ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2017

தவறு செய்தவர் யாரும் “தன் குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை” அடுத்தவரைத்தான் குற்றம் சொல்கிறோம்...!

நாம் அனைவரும் குரு காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றோம்.

இப்பொழுது யாராவது திட்டுகிறார்கள் அல்லது சண்டை போடுகிறார்கள். அவன் மோசம் செய்தான். அவன் அங்கே சென்று திருடினான் என்று இதைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் அந்த நினைவு வரும் பொழுது என்ன செய்யும்?

அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

அதற்குத் தகுந்தவாறு அவரைக் குறை கூறுவோம். குறை கூறும் பொழுது குறையான உணர்வுகளை நுகர்கின்றோம்.

குறையின் உணர்வுகள் அணுக்களாகி அதனின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பெருகுகின்றது.
1.நமக்குள் உள்ள நல்ல குணங்களின் தன்மையை இது அழிக்கின்றது.
2.இதுவே நமக்குள் கடைசியில் நோயாக வருகின்றது.
3.நம் சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்கின்றது.
4.சிந்தனையற்ற செயல்களையும் செயல்படுத்தச் செய்கின்றது.

பின் சிந்தனையற்ற செயல்கள் செயல்படும் பொழுது
1.நாம் சிந்தனையற்ற செயல்கள் செய்தாலும்
2.”நாம் செய்வதுதான் நியாயம்..,” என்று வாதிப்போம்.
3.தவறு செய்தோம் என்பதைச் சிந்திக்கும் நிலையே இல்லாது போய்விடுகின்றது.

ஒருவர் திருடுகிறார் என்றால் அவரிடம் கேட்டால் “நான் திருடவே இல்லை…,” என்பார்.

ஏனய்யா.., நீ தப்பு செய்தாயா? என்று கேட்டால், நான் பார்த்தேன் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் “நான் ஒன்றுமே செய்யவில்லை..,” என்பார்கள்.

தவறு செய்தவர் தன் தவறை தன் குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் இல்லை. தவறு செய்வதே தன்னை அறியாது செயல்படுத்துகின்றது. ஆனால் தவறு செய்தாலும் அதற்குண்டான நியாத்தைக் கற்பிக்கும் நிலையே இன்று உருவாகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் நம் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்பவே முடியாது.

நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும் “ஓம் நமசிவாய ஓம் நமசிவாய” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

நாம் எண்ணிய குணங்கள் இணைந்து ஒரு வித்தாகின்றது. எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் நிலைக்கொப்பத்தான் இந்த உடலுக்குப் பின் நாம் அடுத்த உடல் பெறுவோம்.

இதை நினைவுபடுத்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரன் “சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நாம் எதையெல்லாம் நுகர்கின்றோமோ அது நமக்குள் சென்று உருவாகின்றது.

1.இதில் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

ஆகவே பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின் நாம் எந்த நிலைகளில் இன்று வாழவேண்டும் என்று சற்றுச் சிந்திக்க வேண்டும்?

தீமைகளை வென்றவன் ஒளியின் சரீரம் பெற்றவன் துருவன். அவனைப் பின்பற்றிச் சென்றோர் ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக பெற்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷி மண்டலம்.

நாம் மனிதனான பின் இப்பொழுது எங்கே செல்ல வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அழியாச் செல்வம் என்ற நிலையில்  ஒளி உணர்வை எடுத்து வளர்த்திடல் வேண்டும்.