ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2017

ஒட்டுச் செடியை வைத்து நல்ல வித்துக்களை உருவாக்குவது போல் “ஞானிகளின் அருள் வாக்கைப் பதியச் செய்து (ஒட்ட வைத்து) உங்களை ஞானிகளாக உருவாக்குகின்றோம்”

“எல்லோருக்கும்… நான் நல்லது செய்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று பெரும் பகுதியானவர்கள் தான் வணங்கும் தெய்வங்களை எண்ணி வேதனைப்படுவார்கள்.

இப்படி எண்ணினால் அந்தச் சோதிக்கும் எண்ணம் தான் உங்களிடம் வளரும். ஒவ்வொரு நிமிடத்திலும் “சோதனையாகவே தான்” நடந்து கொண்டிருக்கும்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள். நமக்குள் நல்லதைப் பெறும் அந்தச் சக்தி இருக்கின்றது. மனிதனான நாம் அந்த ஆற்றல்களைப் பெற முடியும்.

ஒட்டுச் செடியை வைத்து நல்ல வித்துக்களை உருவாக்குகின்றோம். அதைப் போல
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஒட்ட வையுங்கள்.
2.அதைப் பற்ற (பற்று) வையுங்கள். அந்தப் பற்றுடனே வாழுங்கள்.
3.அருள் ஞானிகளின் மீது பற்றாகி உங்கள் தீமைகளைப் பற்றற்றதாக்கி
4.ஞானிகள் உணர்வுடனே வாழுங்கள்.

உங்களால் முடியும்.

நீங்கள் எண்ணியதையெல்லாம்
1.உங்கள் உயிர் படைக்கின்றது. ஜீவன் பெறச் செய்கின்றது. உங்கள் உடலாக ஆக்குகின்றது.
2,அந்தச் சக்தியாக உங்களை இயக்குகின்றது.
3.அந்தச் சக்தியாக உங்களுக்குள் விளையச் செய்கின்றது.
4.எது விளைந்ததோ அந்த விளைந்ததைத் தன்னுடன் அணைத்துச் செல்கின்றது.

இந்த உடலில் எதை வளர்க்கின்றீர்களோ அதன் வழி அதை உங்கள் உயிர் உருவாக்கிக் கொடுக்கின்றது. மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்தீர்கள் என்றால் அந்த “ஞானிகள் சென்ற பாதையில்” நீங்கள் செல்லலாம்.

“பாவி…! என்னை இப்படிப் பேசினானே…!” என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து அவர்கள் உடலில் போய்த்தான் பிறக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

நீங்கள் நல்ல எண்ணத்துடன் பிறருக்குச் செய்த நன்மைகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அதே சமயத்தில் கேட்டறிந்து உங்களுக்குள் அறியாது உட்புகந்த தீமைகள் நீங்க வேண்டும். மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்று தான் வேண்டுகிறேன்.

மாமகரிஷி ஈஸ்வரய குருதேவர் எம்மை இவ்வாறு செய்யச் சொன்னார். ஆகையினால்
1.நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.நான் அந்தச் சக்தியாக மாறுகின்றேன்.

என் சொல்லை நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்கு அது நல்லதாகின்றது. நான் ஞானிகளின் வாக்குகளைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகக் கவனித்தாலே உங்கள் நோய்கள் அனைத்தும் போகும்…. பார்க்கலாம்…!

ஆனால் அதை விட்டுவிட்டு
1.என் தலை விதி என்னைப் பிடித்து ஆட்டுகிறது.
2.என் துன்பம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று எண்ணினால் என்ன செய்ய முடியும்?
3.நான் கொடுக்கும் ஞானிகளின் வாக்கு உங்களுக்குள் பதியாது.

எப்படியும் உங்களுக்குள் அந்த ஞானிகளின் வாக்கைப் பதிய வைக்க வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பதிய வைத்துக் கொண்டு அதை மீண்டும் நினைவாக்கினால் உங்கள் உயிர் அதைப் படைக்கின்றது. ஞானிகளின் சக்திகளை விளைவிக்கின்றது.

ஒரு நல்ல ரோஜாப்பூவைப் போட்டால் அந்த வித்து விளைந்த பின் தன் நறுமணத்தை வீசுகின்றது. அதே போல் நல்ல எள்ளைப் போட்டால் நல்ல எண்ணெயைக் கொடுக்கின்றது. இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகளின் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.மெய் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.