ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2018

காட்டுக்குள் வாழும் மிருகங்களின் விசுவாசம் எப்படி இருக்கிறது என்று யானை கொக்கு ஓநாய் மூலம் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்

யானையோ மிகவும் உடலில் வலிமை கொண்டது தான். இருந்தாலும் அது காட்டுக்குள் பல நரக வேதனைப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

தன் உணவுக்காக தேடிச் செல்லும் பொழுது காதிற்குள் ஒரு எறும்பு போய்விட்டால் கடுமையான வேதனைப்படுகிறது. காட்டிற்குள் இருக்கப்படும் போது எத்தனையோ விதமான விஷமான கொசுக்கள் அதைத் தாக்குகின்றது. விஷ வண்டுகள் தாக்குகின்றது.

கொசுக்களிடமிருந்து தப்பிக்கத் தண்ணீரில் குளிக்கின்றது. மேலே மண்ணை வாரிப் பூசுகின்றது, இருப்பினும் சில வண்டுகள் முரடான யானையின் தோலிலும் தன் விஷத்தைப் பாய்ச்சி ரத்தத்தை உறிஞ்சுகின்றது.

அதே சமயம் அதன் காதுக்குள்ளும் சென்று உடலுக்குள் குடைச்சலையும் தருகின்றது. இப்படி யானை உடலின் வலு பெற்றாலும் அது நரகலோகத்தில் தான் வாழுகின்றது.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லப்படும் போது ஒரு யானை நொண்டி நொண்டி வந்தது. “அதை உற்றுப் பார்...!” என்றார் குருநாதர். உற்றுப் பார்க்கப்படும் போது காலிலே வீக்கம்.

நடக்க முடியாத நிலையில் மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீர் நிலைகள் இருக்கும் பக்கம் இருந்து பார்க்கின்றது. வறட்சியில் வேதனைக்காக அந்தத்  தண்ணீரைத் தான் குடிக்கின்றது.

குருநாதர் போகச் சொல்கிறார். அதை உற்றுப் பார்க்கும் பொழுது இரண்டு குச்சி யானை காலில் குத்தி வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் குச்சி ஒடிந்து போயிருக்கிறது. அதற்குள் சீழ் பிடித்திருக்கிறது.

என்னிடம் அந்த யானை காலைத் தூக்கிக் காட்டுகிறது. காட்டு யானை தான். வாயில் கடித்து அந்தக் குச்சியை எடுத்தேன். அப்படியே சலம் பொல... பொல... என்று வந்தது. இது நடந்த நிகழ்ச்சி.

மிருகங்கள் தாக்கும் உணர்ச்சிகள் பெற்றது தான். யானை மனிதனை அச்சத்தால் தான் அடிக்குமே தவிர மனிதனை அது நேசிக்கத் தான் செய்கின்றது. நாம் பேசாமல் போனால் ஒன்றும் செய்யாது.

ஆனால் சிலருடைய பயந்த நிலைகளைப் பார்த்தவுடன் அடிப்பான் என்று உணர்வுகள் கொண்டு நம்மை அடித்தேவிடும்.

யானையின் காலிலிருந்து வெளியில் வந்த சலம் ஒரு இரண்டு அல்லது மூன்று வாளி இருக்கும். பின் அதை நான் அழுத்தித் துடைத்து விட்டேன். அங்கிருக்கும் ஒரு பச்சிலையை எடுத்து வந்து நசுக்கிக் கொண்டு போனால் மறுபடியும் காலைத் தூக்கிக் கொடுக்கிறது. அந்தச் சாறை ஊற்றினேன்.

அங்கே ஒரு ஐந்தாறு நாள் இருந்தேன். “அங்கே இரு...!” என்று குருநாதர் சொன்னார். அப்போது அந்த யானையின் கால் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டு வந்தது.

நான் இந்த யானையிடம் வரப் போகும் போது வேறு யானைகள் விரட்ட வருகிறது. ஆனால் இதன் அருகிலே வரும் பொழுது அடிபட்ட யானை “என்ன சைகை செய்கிறது...!” என்று எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வு கொண்டு மற்ற யானைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

அந்த ஊர் எல்லையை விட்டு வெளியே வந்தேன். அந்த யானையைக் கழட்டி விடும் வரையிலும் என் கூடவே வந்தது. என்னைத் தனியே விட மாட்டேன் என்கிறது.

தும்பிக்கையில் என்னைத் தூக்குகிறது. என்னைத் தூக்கிக் கொண்டு வந்து நல்ல பாதையில் விட்டு விட்டுப் போகிறது. அதனுடைய அறிவு எப்படி இருக்கிறது...? என்று பாருங்கள். யானைக்குத் “இவன் தன்னைக் காத்தவன்” என்ற அறிவின் ஞானம் இருக்கின்றது.

