனக்கு மேல் வலிக்கிறது என்று சொல்வார்.

குருநாதர் அவர் ஒரு முறைப்படி எனக்குச் சொல்லி இருப்பார். அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு கண்ணிலே பார்ப்பேன்.

பார்த்தால் அந்த உடலுக்குள் மற்ற எதிர் அணுக்கள் இந்த உடலை உருவாக்கிய அணுக்களுடன் இது போராடி அதைக் கொன்று புசிப்பது தெரியும். உடலை உருவாக்கிய அணுக்களை அது தின்பதால் அவருக்கு இங்கே வலி ஏற்படும்.

ஆரம்பக் காலத்தில் வெகு பேருக்குத் தெரியும். இதையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டினேன்.

உங்கள் உடலில் என்ன இருக்கும் என்று பாருங்கள் என்று காண்பிப்பேன். கை முறிந்திருந்தால் அந்த இடத்தில் என்ன ஆகும்? இவர்கள் உடலில் என்னென்ன உருவாகிறது?

வயிற்றுக்குள் “கேன்சர்…” என்றால் அந்தக் கட்டியினுடைய நிலைகள் எப்படி இருக்கும்? என்றெல்லாம் பார்க்க வைத்தேன். ஏனென்றால்
1.அந்த உணர்வுகள் எப்படி இயங்குகிறது என்று
2.எனக்குக் குருநாதர் காட்டிய அதே அருள் வழியில்
3.எல்லோரையும் பார்க்க வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கப்படும் போது பெரும்பகுதியானவர்கள் பிறருடைய நோய்களை “என்ன…! ஏது…?” என்று அதிகமாகக் கவர்ந்து விடுவார்கள். பின் அந்த நோயைத்தான் இவர்களுக்குள்ளும் வளர்த்துக் கொள்வார்கள்.

அந்த அருள் ஞானத்தை இவர்கள் வளர்க்கும் நிலைகள் வரவில்லை.

உடலுக்குள் இருப்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு இ்து பேராச்சர்யமாகப் போகும். பார்த்தவுடனே…
1.உங்கள் குடும்பத்தில் இப்படியெல்லாம் வந்தது… சண்டை வந்தது…
2.இதை நுகர வந்தவுடனே இது எல்லாம் சொல்வார்கள்.
3.கெட்டதெல்லாம் சொல்வார்கள்.
4.நல்லதை இவர்களால் சொல்ல முடியாது.

ஒரு மனிதன் தெய்வங்களைப் பற்றி எதை வணங்கினாரோ இந்த உணர்வலைகள் இது உடலில் செல்களாக அமைகிறது.

1.அதே தெய்வ பக்தி கொண்டு அந்த மனிதன் இறந்து விட்டால்
2.அதே பக்தி கொண்ட இன்னொரு மனிதன் ஏங்கப்படும் போது
3.அவன் (முதல் மனிதன்) இங்கே வந்து தெய்வமாகக் காட்சி அளிப்பான்.

இவையெல்லாம் எப்படி உருவாகிறதென்ற நிலையைத் தெளிவாக்கினதால் ஆரம்பக் காலங்களில் இதெல்லாம் எல்லாருக்கும் அந்தக் காட்சி வந்ததுதான்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்?

இவர்கள் எந்தெந்த ஆசை கொண்டு தெய்வங்களை வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கு வரும்.

இவர் எந்தத் தெய்வத்தை வணங்கினாரோ அதே தெய்வ உணர்வுடன் இறந்த அந்த ஆன்மா கூடி வரும்.

ஆஹா…! நான் காமாட்சியைப் பார்த்தேன்…, மீனாட்சியைப் பார்த்தேன்… எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன்…. முருகனைப் பார்த்தேன்…

அவர்கள் தெய்வத்தை வழிபட்ட உணர்வுகள் கொண்டு அதன் வழிகளிலே பார்ப்பார்கள். அப்போது அந்த உணர்வின் தன்மை
1.அவர் எந்த வேதனைப்பட்டாரோ அதுவும் இவர்களுக்குள் விளையும்.
2.தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று.
3.அவர் எந்தெந்த தெய்வத்தை எண்ணி நோயால் மடிந்தாரோ
4.அந்த மடிந்த உணர்வின் தன்மையும் இங்கு வரும்.

இதைப் பார்க்கலாம். அவருக்கு அருள் ஆடும்.

என்னை இப்படிச் சோதிக்கின்றானே… முருகன். என்னை இப்படிக் காளி சோதிக்கின்றதே… என் குலதெய்வம் என்னைச் சோதிக்கின்றதே… என்று சொல்வார்கள்,

இவைகளெல்லாம் நாம் எடுத்த உணர்வின் தன்மை அணுக்கள் நமக்குள் செல்லாக விளைகின்றது. இறந்தபின் அது அலைகளாகப் படர்கின்றது.

அதே எண்ணம் கொண்டு கவர்ந்த பின் அந்த உருவங்கள் நமக்குள் தெரிகின்றது. இதைப் போன்ற நிலைகளைத்தான் அது உருவாகும்

ஏனென்றால் ஆரம்பக் காலத்தில் தியான வழி அன்பர்களில் பழகப் போகும் போது உலக நிலையை அறிவிக்கச் சில நிலைகளைச் செய்தோம்.

அவர்கள் இதை மேல் ஆசைப்படும் போது ஜோதிடம் சொல்கின்ற மாதிரிச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய உணர்வுகளை எல்லாம் கவர்ந்திடுவார்கள்.

