ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2017

உடலை விட்டுப் பிரிந்தால் பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற மெய்யை உணர்த்தினாலும் “ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள்… இல்லை…!” என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்

நம் உடலான சிவனுக்குள் எதனையும் வலுவாக்கும் அந்த உணர்வுகள் வலுப்பெற்றாலும்
1.எதனின் உணர்வு அதிகமோ
2.அதனின் உணர்வு கொண்டு நமக்குள் விளைந்து
3.நம் அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.

இதை உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நாம் சுவாசிக்கும் நிலையைக் காட்ட (அந்தக் கணக்குகளைக் காட்ட) நந்தீஸ்வரனைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

ஐந்து புலனறிவு கொண்ட அந்த மிருகங்கள் தன் உணவை உட்கொள்ளும் பொழுது அது விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்ளும். நல்லதை மலமாக மாற்றிவிடும்.

இதைப் போல்
1.ஒரு விஷம் கொண்ட வேதனை கொண்ட
2.ஒரு மனிதனின் உணர்வுகளை நாம் நுகர்வோம் என்றால்
3.இது நம் உடலுக்குள் சென்று அதனின் தன்மை உருவாகி
4.நம் உடலின் தன்மையை விஷம் கொண்டதாக மாற்றிவிடும்.

இதனின் கணக்கின் தன்மை அதிகரித்துவிட்டால் அடுத்து மிருக நிலைகளில் அல்லது விஷத் தன்மை கொண்ட அணுக்களின் தன்மையில் எதை அதிகரிக்கின்றோமோ அதனின் அணுவாக உருவாகிவிடும்.

விஷத் தன்மை உருவாகிவிட்டால் அதன் வழிகளில் நம் அடுத்த சரீரத்தை இந்தக் கணக்கின் பிரகாரம் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

1.இதை நாம் அறிவதில்லை.
2.இதை உணர்த்துவாரும் இல்லை.
3.உணரச் செய்யும் மனிதர்கள் இல்லை.
4.இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதனும் இல்லை என்று
5.வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்.

நீ இதனின் நிலைகள் கூறப் போகின்றாய்.

சாங்கியங்களும் சாஸ்திரங்களும் சொல்லிச் சிவனுக்கு அபிஷேகம் என்றும் ஆராதனைகள் என்றும் இவ்வாறெல்லாம் அபிஷேகித்துவிட்டால் அந்தச் சிவன் எனக்கு ஓடி ஓடிச் செய்வான் என்று செயல்படுத்துகின்றனர்.

இத்தகைய உணர்வைத் தனக்குள் பதிவாக்கிய பின் அதே அணு அதன் உணர்வின் எண்ணங்களைத்தான் அவர்களுக்குள் உருவாக்கும்.

அதன் வழிப்படி மந்திரங்களையும் இந்த உணர்வின் தன்மையும் அதற்காக அபிஷேக உணர்வுகளைக் கொடுத்து இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் “நந்தீஸ்வரா…” தன் எண்ணத்தின் தன்மை உருவாக்கி உணர்வின் அணுவாக உடலுக்குள் உருவாகிவிடும்.

இதையே மீண்டும்… “இந்த மந்திர ஒலியையே” மீண்டும் மீண்டும் எழுப்புவான் என்றால் இதன் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் சென்றுவிடுகின்றது.

பிறவியில்லா நிலை அடைவதில்லை. 

ஆகவே அந்தச் சிவ ஆலயத்தில் எதை எண்ண வேண்டும் எதைப் பெறவேண்டும் என்று மக்களுக்குத் தெளிவவாக நீ எடுத்துச் சொல் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.