ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2017

விபத்துக்களையும் அசம்பாவிதங்களையும் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...?

இன்று நாம் பத்திரிகை வாயிலாகப் படிக்கின்றோம். பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்த இடத்திலேயே இத்தனை பேர் இறந்தனர். பலர் அவஸ்தைப்பட்டனர் என்று பார்க்கின்றோம்.

இன்றைய விஞ்ஞான உலகில் இந்தப் பூமிக்குள் அது எங்கே சம்பவங்கள் நடந்தாலும் அடுத்த “பதினைந்து நிமிடத்திற்குள்” நாம் இங்கே அதைக் கண்டுணர முடிகின்றது.

இத்தகைய துரித நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்கின்றோம். உலகில் எங்கே நடந்தாலும் உடனடியாக டி.வி. மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ நாம் இதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து பத்திரிகை வாயிலாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது.

நமக்கு அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறன் இருந்தாலும் ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் கூர்ந்து படிக்கும் போது நமக்குள் அது பதிவாகிவிடுகின்றது.

டி.வி.க்களில் ஒளி பரப்புச் செய்வதை அதே உணர்வின் இயக்கமாக நாம் வீட்டிலே டி.வி.யை இயக்கப்படும் போது எங்கேயோ ஒளிபரப்பு செய்யக் கூடியதை நாம் இங்கு வீட்டிலே இயந்திரம் மூலமாகப் பார்க்கின்றோம்.

இதே போல் எங்கேயோ நடக்கும் சம்பவங்களைப் படமாக்கி விஞ்ஞான அறிவு கொண்டு பத்திரிகையில் அவர்கள் வெளியிடுகின்றார்கள்.

அங்கே நடந்த சம்பவங்களயும் அசம்பாவிதங்களையும் அதனால் வேதனைப்பட்ட செயல்களை விரிவாக்கி அது எழுத்து வடிவில் கொடுக்கின்றார்கள்.

எழுத்து வடிவில் எழுதியதைக் கூர்ந்து கவனித்து அங்கே நடக்கும் அந்த விஷயங்களை ஆர்வமாகப் படிக்கின்றோம். கூர்ந்து கவனித்து அந்தப் படத்தையும் பார்க்கின்றோம். அதற்குக் கீழ்… “நடந்த சம்பவங்களையும்” கூர்ந்து படிக்கின்றோம்.

எந்த மனிதன் அங்கே அடிபட்டு வேதனைப்பட்டு வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றானோ அந்த உணர்வுகள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அலை அலைகளாக நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று ஒரு மனிதன் பேசியதை அல்லது படம் எடுத்ததை அதைத் தனக்குள் கவர்ந்து அது மீண்டும் படச் சுருளாக்கி அதனை மீண்டும் ஒளி பரப்புச் செய்யப்படும் போது அந்தப் பேழைகள் (PLAYER மூலம்) ஒளி அலைகளை வெளிப்படுத்தும் போது அதையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலை அலைகளாக வெளிப்படுத்துகின்றது.

எதனின் துணை கொண்டு ஒளி பரப்புச் செய்தனரோ அதே துணை கொண்டு டி.வி.யோ ரேடியோவோ இயக்கப்படும் போது இந்தக் காற்றிலே அலை அலைகளாக வருவதைக் கவர்ந்து அந்த உணர்வின் நிலைகளைப் படமாகவும் பார்க்கின்றோம். ஒலி நாதங்களாகவும் நாம் கேட்கின்றோம்.

இதைப்போல தான் இங்கே ஒரு மனிதனுக்கு மனிதன் நாம் அதைக்  கூர்ந்து கவனிக்கும் போது அந்த மனிதன் வேதனைப்பட்ட உணர்ச்சிகள் நமக்குள்ளும் வந்துவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

மனிதன் வேதனைப்பட்டு வெளிப்படுத்திய   உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பும் போது
1.பத்திரிக்கை வாயிலாகக் கூர்ந்து படிப்போம் என்றால்
2.எப்படி டி.வி.யைச் சுவிட்சைப் போட்டு எந்த ஸ்டேஷன் என்று எண்ணுகின்றமோ
3.அந்த ஸ்டேஷனிலிருந்து வரும் ஒலி அலைகளை கவர்ந்து படமாகக் காட்டுவது போல
4.நமது உணர்வுக்குள் ஆழமாகப் பதிந்தவுடனே  அதனின் நினைவலைகளாக மாறுகின்றது.

ஆனாலும் அவர்கள் பட்ட இந்த உணர்வுகள் நம் நினைவலைகளாக மாற்றினாலும் அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகளும் நமக்குள் அது பதிவாகி விடுகின்றது.

நாம் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இருந்தாலும் அடிபட்டவர்கள் வாழ்க்கை இருண்ட உலகமாக உடலை இழந்து இப்படி ஆகிவிட்டோமே என்று மறைக்கும் உணர்வாக வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனித்தவுடனே
1.நம் அறிந்து கொள்ளும் உணர்வுடன் அது கலந்து
2.நாம் அறிந்திடும் நிலையைத் தடைபடுத்தும் நிலை வந்து விடுகின்றது.

