ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2017

தீமைகளை விலக்கித் தள்ளும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள் – “நினைத்தவுடன் அந்தச் சக்திகள் உங்கள் முன் குவியும்”

ஒரு ரோஜாப்பூவின் மணம் அதிகமாக வீசும் இடத்தில் அதன் அருகில் இருக்கும் தீமை விளைவிக்கக்கூடிய ஒரு நஞ்சான செடியிருந்தாலும் அதனின் மணம் விலகிச் சென்றுவிடும்.

இதைப் போல நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வை அதிகமாகக் கூட்டும் பொழுது நமக்குள் வந்து சேரும் நல்ல குணங்களை விலக்கித் தள்ளிவிட்டுத் தீமையின் உணர்வையே செய்து தீமையின் உடலாகவே நம்மை மாற்றிவிடும்.

1.ஒரு தாவர இனத்தின் “மணம்”
2.இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்”
3.நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால்
4.தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.

கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.

நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.

ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது.

நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது.

அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்ப்பது போல் நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து
1.அந்த வலுவின் தன்மை கொண்டு
2.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து
3.அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.

ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.

அருள் ஞானிகள் உணர்வை… “நாம் இரசித்து உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வின் சத்தை… இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும். 

அனைவரும் இதைப் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.