ஒரு சமயம் திருப்பதியிலிருந்து கால்நடையாகத் திருத்தணிக்கு வந்தேன். திருத்தணிக்கு வரும் பாதையில் தண்ணீர் தாகமாக உள்ளதே என்று வயல் பக்கம் போனேன்.

அருகிலிருந்த ஒரு பம்புசெட்டில் தண்ணீர் குடித்தேன். உப்பாக இருந்ததால் குடிக்க முடியவில்லை. அதனால் திரும்பி அப்படியே வந்தேன்.

அப்போது ஒரு கொக்கு அந்த வயலுக்குள் உள்ளிருந்து என்னைக் கண்டவுடன் வெளியிலே வருகின்றது. அது வரை அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் காக்கும் உணர்வு கொண்டவன் என்று நிலைகள் அதற்குத்  தெரிகின்றது.

அதனிடம் நான் பழக்கமெல்லாம் செய்யவில்லை.  அங்கிருந்து தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

திருத்தணிக்கு வந்தவுடன் ஒருவரிடம் கொடுத்து கொக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உட்கார வைத்தேன். குருநாதர் அதற்கு ஆசி கொடுக்கச் சொல்கிறார். அதற்கு ஆசீர்வாதம் கொடுத்தவுடன் நன்றாகி விட்டது.

பின் பறந்து போய் விட்டது. பறக்க முடியாமல் இருந்த கொக்கைத் திருத்தணியில் பறக்க வைத்தேன்.

மனிதனுக்குண்டான நிலையும் மனிதனை அணுகி சில உயிரினங்கள் எந்தெந்த நிலைகளுக்கு வருகிறது என்ற நிலையும் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

இன்னொரு சமயம் காட்டிற்குள் நான் செல்லப்படும் பொழுது ஒரு செந்நாய் பன்றியினால் அடிபட்டுக் கால் நொண்டி வருகிறது.

செந்நாய்கள் பன்றிகளைப் பார்த்தால் ரொம்பத் தந்திரமாகப் பிடிக்கும். மாட்டையோ ஆட்டையோ அடித்துத் தின்றுவிடும். அது ரொம்ப தந்திரமாக வந்து பிடிக்கும்.

ஆனால் பன்றி முன்னாடி இருக்கும் தன் கொம்பைக் கொண்டு செந்நாயை அடித்தால் ஒரே அடியில் எலும்பெல்லாம் உடைந்து விடும். சதையைக் கிழித்துவிடும்.

அப்படிப் பன்றியிடம் அடிப்பட்ட ஒரு செந்நாயிற்கு என் வேஷ்டியைக் கிழித்துக் காலிலே சுற்றி அங்கிருக்கும் பச்சிலையை மருந்தாகப் போட்டேன். போடும் வரை பொறுமையாக இருந்தது.

அதற்கு வைத்தியம் செய்து பச்சிலையைப் போடும் வரை நான் என்ன என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டே இருந்தது. முடித்த பிறகு அது பாட்டுக்கு விலகிப் போகிறது.

மனிதனுக்குண்டான விசுவாசமும், மற்ற உயிரினங்களுக்குண்டான விசுவாசத்தையும் அங்கே அனுபவபூர்வமாகப் பார்த்தேன்.

இன்று நாட்டுக்குள் மனிதனுக்கு மனிதன் நல்ல குணத்தில் உதவி செய்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் என்ன ஆகிவிடுகிறது...?

அன்றைக்கு உதவி செய்தேன். இன்றைக்கு எனக்கே இடைஞ்சல் செய்கிறான். நான் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்…? என்று சொல்லக் கூடிய நிலைமை வந்துவிடுகிறது.

நண்பன் என்ற முறையில் அவன் சிரமப்படும் பொழுது உதவி செய்தாலும் கூட அவர் முன்னுக்கு வந்தவுடன் உதவி செய்தவரை முதலில் பள்ளத்தில் தள்ளி விடுவார். அப்பொழுது தான் நாம் பிழைக்க முடியும் என்ற இந்த அளவிற்கு மனிதர்களின் உணர்வு வளர்ந்து விட்டது. 

ஆனால் காட்டு விலங்குகளுக்கு ஒரு விசுவாசத்தில் உதவி செய்ததை அது மறக்கவில்லை. அதன் உணர்வு அதில் பதிந்து அதன் நிலைகளில்  இயக்குகிறது.

இதெல்லாம் காட்டுக்குள் சென்ற பொழுது இயற்கையின் உண்மை நிலைகளை யாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்.