ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2018

வலுவான சக்தியைப் பெருக்குவதற்காக "அகஸ்தியனின் உணர்வை உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம் - பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!"


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று அவர் இயற்கையின் உண்மைகளை அறிந்துணர்ந்ததைப் போல எனக்கும் அறியும் பழக்கத்தைக் கொண்டு வருகிறார்.
1.அவர் கூட எத்தனையோ பேர் பழகினார்கள்
2.இருந்தாலும் அவர் எனக்கு அந்த நிலைகளைக் காண்பித்தார்.
3.அதைத் தெரிந்து கொண்டேன். அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன்.
4.இப்பொழுது உங்களிடமும் பதிவு செய்கிறேன்.

அந்த மெய் உணர்வுகளைக் குருநாதர் வெளிப்படுத்தினார். நான் அங்கே காட்டிற்குள் இருந்து அனுபவபூர்வமாகப் பார்த்தேன். அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வைப் பெறுவதற்கு இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவு செய்த பிற்பாடு மீண்டும் நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் அறிவாக வந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே போய் விடலாம்.

1.அகஸ்தியன் எப்படித் துருவனானோ அந்தத் துருவத்தின் நிலைகள் கொண்டு நீங்களும் ஆவதற்கு உதவும்.
2.அவன் துருவனாகி திருமணமாகி எதை எதைச் செய்தானோ அந்த அறிவும் வரும்.
3.உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும் என்பதற்குத்தான் தான் பதிவு செய்கிறோம்.

வசிஷ்டர் பிரம்ம குரு. அதாவது... ஒரு நோயாளியைப் பார்த்து இப்படி ஆகிவிட்டானே...! என்று அதைக் கவர்ந்து அறியப்படும்போது அவரின் வேதனையை உணர்கின்றீர்கள். அது உங்கள் உடலில்  உருவாகிறது பிரம்ம குரு. (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி இணைந்து கொண்ட சக்தி என்று பொருள்)

பிரம்ம குருவாக இருந்து அந்தச் சக்தியை இயக்குவது யார்…? அந்த வேதனை பட்ட உணர்வு தான் நம்முடன் இணைந்து வாழுகின்றது. உடலாக மாறுகின்றது. அதன் குணம் தான் அங்கே வரும். இராமாயணத்தில் “வசிஷ்டர் - பிரம்ம குரு” என்று அவ்வளவு தெளிவாகக் காட்டுகிறார்கள்.

அதே போலத் தான் இப்போது நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகளை எப்படி அது ஒளியானது…? அதன் அறிவானது…? என்ற உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

கஷ்டம் என்று வரும் போது கஷ்டத்தை எண்ணாதபடி இத்தகைய நஞ்சான உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றானோ அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை அங்கே கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

நோயால் வாடுபவர்களின் துயரமோ அவன் படும் வேதனையோ நம்மிடம் வராதபடி இதைத் தடுத்து நிறுத்திவிட்டு
1.அந்த அகஸ்தியன் அருள் அந்த நோயாளிக்குக் கிடைக்கட்டும்...
2.அவர் பிணியிலிருந்து விடுபடட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.
3.ஆகவே இது பிறரைக் காக்கவும்
4..பிறரைக் காத்த உணர்வு உங்களைக் காக்கவும் இந்த இரண்டும் வேண்டும்.

ஏனென்றால் வழக்கமாக மற்றவர்களைக் காத்து விடுகிறீர்கள். அந்த உணர்வு வேகம் வந்தவுடன் (இருக்கும் பொழுது) கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள்.
1.ஆனால் உங்கள் நிலைமை தடுமாறும் போது
2.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்...
3.ஆண்டவன் என்னைச் சோதிக்கிறானே... இந்தத் தெய்வம் சோதிக்கிறதே...! என்று வேதனைப்பட்டு
4.அந்த வேதனையைத் தான் உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்…!

நல்லது என்று நாம் செய்தாலும் நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா... என்ற நிலைகள் இந்தத் தீமைகள் என்ன செய்யும்…? என்று அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அறிதல் வேண்டும்.

ஒரு இயந்திரத்தில் உலோகத்தைப் இணைத்தவுடன் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்கள்.

அப்பொழுது அதைத் தாங்கக்கூடிய சக்தி அங்கே வர வேண்டுமென்றால்
1.இந்த உலோகத்தோடு  இன்னொரு உலோகத்தை எப்படிச் சேர்த்தால்
2.அந்த அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கக்கூடிய சக்தியாக வரும் என்று
3.விஞ்ஞானி தன் சிந்தனையைக் கூட்டி அதைச் சரி செய்கிறான்.

அதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கடினமான உணர்வுகளின் தாக்குதல் வருகிறது...
1.வீட்டில் குடும்பத்திற்குள் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு வேதனை…
2.நான் உதவி செய்தேன்.. ஆனால் இப்போது எனக்கு எதிராகத் திருப்புகிறார்கள்.
3.நல்ல வழிகளை மற்றவர்களுக்குக் காட்டினேன் ஆனால் அவர்கள் இப்பொழுது என் தொழிலையே செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று
4.இப்படி இத்தனையும் பேசுகிறோம்.

இத்தகைய தாக்குதலான உணர்வுகள் நல்ல குணங்களை மாற்றிவிடாமல் இருக்க வலுவான சக்தியைக் கொண்டுவர வேண்டுமா இல்லையா…?

ஏனென்றால் எல்லாரும் நல்லவர்கள் தான். யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் பிறரைக் காத்தாலும் உங்களைக் காக்க ஒரு வலு வேண்டுமா இல்லையா...?

நல்லதை எண்ணிச் செய்து செய்து அடுத்தவர்கள் கஷ்டத்தைக் கேட்டுக் கேட்டு இந்த உணர்வுகள் உடலில் வரும் போது அது வளர்ந்து விடுகிறது. நம் நல்ல குணம் மறைந்து விடுகிறது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் பதிவு இருந்தால் தான் உங்களுக்குச் சரியான உதவி கிடைக்கும். அந்த ஞானிகளின் உணர்வுகள் இந்தக் காற்றில் இருக்கிறது. அதை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வினை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும் அகற்றிட முடியும்.

அந்த அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசம் செய்கின்றோம்.