ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2018

பேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தியானம்”


அகஸ்தியர் துருவ மகரிஷியான நிலையும் துருவ நட்சத்திரமான நிலையும் அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற்றால் ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.

அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர்கள் அந்தப் பேரருளும் பேரொளியும் பெற்று அவன் உணர்வைத் தனக்குள் எடுத்து அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அதை நாம் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஒரு நிமிடம் நேராக ஏங்கிப் பெறுங்கள்.

பின் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நினைவைச் செலுத்துங்கள் – ஒரு நிமிடம்.

அடுத்து கண்களை மூடி உயிரான ஈசனிடம் வேண்டி நினைவினை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.பேரருள் என்றால் இயக்கச் சக்தியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக ஆனது.
2.அதன் அறிவும் ஒளியும் என்றும் நிலையானது (அழிவே இல்லாதது)

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்கும் போது
1.அந்தப் பேரருளின் உணர்ச்சியும் அந்தப் பேரொளியின் ஒளியும் உங்களுக்குப் புருவ மத்தியில் தெரியும்
2.அதன் உணர்வு சிறிது நேரமானால் உங்கள் உடலில் இருந்து ஒரு வித வெளிச்சம் ஏற்படும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்துடன் நினைவினை இணைத்து அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “புருவ மத்தியின் மூலமாக... ஏங்கித் தியானியுங்கள்...!”

1.அருள் என்றால் இயக்கம்
2.இயக்கத்தால் மோதுண்டு ஒளி என்ற நிலைகள் மாறும்.
3.இருளை அகற்றி ஒளி பெறும் உணர்வே பேரருள் பேரொளி என்பது.
4.அந்த ஒளி சக்தி உள் நின்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சமாக வெளிப்படும்
5.உங்கள் உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசமாக...
6.தீமைகள் புகாது தடுக்கும் பேரொளியாக அது அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.

கண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது போல்
1.கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி
2.அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று
3.அந்த உணர்வின் தன்மையை உங்கள் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான அணுக்களும் பெற வேண்டும் என்று
4.பேரொளியாக மாறும் அந்த உணர்வின் உணர்ச்சியை உடலுக்குள் ஊட்டுங்கள்.

இப்பொழுது அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த மூலிகை மணங்கள் உங்கள் சுவாசத்திற்குள் நுகர்ந்து இழுப்பது போல் வரும். உங்கள் உடலிலிருந்து நஞ்சைப் பிரித்திடும் அருள் மணமாக அது உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவன் தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஏங்கித் தியானிங்கள்.
1.இப்போது சப்தரிஷி மண்டலங்களைக் காட்சிகளாகவும் காணலாம்.
2.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உங்கள் புருவ மத்தியில் மோதும் பொழுது
3.பல விதமான வண்ணங்களில் ஒளிகளைக் காணலாம்.
4.உங்கள் வாழ்க்கையில் இது மகிழ்ச்சியூட்டும் பேரானந்த நிலையாக இது அமையும்.

எம்முடைய ஞான உபதேசத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருபவர்கள் நிச்சயம் மேலே சொன்ன அத்தனையும் பார்க்கலாம்... உணரலாம்...!