திருநெல்வேலியில் ஒரு இடத்தில் இந்த மாதிரி காட்சிகளைக் காட்டியவுடனே அந்தப் பையனுக்குக் காட்சிகள் தெரிந்தது.

உடனே எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் கொய்யாப்பழம் வருகிறது. எனக்குக் காசு வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் காசு வருகிறது.

அவர்கள் வீட்டிலேயோ அடேயப்பா...! குருநாதர் கொய்யாப்பழம் கொண்டு வந்து கொடுக்கிறார். இதெல்லாம் கொடுக்கிறார் என்று.

அப்பொழுது அவன் இந்த நிலைகளை வளர்த்துக் கொண்ட பின் ஒரு பூனைக் குட்டியை வளர்க்கச் சொல்லிச் சொல்கிறார் குருநாதர் என்றான்.

பூனைக் குட்டி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

அதே சமயத்தில் சினிமாவுக்குச் செல்வதற்காகவும் அதைப் போன்ற செலவுக்காகவும் குருநாதர் உங்களிடம் ஐந்து ரூபாய் கேட்கச் சொல்கிறார் என்கிறான்.

கேட்கச் சொல்கிறார் என்றவுடன் கொடுக்கின்றார்கள். அடுத்தாற்போல எண்ணத்தில் கேட்கிறார்கள்…, “என்னடா இப்படித் தியானம்…?! என்று

இவர்கள் “இல்லை…” என்று சொன்னால் போதும்.

உடனே குருநாதர் வந்தார் உங்களைப் பஸ் ஸ்டாப்ண்டில் போய்ப் படுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டான். இது நடந்த நிகழ்ச்சி.

பஸ் நிலையத்தில் போய் படுக்கச் சொன்னார் என்று அந்தப் பையன் சொல்கிறான்.

எதற்காக…? என்று கேட்கிறார்கள்.

இங்கே பல கஷ்டமான நிலைகள் வருகிறது. ஆகையினால் ஒரு பத்து நாட்களுக்குப் பஸ் நிலையத்தில் போய் பாய் தலையணை எடுத்துக் கொண்டு போய்ப் படுத்துத் தூங்க வேண்டும் என்கிறான்.

குருநாதர் கட்டளை இட்டார் என்று அதே மாதிரி அவர்கள் செய்தார்கள்.
  
நான் இங்கிருந்து திருநெல்வேலி யதார்த்தமாகப் போகிறேன். அன்றைக்குக் காலையில் தான் பஸ் நிலையத்தில் இறங்கினேன்.

பாயும் தலையணையும் தூக்கிக் கொண்டு “சாமி…!” என்று கூப்பிட்டார்.

என்ன..? என்றேன்.

குருநாதர் எனக்குக் கட்டளை இட்டார். “பத்து நாட்கள் வீட்டில் படுக்க வேண்டாம்…” என்று. இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் பார்த்தீர்களா…! “அதற்காகத் தான் சொல்லி இருப்பார்” போலிருக்கிறது. இது அவர்களுடைய எண்ணம்.

அப்படிச் சொல்லி வந்தவுடனே… “என்ன ஐயா சொல்கிறீர்கள்…!” என்றேன்.

என்ன என்றே தெரியவில்லை…! குருநாதர் நீ போய்ப் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டேன். பையனிடம் தானே “குருநாதர்… பேசுகிறார்”.

அதனால் இதெல்லாம் நன்றாக நடக்கும் என்று அவர் சொன்னபடி வந்து விட்டேன். அப்புறம் பாருங்கள்…! அவர் சொன்ன மாதிரி பத்து நாள் இங்கே படுக்கச் சொன்னால் பத்தாவது நாள் நீங்கள் சரியாக வந்து விட்டீர்கள் பாருங்கள்.

“உங்களிடம் ஆசி வாங்குவதற்காக… இப்படி அனுப்பி இருப்பார்…” என்று அவர் அனுமானங்கள் இப்படிச் செயல்படுத்துகினறது.

அப்புறம் அவர்களிடம் நான் என்ன சொல்வது?

இப்படியெல்லாம் அவன் சொல்ல ஆரம்பித்தவுடனே அந்தப் பையன் சிறுகச் சிறுகக் காசு கேட்பதற்கு ஆரம்பித்தான்.

எனக்கு அந்த வேஷ்டி வேண்டும், இந்தக் கடையில் இன்ன மாதிரியான பதார்த்தங்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்டான்.

ஓஹோ…! இது குருநாதர் அல்ல போலிருக்கிறது. இவன் குருநாதர் பேரைச் சொல்லிக் கொண்டு அல்லவா காசு கேட்கிறான் என்று அப்புறம்தான் தெரிய வருகின்றது.

இது திருநெல்வேலி அன்பர்களுக்கு வெகு பேருக்கு இது தெரியும்.

இந்த மாதிரிக் காட்சிகளை கொடுக்கும் போது குழந்தைகள் யதார்த்தமாக இருக்கும் போது அந்த உணர்வுகளை அறியச் செய்தது. ஆனால் “இது எப்படி…?” என்று அறியும் நிலைக்குச் செயல்படுத்த முற்பட்டாலும் அதிலே தீமைகள் தான் வருகின்றது.

சிலர் தெய்வம் என்னிடம் பேசுகிறது. அதை வசப்படுத்தியுள்ளேன். என்றெல்லாம் சொல்வார்கள்.

அதைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.