இப்படி ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் அதிகமாகக் கவர்ந்து வைத்திருந்தோம் என்றால் நாம் பஸ்ஸிலே செல்லப்படும் போது இதே உணர்வுகளின் வேகங்கள் நமக்குள் வருவது உண்டு.

உதாரணமாக பஸ் வேகமாகப் போகும் போது நாம் ஏற்கனவே பத்திரிக்கையில் படித்துப் பதிவான உணர்வுகள் அந்த நினைவலைகள் மீண்டும் நமக்குள் உந்தப்பட்டு… “ஆக்ஸிடென்ட் ஆகி விடுமோ…!” என்ற உணர்வைத் தூண்டும்.

அந்த உணர்வைத் தூண்டப்படும் போது வேகமாகப் பஸ் போகிறதே என்று எண்ணினாலும் அடுத்து பஸ்ஸை எங்கேயாவது நிறுத்தினால் பாதுகாப்பாக ஒதுங்கி உட்காரலாம் என்று வேறு இடத்தில் உட்காருவார்கள்.

எந்த பஸ்ஸின் ஆக்ஸிடென்ட்டை இவர்கள் உணர்வாகப் பதிவு செய்தனரோ அதே உணர்வின் அலைகள் நினைவாகி
1.யார் ஓட்டுநரோ அவர்பால் இந்த எண்ணங்கள் செல்லும்.
2.(எண்ணங்கள் அவரை மோதும்)

அவ்வாறு எண்ணங்களைச் செலுத்தப்படும் போது என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

விமானங்களை வெகு தொலைவில் பறந்து கொண்டிருப்பதை அது ரிமோட் கண்ட்ரோல் (RADAR மூலம்) கொண்டு சீர் படுத்தி இயக்குகின்றனர்.

இதைப் போல பயந்த உணர்வும் ஆக்ஸிடென்ட் ஆன நிலைகளையும் படித்துணர்ந்த நாம் அந்தப் பஸ்ஸிலே செல்லும்போது பய உணர்வுடன் எண்ணினால் ஓட்டுநர் பால் நம்முடைய எண்ணம் ரிமோட் கண்ட்ரோல் போல இயக்கி விபத்துக்கு அழைத்துச் செல்லும்.

பாதுகாப்பான இடத்தில் ஓரத்தில் கடைசியில் உட்கார்ந்திருப்போம் என்று எண்ணுவோம்.

அல்லது ஏதாவது நடு மையத்தில்  உட்கார்ந்தாலும் கூட அந்தப் பய உணர்வு கொண்டு நாம் ஓரத்தில் ஒதுங்கினாலும் ஆக்ஸிடென்ட் ஆனால் இங்கு இருந்து அடித்து முன்னாலே தூக்கிக் கொண்டு எரியும்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட எண்ண உணர்வுகள் நம்மை அது இயக்கச் செய்யும். நாம் தவறு செய்யவில்லை.

எங்கேயோ மனிதன் ஆக்ஸிடென்ட்டில் இறந்தான், விஞ்ஞான அறிவு கொண்டு நாம் கண்டுணர்ந்தாலும் இந்த நினைவலைகள் நமக்குள் இவ்வாறு அது செயல்படுகின்றது.

நம்மை அறியாமலே அந்த விபத்தான உணர்வுகளுக்கு நமக்குள் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்லுகின்றது.

இதிலிருந்து தப்பிக்க என்ன வைத்திருக்கின்றோம்?

சாமி காப்பாற்றுமா? சாமியார் காப்பாற்றுவாரா…? ஜாதகம் காப்பாற்றுமா…? ஒன்றும் காப்பாற்றாது.

பத்திரிகை வாயிலாகவோ அல்லது டி.வி மற்ற இன்டெர்னெட் மூலமாக அசம்பாவிதங்களக் கண்டாலோ படிக்க நேர்ந்தாலோ அடுத்த கணம் நமக்குள் அது பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் “சர்குலேசன்” செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படரவேண்டும். உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தியால் நாளை நடப்பதெல்லாம் இந்த உலகிற்கும் உலக மக்களுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் பார்த்த உணர்வுகள் நமக்குள் பயத்தையோ அல்லது அதிர்ச்சியையோ ஊட்டியது என்றால்
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
2.நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தால் பயமுறுத்தும் உணர்வுகளுக்கு “இது அச்சுறுத்தலாக அமையும்”. அடுத்து நமக்கு அந்தப் பயம் தொடராது.

மேலும் எங்கே செல்வதாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியில் செல்லுங்கள்.

பஸ்ஸோ இரயிலோ எந்த வாகனமாக இருந்தாலும் அதை ஒரு முறை முழுவதுமாக உற்றுப் பார்த்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்த வாகனம் முழுவதும் படரவேண்டும்.
2.இதில் பிராயணம் செய்யும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
3.எல்லோரும் நலமும் வளமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று
4,முதலிலேயே இப்படி ரிமோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் நம் எண்ணம் நம்மைக் காக்கும். அதே சமயத்தில் மற்றவர்களையும் காக்கும் சக்தி பெற்றவர்களாவோம்.

“நம் எண்ணம் தான்… நம்மைக் காப்பாற்றும்”. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.