ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2018

மனம் என்பது கண்ணாடி போன்றது... பக்குவமாகக் கையாளவில்லை என்றால் மனம் நொறுங்கிவிடும் – பரிபக்குவ நிலையை நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டும்


நம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்...? கண்ணாடி சிதறிவிடும்.

அதே போல மனிதரின் மனங்களிலும் சிறு  குறைபாடுகள் வந்தால்  நாம் என்ன செய்ய வேண்டும்...?
1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.
2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா...! இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே...! என்று சொன்னால் இது பக்குவ நிலை.

ஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே
1.பார்... வீட்டைக் கூட்டுவதைப் பார்...! 
2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்...! என்று சொன்னால்
3.அந்தச் சொல் என்ன செய்யும்...?

நான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்... என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்...! என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.

அதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா...! என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.

இதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா... இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்...? என்று சொன்னால் என்ன ஆகிறது...?

குழந்தையைத் திட்டியவுடன்
1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்...! என்ற உணர்வு வருகிறது.
2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.

ஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்...? கண்ணு... கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா...! என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.

“ஏண்டா...?” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே...! என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.

நான் நல்லது செய்கிறேன்... ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது...! என்று பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.

ஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.

நாம் ஒன்றைப் பார்க்கிறோம்... படிக்கிறோம்...! படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா...? திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.

நினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே...! என்று சொன்னால் எப்படி இருக்கும்...?

இதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்...!

நான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.

அரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு...! இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு..! இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்
1.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்
3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.

ஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்...? என்று சொன்னால் என்ன ஆகும்...!
1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் கேட்கும் அவனையும் அது ஆள்கிறது.
4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

அந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.