ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2017

உங்களை எல்லாம் உயர்த்தும்படி அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர் – இதை நீ செய்தால்… “நீ அதுவாகின்றாய்” என்றார் குருநாதர்

நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ
2.அந்த உயிரிடமே வேண்டி
3.என்னை அறியாத பிழைகளை நீக்கி
4.அந்த மெய்ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று
5.எந்த மனிதன் ஏங்குகின்றானோ
6.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.

நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையை உயிருக்குள் பட்டு “ஓ…” என்று ஜீவனாகின்றது.

அந்த உணர்வின் சத்து “ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.

பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.

ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும் இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.

இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

1.ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும்
2.மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்
மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்”.

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய்வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய்.

அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.  

அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு உணர்த்திய இந்த உணர்வை
3.உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை
4.எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.